Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

Euro Tech - Eye Glasses: நீரோ மன்னனின் மரகதக் கல் கண்ணாடி முதல் சாமானியனின் பிளாஸ்டிக் லென்ஸ் வரை!

ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத்தையும், அது இன்று தொட்டுள்ள உயரத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்கவைக்கும் தாக்கங்களையும் இத்தொடரில் பார்க்கவிருக்கிறோம். அதில் இந்த வாரம் மூக்குக் கண்ணாடி (Eye Glasses).

அன்று

ஒரு காலத்தில் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பவர்களை எல்லாம் 'சோடா புட்டி' என்று கேலி செய்வார்கள். கோலி சோடா பாட்டிலின் அடிப்பகுதி அளவுக்குத் தடிமனாக இருந்த கண்ணாடியை மாட்டிக்கொண்டால் கண்கள் சிறுத்து முகமே வித்தியாசமாக மாறிவிடும். கண்ணாடி போட்டால் இந்திரன், கண்ணாடியைக் கழட்டினால் சந்திரன் எனக் கண்ணாடி அணிந்த எல்லாருக்குமே இரண்டு முகங்கள் உருவாகின. ஆனால் இன்று கண்பார்வை நன்றாகத் தெரிந்தாலும் கண்ணாடி போடுவதுதான் ஸ்டைல் என்று ஆகிவிட்டது.

Roman Emperor Nero watching Gladiator Matches

உலகைத் தெளிவாகப் பார்ப்பதற்குக் கண்ணாடியை நம்பியிருக்கும் அன்பர்கள் அனைவருமே ரோமானியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் தெளிவில்லாத ஒரு பொருளைப் பெரிதாக்கிப் பார்க்கக் கண்ணாடியைப் பயன்படுத்தலாம் என்று முதலில் கண்டுபிடித்தவர்கள் ரோமானியர்களே! ரோமானியப் பேரரசரான நீரோ மன்னன் கிளாடியேட்டர் விளையாட்டுகளைத் தெளிவாகப் பார்ப்பதற்காக பாலிஷ் செய்யப்பட்ட மரகதங்களைப் பயன்படுத்தினாராம். கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல பெவிலியனில் ஜாலியாக அமர்ந்துகொண்டு, கிளாடியேட்டரில் யார் யாரைப் போட்டுத் தள்ளியது போன்ற "ஸ்கோர்" விவரங்களை மரகத “கண்ணாடி” ஊடாகப் பார்த்துத் தெரிந்துகொண்டார் நீரோ மன்னன்.

அதற்கு அடுத்து செனேகா எனும் ஒரு பிரபல ரோமானிய நடிகர் புத்தகங்களைப் படிப்பதற்காக நீர் நிறைந்த கண்ணாடி கோளத்தைப் பூதக்கண்ணாடியாகப் பயன்படுத்தினார் என்கிறது வரலாறு. அதன் பின் பார்வையை மேம்படுத்த உதவும் கண்ணாடிகள் கி.பி 1000 வாக்கில் அதே ரோமானியர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. 'Reading Stone' எனப்படும் இவை ஒரு கண்ணாடிக் கோளம் போன்ற பூதக் கண்ணாடிகளை ஒத்து இருந்தது. அதனை வாசிக்கும் பொருளின் மேலே வைத்து, எழுத்துகளைப் பெரிதாக்கித் தெளிவாக்கிப் படித்தார்கள்.

ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒற்றைக் கண்ணால் எவ்வளவு நேரம்தான் பார்ப்பது என்று கடுப்பான இத்தாலியர்கள் இதை எப்படி மேலும் மெருகூட்டலாம் என்று யோசித்தபோது 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிசர்ஸ் கிளாஸ் (Scissors Glass) உருவானது. ஒரு Y- வடிவ சட்டத்தில் இரண்டு லென்ஸ்களை பொருத்தி உருவாக்கப்பட்ட இந்த சிசர்ஸ் கிளாசின் அடிப்பகுதியில் ஒரு மோதிரம் போன்ற வளையத்தை மாட்டி அதில் ஒரு ரிப்பனைக் கட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டார்கள். கொஞ்சம் பணக்காரர்கள் ரிப்பனுக்குப் பதிலாகத் தங்கச் சங்கிலியில் அணிந்துகொண்டார்கள்.

இப்படிக் கண்ணாடியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு அலைவதும் ஒரு கட்டத்தில் போரடிக்க, அதை எப்படி நேரடியாகக் கண்ணிலேயே பொருத்திப் பார்க்கலாம் என்று பலர் மூக்கின் மேல் விரலை வைத்து யோசித்த போது, மூக்கின் பாலத்தில் பேலன்ஸ் செய்து பொருத்தலாமே என்ற கில்லாடியான ஐடியா இத்தாலியைச் சேர்ந்த சால்வினோ டி ஆர்மேட் (Salvino D'Armate) என்பவருக்கு உதித்தது. கயிற்றின் மேல் அந்தரத்தில் நிற்கும் ஜிம்னாஸ்டிக் பெண் போல, மூக்கின் மேல் பேலன்ஸ் செய்து நிற்கும் லார்க்னெட் (Lorgnette) மற்றும் பின்ஸ்-நெஸ் (Pince-nez) எனப்படும் (பக்க கைகள் இல்லாத) லென்ஸ்கள் உருவாகின.

லார்க்னெட் (Lorgnette)
பின்ஸ்-நெஸ் (Pince-nez)

கைகளாலேயே செய்யப்பட்ட இந்தக் கண்ணாடிகள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தபடியால் பணக்காரர்களால் மட்டுமே அவற்றை வாங்க முடியும் என்ற நிலை அப்போது இருந்தது. ஆக, கொழுத்த பணக்காரர்கள் ஸ்டைலாக மூக்கின் மேல் கண்ணாடியை “வைத்துக்கொள்ள”, ஏழைகள் தொடர்ந்து கழுத்தில் தொங்கிய ரிப்பனோடு மல்லுக்கட்டினார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்தக் கண்ணாடி மூலம் தொலைதூரப் பொருள்கள் தெளிவாகத் தோன்றினாலும் அருகிலுள்ள பொருள்கள் மங்கலாகவே தெரிந்தன. ஆக, அதை எப்படிச் சரி செய்வது என்று மறுபடியும் யோசிக்கத் தொடங்கினர்.

“எல்லாத்தையும் இத்தாலிக்காரனே சிந்திச்சா அப்பறம் எனக்கு என்ன மரியாதை?” என்று எண்ணிய அமெரிக்கா, இம்முறை தானே களத்தில் குதித்தது. பெஞ்சமின் ஃபிராங்க்ளின் எனும் அமெரிக்கர் அருகிலுள்ள மற்றும் தொலைதூர பொருள்களை ஒரே நேரத்தில் ஒரே ஜோடி கண்ணாடி மூலமே பார்க்கக் கூடியவாறு பைஃபோகல் லென்ஸ்களைக் (Bifocal lenses) கண்டுபிடித்தார். அதாவது ஒரு லென்ஸைப் பாதியாகப் பிரித்து, மேல் பகுதி தூரத்தைப் பார்ப்பதற்கும், கீழ்ப் பகுதி அருகில் இருப்பதைப் பார்ப்பதற்கும் ஏதுவாக உருக்கவாக்கப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்பு, மூக்குக் கண்ணாடி தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை உண்டு பண்ணியது.

அதுவரை கை இல்லாமல் மூக்கின் மேல் ஏறி நின்று சர்க்கஸ் காட்டிய கண்ணாடிகளுக்கு 1727-ல் இரு கைகளைக் கொடுத்து காதை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வைத்தனர் ஐரோப்பியர். இது மூக்குக் கண்ணடிகளின் ஒட்டுமொத்த பரிணாமத்தையே மாற்றியமைத்து நவீன கண்ணாடிகளுக்கான முதல் முன்மாதிரியை அறிமுகப்படுத்தியது! தொழில் புரட்சி, அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு மற்றும் புத்தகங்களின் அதிகரிப்பு கண்ணாடிகளின் தேவையையும் கணிசமாக அதிகரித்தன. 18-ம் நூற்றாண்டு வரை செல்வந்தர்களுக்கு மட்டுமே சொந்தமான ஆடம்பர பொருளாக இருந்த கண்ணாடிகளைத் தொழில்துறை புரட்சியின் 'Mass Production' நடுத்தர மக்களுக்கும் சாத்தியமான ஒன்றாக மாற்றியது.

அதே காலகட்டத்தில் ஜோஹன்னஸ் கெப்லர் எனும் ஜெர்மன் விஞ்ஞானி இன்று பலரும் அவதிப்படும் 'Myopia' எனப்படும் கிட்டப்பார்வையைக் குழிவான லென்ஸ்கள் மூலம் சரி செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்தார். 1929ல், அமெரிக்காவின் சாம் ஃபாஸ்டர் என்பவர் 'Polarizing Filter'-களைப் பயன்படுத்தி சூரிய வெளிச்சத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கும் சன் கிளாஸை வடிவமைத்தார்.
Myopia

இன்று

அதிர்ஷ்டவசமாக, பளபளப்பான மரகதக் கற்கள் மூலம் கிளாடியேட்டர்களைப் பார்ப்பதிலிருந்து பல படிகள் முன்னேறி வந்துவிட்டோம். கையிலிருந்து மூக்குக்குச் சென்ற கண்ணாடிகள் இன்று மூக்கிலிருந்து பாய்ந்து கண்ணுக்குள்ளேயே சென்றுவிட்டன.

ஜெர்மனைச் சேர்ந்த கண் மருத்துவரான அடோல்ஃப் காஸ்டன் யூஜென் ஃபிக் (Adolf Gaston Eugen Fick) என்பவரால் 1887-இல் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கான்டாக்ட் லென்ஸ்கள், அதுவரை காதுவரை நீண்டிருந்த மூக்குக் கண்ணாடிகளைக் கண்களுக்குள் சுருக்கியது.

அடோல்ஃப் ஃபிக்கின் கண்டுபிடிப்புக்குப் பிறகு, பல விதமான, மேம்படுத்தப்பட்ட கான்டாக்ட் லென்ஸ் வடிவமைப்புகள் சந்தையில் தோன்றின. 1930-களில் கண்டுபிடிக்கப்பட்ட PMMA அல்லது Perspex/Plexiglas லென்ஸ்கள், 1936-ல் வில்லியம் ஃபைன்ப்ளூமின் 'Light and Convenient Plastic' லென்ஸ்கள் மற்றும் 1949-ல் கண்டுபிடிக்கப்பட்ட 'Corneal' லென்ஸ்கள் போன்றவை 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கான்டாக்ட் லென்ஸ்களில் ஏற்பட்ட சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களாகும்.

90-களில் மூக்குக் கண்ணாடிகள் வடிவத்திலும் நாகரீகத்திலும் அப்டேட் ஆகியது. அதுவரை தடித்த கோலி சோடா புட்டியைக் கண்ணுக்கு மாட்டியிருந்த 70ஸ் கிட்ஸ் கூட மெல்லிய (Thin) லேயர் கிலாஸுக்கு மாறினார்கள். நம்மூர் நடிகைகள் பச்சைக் கண்ணழகிகளாக மாறினார்கள். 'Rimless' எனப்பட்ட விளிம்பு இல்லாத கண்ணாடி அணிந்த ஆண்கள் கவர்ச்சியாகத் தோன்றினார்கள். 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஹாலிவுட் பிரபலங்களின் செல்வாக்கு சன் கிளாஸ்களை ஸ்டைல் மற்றும் நாகரீகத்தின் அடையாளமாக மாற்றியது.

இன்று, ஏனைய எல்லா கண்டுபிடிப்புகளையும் போல மூக்குக் கண்ணாடிகளும் பல மாற்றங்களைக் கடந்து டிஜிட்டல் உலகத்துக்குள் நுழைந்துவிட்டன. உயர் திறன் கொண்ட பிளாஸ்டிக்கில் தயாராகும் தற்போதைய மூக்குக் கண்ணாடிகளில் புற ஊதாக் கதிர்களை வடிகட்டும் திறனும் சேர்க்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பம் புற ஊதாக்கதிர்களை தடுத்து கண்களைப் பாதுகாக்கிறது. இத்தகைய கண்ணாடிகள் மெல்லியதாகவும், எடை குறைந்ததாகவும் அதே சமயம், நல்ல உறுதித்தன்மையுடனும் காணப்படுகின்றன. எளிதில் உடையாத, சிராய்ப்பு மற்றும் விரிசல்களையும் தாங்கும் சக்தி கொண்ட இவை வெவ்வேறு வடிவங்களில், அளவுகளில் என ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட முக அமைப்புக்கும் ஏற்றவாறு மெருகேறி விட்டன.

மூக்குக் கண்ணாடி
மூக்குக் கண்ணாடிகளின் கண்டுபிடிப்பு, உலகின் கண்ணுக்குத் தெரியாத ஆழத்தை ஆராயும் ஆசையை விஞ்ஞானிகளிடம் தூண்டியது. அதன் விளைவாக மைக்ரோஸ்கோப் நுண்ணோக்கிகள் பிறந்தன. நிர்வாணக் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உயிரினங்கள், செல்கள் மற்றும் கட்டமைப்புகளைக் கண்காணிக்கவும் அதுவரை காலமும் மனித அறிவிலிருந்து மறைக்கப்பட்ட முற்றிலும் புதிய நுண்ணிய உலகத்தைத் திறக்கவும் மைக்ரோஸ்கோப் நுண்ணோக்கிகள் உதவின.

இவை போலவே மூக்குக் கண்ணாடி வரலாற்றின் இன்னொரு முக்கியமான மைல்கள் ஆட்டோ-ஃபோகஸ் லென்ஸ்களின் கண்டுபிடிப்பு. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் தானாகவே பொருளைத் துல்லியமாக ஃபோகஸ் செய்யும் ஆட்டோ-ஃபோகஸ் லென்ஸ்கள் கேமராக்களுக்கு மட்டுமல்ல மனித கண்களுக்கும் ஆட்டோ ஃபோகஸ் செய்கின்றன. பொதுவாக 40 வயதைத் தாண்டியதும் மனிதனின் பார்வைத் திறன் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறது. ப்ரெஸ்பியோபியா (presbyopia) என்று அழைக்கப்படும் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய இவ்வகை ஆட்டோ ஃபோகஸ் கண்ணாடிகள் மிகப்பெரியளவில் இன்று உதவுகின்றன.

லேடஸ்ட்டாக, "டீப் ஆப்டிக்ஸ்" என்று அழைக்கப்படும் இஸ்ரேலிய நிறுவனம் உருவாக்கி வரும் 'ஓம்னிஃபோகல் லென்ஸ்கள்' (Omnifocal lenses), நிகழ் நேரத்தில் தங்கள் ஒளியியல் சக்தியை மாற்றும் திறனைக் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது நீங்கள் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்யாமலேயே தூரத்திலிருக்கும் பொருளையும், மிக அருகிலிருக்கும் பொருளையும் ஒரே நேரத்தில் மிகத் துல்லியமாகப் பார்க்கக் கூடிய அதி நவீன ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்ப லென்ஸ்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இவை தெளிவான உலகத்தைத் துல்லியமாகப் பார்க்க வயது ஒன்றும் தடையல்ல என்றும் நிரூபித்துவிட்டன.

அதே போல மூக்குக்கண்ணாடி வரலாற்றிலே மற்றுமொரு அட்டகாசமான அறிமுகம் என்க்ரோமா வண்ணக் குறைபாட்டுக் கண்ணாடிகள் (EnChroma Colorblind Glasses). வண்ணமயமான உலகின் பல்வேறு வண்ணங்களைப் பிரித்தறிந்து பார்க்க முடியாத துரதிர்ஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன இந்த என்க்ரோமா கண்ணாடிகள். இவை வண்ண மாறுபாட்டை அதிகரித்து நிறக் குறைபாடு உள்ளவர்களுக்கு நிறங்களை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன.

என்க்ரோமா வண்ணக் குறைபாட்டுக் கண்ணாடிகள் (EnChroma Colorblind Glasses)
சாதாரணமாக ஆரம்பித்த ஓர் எளிய கண்டுபிடிப்பு இன்று பிரபஞ்சத்தின் பிரமாண்டமான திரைச்சீலையை மனிதக் கண்களுக்குத் திறந்து வைத்துள்ளது. மூக்குக் கண்ணாடிகளின் கண்டுபிடிப்பு நமது கண்களை மட்டுமல்லாமல், உலகத்தின் மீதான பார்வையையும் விரிவுபடுத்தியது.

எதிர்காலத்தில் மூக்குக் கண்ணாடிகள் ஆக்மென்டட் ரியாலிட்டி (Augmented Reality), ஸ்மார்ட் சென்சார்கள் (Smart Sensors) மற்றும் அடேப்டிவ் ஆப்டிக்ஸ் (Adaptive Optics) ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நம் பார்வையை மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நமது புரிதலையும் மேம்படுத்தும் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தும் என்று நம்பலாம்!

- Euro Tech Loading...



source https://www.vikatan.com/science/inventions/euro-tech-the-brief-history-and-the-current-developments-of-the-eye-glasses

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக