திருச்சி மாவட்டம்!
திருச்சி மாவட்டத்தில் வெற்றிலை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. வெற்றிலையைப் பயன்படுத்தி ஏற்கெனவே மெளத்வாஷ் தயாரிக்கலாம் என்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதே வெற்றிலையைப் பயன்படுத்தி டூத் டேப்லட்டையும் (Betelvine Tooth Tablet) உருவாக்கலாம்.
வெற்றிலைத்தூள், பேக்கிங் சோடா, சைலிட்டால் (Xylitol) எனும் மாற்றுச் சர்க்கரை ஆகியவற்றைக்கொண்டு வெற்றிலை டூத் டேப்லட் தயாரிக்கலாம். வெற்றிலை டூத் டேப்லட்டைப் பயன்படுத்துவதால், பற்களின் எனாமல் (Enamel) பாதிக்கப்படாது என்பதோடு, ஈறுகளையும் காக்கும். வழக்கமாக பற்பசைகளில் சேர்க்கப்படும் `எஸ்.எல்.எஸ்’ என அழைக்கப்படும் சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium Lauryl Sulfate) எனும் வேதிப்பொருள், இதில் கலக்கப்படாததால் ஒவ்வாமையும் ஏற்படாது. குழந்தைகள் பல் துலக்கும்போது சில நேரங்களில் பற்பசையை விழுங்கிவிடுவார்கள். இதனால், செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும். ஆனால், வெற்றிலையிலிருந்து டூத் டேப்லட் தயாரிக்கப்படுவதால், தவறுதலாக டேப்லட்டை விழுங்கிவிட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது.
காலையில் எழுந்ததும் பல் துலக்க டூத் பேஸ்ட், மௌத்வாஷ் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தயங்குவோருக்கு மாற்றாக வெற்றிலை டூத் டேப்லட்டைத் தரலாம். இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும்போது, பாதுகாப்பு கெடுபிடிகளின்போது தடைகளும் இருக்காது. ஏனெனில், அமெரிக்காவின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிர்வாகம் (Transportation Security Administration - USA) இதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது. மேலும், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றுக்கு அதிக அளவில் இதன் பயன்பாடு தேவைப்படும் என்பதோடு, பெரிய அளவில் செலவினத்தையும் குறைத்து, சுற்றுச்சூழலையும் காப்பதாலும் இதற்கான சந்தை வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கும். எனவே, வெற்றிலை டூத் டேப்லட் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை திருச்சி மாவட்டத்தில் அமைக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் முசிறி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கொள்முதல் செய்து, வெற்றிலை டூத் டேப்லட்டை உருவாக்கி, 60 டேப்லட்டுகள்கொண்ட ஒரு பாட்டிலின் விலையை சுமார் 300 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, மார்க்கெட்டில் விற்பனை செய்தால் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டலாம்.
வெங்காயம் மாறுபட்ட நிறங்களில் காணப்படுவது ஏன் தெரியுமா... வெங்காயத்திலுள்ள குவார்செடின் (Quercetin) எனும் ஃபிளேவனாய்டுதான் (Flavonoid) அதற்குக் காரணம்! ஃபிளேவனாய்டு என்பது தனித்துவமான நிறம், சுவைகொண்ட மூலக்கூறு மட்டுமின்றி, மருத்துவப் பண்புகளையும் கொண்டிருக்கும். ஏற்கெனவே, வெங்காயத்தைப் பயன்படுத்தி குவார்செடின் கம்மீஸ் எனும் புராடக்ட்டை உருவாக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறோம். அந்தத் தொழிற்சாலையில் கம்மீஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெங்காயத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் வெங்காயத்தோலைப் பயன்படுத்தி நேச்சுரல் ஃபேப்ரிக் டை (Natural Fabric Dye) தயாரிக்கலாம்.
நீண்டகாலமாகவே பாரம்பர்ய முறைப்படி பல்வேறு வகையான தாவரங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களான இலைகள், பூக்கள், பழங்கள், கிழங்குகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நிறமிகள் சாயம் மற்றும் ஜவுளித்துறையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. உதாரணத்துக்கு மாவிலை, சாமந்திப் பூ, நாவற்பழம், மஞ்சள், பீட்ரூட் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நிறமிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவற்றை இயற்கைச் சாயங்கள் என்று வகைப்படுத்துகின்றனர். இவை கைத்தறி, பட்டு, தோல், பருத்தி உள்ளிட்ட ஆடைகளைச் சாயமேற்றப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சாயங்கள் செயற்கையாக உருவாக்கப்படும் சாயங்களைக் காட்டிலும் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானவை.
இயற்கையான பொருள்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறங்களை மோர்டார் (Mortor) ரசாயனங்களுடன் சேர்த்து நிறமூட்டுவார்கள். பொதுவாக, படிகாரம், ஃபெர்ரிக் சல்ஃபேட் (Ferric Sulfate), டின் உள்ளிட்டவற்றை மோர்டராகப் பயன்படுத்தப்படுகிறார்கள். இது நச்சுத்தன்மையற்றது, எளிதில் மக்கும் தன்மை உடையது. இவ்வளவு சிறப்புகள் இயற்கைச் சாயத்துக்கு இருப்பதால், வெங்காயத் தோலிலிருந்து, இளமஞ்சள், இளஞ்சிவப்பு வரையிலான பல்வேறு வகையிலான நிறங்களுக்கான சாயங்களை உருவாக்கலாம். அவற்றைப் பல்வேறு வகையான துணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் இதற்கான சாய உற்பத்தித் தொழிற்சாலையை திருச்சி மாவட்டத்தில் அமைக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் துறையூர், உப்பிலியாபுரம், புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7,000 ஏக்கர் பரப்பளவில் ஏக்கர் ஒன்றுக்கு தோராயமாக 26 டன் வீதம் (இரு போகம்) ஆண்டொன்றுக்கு 1,80,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டும் பெற்று, நேச்சுரல் ஃபேப்ரிக் டை தயாரிக்கலாம். ஃபேப்ரிக் டையை அதன் தரம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் சுமார் 300 ரூபாய் தொடங்கி, ஏறக்குறைய 3,000 வரை விலை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்து, ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை அள்ளலாம்.
(இன்னும் காண்போம்)
source https://www.vikatan.com/business/economy/kanavu-a-series-by-suresh-sambandam-episode-112-trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக