ஹங்கேரி தலைநகரமான புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம், உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார் நீரஜ் சோப்ரா. தகுதிச்சுற்றின் முடிவில் முதலிடத்திலிருந்தது நீரஜ்தான். அந்த இடத்தை இறுதிச்சுற்றிலும் அவர் விட்டுத்தருவதாக இல்லை. எப்போதும் தனது முதல் இரண்டு முயற்சிகளுக்குள் தனது சிறந்த த்ரோவைக் கொடுத்துவிடுவது நீரஜின் வழக்கம். இறுதிச்சுற்றிலும் அதுவே நடந்தது. முதல் முயற்சியில் சொதப்பினாலும் இரண்டாவது முயற்சியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதல் இடத்திற்கு முன்னேறி முன்னிலை பெற்றார். கடைசி வரை அந்தத் தூரத்தை யாராலும் கடக்க முடியவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் எறிந்து மிக அருகில் வந்தார். 86.67 மீட்டர் தூரம் எறிந்து செக் குடியரசைச் சேர்ந்த யாகூப் வட்லேய் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா வெல்லும் மூன்றாவது பதக்கம் இது. ஏற்கெனவே 2003-ல் நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றிருந்தார். கடந்த ஆண்டு வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு உலக தடகள அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த நீரஜ் இம்முறை தங்கத்தையும் வென்று சாதித்திருக்கிறார்.
இதன் மூலம், ஒரே நேரத்தில் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் என இரண்டு தொடர்களிலும் சாம்பியனாக இருக்கும் இரண்டாவது இந்தியர் ஆனார். இதற்கு முன்பு 2006-ல் சாம்பியன்ஷிப் தங்கத்தையும் 2008-ல் ஒலிம்பிக் தங்கத்தையும் வென்றிருந்தார் அபினவ் பிந்த்ரா. இதே போன்று இரண்டிலும் ஓரே நேரத்தில் சாம்பியனாக இருந்த மூன்றாவது ஈட்டி எறிதல் வீரராகிறார் நீரஜ் சோப்ரா. இதற்கு முன்பு செக் குடியரசைச் சேர்ந்த ஜேன் ஜெலஸ்னியும், நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரேஸ் தோர்கில்ட்சன் ஆகிய இருவர் மட்டுமே இதைச் செய்திருக்கின்றனர்.
மேலும் ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், டைமண்ட் லீக் என ஈட்டி எறிதலின் முக்கிய தொடர்கள் அனைத்திலும் தங்கம் வென்றவர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. 2016-ல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பிலும் அவர் தங்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கும் நீரஜ் அங்கும் இரண்டாவது முறையாகத் தங்கம் வென்று வரலாறு படைப்பார் என்ற பெரும் நம்பிக்கையை இந்த வெற்றி அனைவரிடத்திலும் விதைத்திருக்கிறது!
source https://sports.vikatan.com/athletics/neeraj-chopra-wins-gold-world-athletics-championships
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக