நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் வசிக்கும் பள்ளி மாணவன் சினனத்துரை வீட்டுக்குள் புகுந்த சக மாணவர்கள் சிலர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அதைத் தடுத்த அவரின் தங்கைக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர்களின் தாத்தா கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி விலகாத நிலையில், நாங்குநேரி தொகுதிக்கு உள்பட்ட கீழநத்தம் வடக்கூர் பகுதியில் நேற்று (13-ம் தேதி) ஒரு கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ராஜாமணி என்ற 30 வயது இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது. தி.மு.க-வைச் சேர்ந்த அவர் கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராகவும் உள்ளார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவரை கொன்ற கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே மாணவர் சின்னதுரை வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதே பகுதியில் சில தினங்களுக்கு முன்பு யூடியூப் பார்த்து, சிறுவர்கள் சிலர் பெட்ரோல் குண்டு தயாரித்து வெடிக்கச் செய்தனர். அதை வீடியோ எடுத்து வெளியிட்டதால் அந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது. அதில் தொடர்புடைய மூன்று சிறுவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு சிறுவனையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதனிடையே, நேற்று நாங்குநேரி நம்பிநகரில் வசிக்கும் வானமாமலை என்பவரின் வீட்டின் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினர். அதில் வீட்டில் இருந்த பொருள்கள் தீக்கிரையாகின. பைக் உள்ளிட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டது. முன்விரோதம் கரணமாக இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஐந்து பிரிவுகள் வழக்குப் பதிவு செய்த நாங்குநேரி காவல்துறையினர், இருவரை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வன்முறைகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படும் அளவுக்கு வன்முறைகளும் கொலைச் சம்பவங்களும் நடப்பதாக பதற்றத்துடன் கூறும் மக்கள், நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் எட்டு கொலைகள் நடந்துள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதனால் நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவரும் வகையில் நேர்மையாகவும் திறமையாகவும் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. அத்துடன், பொதுமக்களிடம் நிலவும் சாதிய மனநிலையைப் போக்கி நாங்குநேரி பகுதியில் நடந்தது போன்ற சம்பவங்கள் தொடராமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
source https://www.vikatan.com/crime/violence-continues-in-nanguneri-and-people-living-nearby-are-afraid-of-it
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக