Doctor Vikatan: என் வயது 35. கடந்த வருடம் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு எனக்கு அடிக்கடி தலை பாரமாக இருப்பதாகவும், நீர் கோத்தது போலவும் உணர்கிறேன். ஒற்றைத் தலைவலியும் வாந்தியும் வருகிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு ஏதேனும் நிரந்தர சிகிச்சை உண்டா?
- Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து.
சைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். தலையில் ஒரு பக்கம் வலி வரும். வாந்தி வரும். சத்தமோ, வெளிச்சமோகூட வலியை தீவிரப்படுத்தும். நிம்மதியாகத் தூங்கவோ, சாப்பிடவோ முடியாது. வாந்தி எடுத்தால்தான் நிம்மதியாக உணர முடியும்.
சித்த மருத்துவத்தில் இந்தப் பிரச்னைக்கு வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்தும் மருந்துகளும் உள்ளன. உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் உள்ளன.
மூலிகை இலைச்சாற்றை மூக்கில் சொட்டுகளாக விடுவது நசிய முறை எனப்படும். சுக்குத்தைலத்தை இரண்டு நாசித் துவாரங்களிலும் நசியமாக விடலாம். தும்பை இலைச்சாறு அல்லது நொச்சி இலைத் தைலத்தையும் தலா இரு சொட்டுகள் விடலாம்.
ஓமத்தை நன்கு இடித்து துணியில் மூட்டையாகக் கட்டி, அடிக்கடி அதை மோந்து பார்க்கலாம். ஓமவல்லி இலைகளைக் கசக்கி தலையில் வலி உள்ள இடங்களில் தேய்த்து விடலாம். அதையும் மோந்து பார்க்கலாம். இப்படிச் செய்யும்போது சைனஸ் பாதை சுத்தமாகி, வீக்கம் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சித்த மருந்துக் கடைகளில் நீர்க்கோவை மாத்திரை என கிடைக்கும். அதை வாங்கி, பால் அல்லது வெந்நீரில் இழைத்து நெற்றி, கன்னங்கள் என நீர்கோத்த பகுதிகளில் பற்று போல போடலாம். ஓமத்தை வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்து அரைத்து, பற்று போடலாம்.
வெற்றிலையில் தேங்காய் எண்ணெய் தடவி லேசாக வாட்டி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் போல கொடுக்கலாம். 10 வேப்பிலைகள், ஒரு நெல்லிக்காய், ஒரு துண்டு இஞ்சி, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம்.
ஓமவல்லி இலைகள் 5, மிளகு 10, பூண்டு 3- 4 பல் ஆகியவற்றை நீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். அதேபோல ஓமம், வெந்தயம் தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், இஞ்சி சிறு துண்டு ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.
இவற்றை எல்லாம் தாண்டி, மனம் அமைதியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். அதற்கு யோகா உதவும்.
யோகநித்ரா எனப்படும் சவாசனத்தை தினமும் இரு முறை செய்வது மைக்ரேன் பிரச்னையின் தீவிரத்தில் இருந்து காக்கும். தியானமும் மூச்சுப்பயிற்சியும்கூட பெரிய அளவில் உதவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-migraine-is-there-a-solution-in-siddha-medicine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக