ஞாயிறு தோறுமாவது இட்லி, தோசை சமைத்துச் சாப்பிடும் தொழிலாளர்களுக்கு மத்தியில், மாதக்கணக்கில் அவற்றைச் சுவைக்க வழியில்லாத குடும்பங்களும் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் உரலும், அம்மிக் கல்லும், குழவியும் கம்பெனி கொடுத்தாலும், வாரந்தோறும் உரலைப் பயன்படுத்தும் குடும்பங்கள் குறைவே.
எஸ்டேட்டில் வறுமை கோரத்தாண்டவம் ஆடியதால், கணவன், மனைவி இருவரும் வேலைபார்த்தாக வேண்டிய கட்டாயச்சூழல் இருந்தது. வீட்டிலிருந்த திருமணமாகாத உடன்பிறப்புகள் / பிள்ளைகள் என எல்லோரையும் எஸ்டேட்டில் வேலைக்கு அனுப்பினார்கள்.
1989-ம் ஆண்டில் எஸ்டேட்டில் ஒருநாள் கூலி முப்பது ரூபாய். 1998-ம் ஆண்டு 53 ரூபாயும், 2006-ம் ஆண்டில் 77 ரூபாயும், இனி அங்கு வேலை வேண்டாம் என்று முடிவெடுத்த 2008-ம் ஆண்டில் அப்பாவுக்கு 90 ரூபாயும் வழங்கப்பட்டது. 29 ஆண்டுகள் நிரந்தரத் தொழிலாளியாக வேலைபார்த்த அப்பா தற்போது வாங்கும் மாத ஓய்வூதியம் ரூ.848/- மட்டுமே.
35 ஆண்டுகள் நிரந்தரத் தொழிலாளியாக வேலைபார்த்து, 07.11.09ல் விருப்ப ஓய்வு பெற்றார் அம்மா. அப்போது அவருக்கு தினக்கூலி ரூபாய் 109.30 பைசா. கடைசி நான்கு ஆண்டுகளும் சூப்பர்வைசராக வேலைபார்த்ததால், அம்மாவுக்கு சக தொழிலாளர்களை விட கூடுதலாக 10 ரூபாய் ஊதியம் இருந்தது. ஓய்வு பெற்றபோது அம்மாவுக்கு பணிக்கொடையாகக் கிடைத்த மொத்தத்தொகை ரூ.55,743/- மட்டுமே. தற்போது அவரது ஓய்வூதியம் மாதத்துக்கு ரூபாய் 1,034/- தான்.
1990களின் தொடக்கத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக இரண்டு முதல் நான்கு பிள்ளைகள் இருப்பார்கள். குடும்பமாய் வேலைபார்த்தாலும், கிடைக்கும் குறைந்த கூலியில் அத்தியாவசியத் தேவைகளைக்கூட முழுமையாக பூர்த்திசெய்ய இயலாது. படிக்கும் பிள்ளைகள் இருக்கும் வீட்டின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம். கடன் வாங்கியே தீரவேண்டும்.
எஸ்டேட் சம்பளத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் வருமானத்துக்கு வாய்ப்பில்லை. கிடைத்த சொற்ப வருமானத்தில் சேமிப்பு என்ற பேச்சுக்கே வீட்டில் இடமில்லாமல் போனது. ஒவ்வொரு முறையும் வட்டிக்குக் கடன் வாங்கி, அதைக் கொண்டுதான் படிப்புக்குச் செலவழித்தாக வேண்டும்.
எங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள். எஸ்டேட்டில் எங்களை வேலைக்கு விடாமல் நால்வரையும் படிக்க வைத்தனர் பெற்றோர். அதனால் கடன் இல்லாத மாதமே இருந்ததில்லை. வாங்கிய கடனை முழுமையாகத் திருப்பிக் கொடுக்காமல், மீண்டும் அதே தொழிலாளியிடம் கடன் கேட்கமுடியாது. கடன் வாங்க அம்மாவுடன் நானும் பலமுறை சென்றிருக்கிறேன்.
1995 மே மாதத்தில் ஒருநாள் சக தொழிலாளி ஒருவர், கடன் கொடுக்க மறுத்ததுடன், “நீங்கல்லாம் படிச்சி…" என்று ஏளனமாகப் பேசியது பசுமரத்து ஆணியாக நினைவில் உள்ளது. இருந்தாலும் அம்மாவின் சக தொழிலாளியான எஸ்தர் அத்தையின் செலவு காசை கம்பெனியிலிருந்து பல சமயங்களில் வாங்குவதே அம்மாதான். குடும்ப நிலையை கருத்தில் கொண்டு “பொட்டை” செல்லம்மா அத்தை, “கடை” மல்லிகா அத்தை, நேசமணி அண்ணன் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து கடன் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். சில சமயம் பக்கத்திலுள்ள ஊத்து எஸ்டேட்டுக்கு காட்டுவழியே நடந்து சென்று கடன் வாங்கி வருவார் அம்மா.
கிராம/நகரப் பகுதிகளில் இருப்பது போல ஒரு வேலை இல்லையென்றால் வேறொரு வேலை, ஒரு முதலாளி மறுத்தால் மற்றொருவரிடம் வேலைக்குச் செல்வது போன்ற வாய்ப்பே அங்கு இல்லை. அடர்ந்த வனத்துக்குள் இருக்கும் மாஞ்சோலைப் பகுதி முழுவதும் ஒரே கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நகரப்பகுதி அங்கிருந்து சுமார் 2 மணிநேர பேருந்து பயணத்தொலைவில் உள்ளது. அதனால் ஊதியம் வேண்டி எந்த வேலைசெய்ய வேண்டுமென்றாலும் கம்பெனியில் மட்டும்தான் செய்தாக முடியும். இருப்பினும் நிர்ப்பந்தம் காரணமாய் அதற்கான மாற்று வேலைகளை காலந்தோறும் தொழிலாளிகள் கண்டறிந்து கொண்டே இருந்தார்கள்.
எஸ்டேட்டின் அடிவாரத்தில் அமைந்துள்ள காரையார் அணைக்கட்டுப் பகுதியில் “காணிக்காரர்” பழங்குடியின மக்கள் அவர்களது வசிப்பிடத்தில் கப்பைக் (மரவள்ளி) கிழங்கு விளைவிப்பார்கள். 1970களின் தொடக்கத்தில் நாடெங்கும் நிலவிய பஞ்சத்தின் தாக்கம் எஸ்டேட்டிலும் பிரதிபலித்தது. அந்த பஞ்சகாலத்தில் காணி மக்களிடம் கப்பைக்கிழங்கு வாங்கி வந்து தங்கள் பசியைப் போக்கிக்கொண்டனர் தொழிலாளிகள்.
1980களின் பிற்பாதியில், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, "காணி"க்குடிக்குச் சென்று கப்பைக்கிழங்கு வாங்கிவந்து விற்பனை செய்ய முடிவெடுத்தார் அப்பா. காரையாறுக்குப் பக்கத்தில் இருக்கும் பாபநாசத்தில் இருந்து மாஞ்சோலை வழியாக குதிரைவெட்டிக்கு பேருந்து வந்துசென்ற காலமது. கப்பைக்கிழங்கை விலைக்கு வாங்கி, பேருந்தில் ஏற்றி, தனக்கு மட்டுமின்றி அதற்கும் லக்கேஜ் கட்டணம் கொடுத்து எஸ்டேட்டில் விற்பனை செய்து காசு பார்ப்பது என்பது அசலுக்கே மோசமாக முடியும் செயல். அதனால் அங்கு நடந்து சென்று வாங்கி வரவேண்டிய நிலைதான் இருந்தது.
எஸ்டேட்டில் கம்பெனி வேலை இல்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சில தொழிலாளிகளுடன் குதிரைவெட்டி வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து காட்டு வழியாக ஒற்றையடிப்பாதையில் சுமார் 2 மணிநேரம் நடந்து மலையிறங்கி, காணிக்குடியிருப்பு சென்றடைவர். எஸ்டேட் தொழிலாளிகள் என்பதால் இதர வியாபாரிகளுக்குக் கொடுக்கும் விலை போன்றல்லாமல், ஒரு கிலோ கப்பைக்கு ஒரு ரூபாய் என்ற குறைந்த விலையில் பழங்குடிகள் கொடுத்தார்கள். தங்களால் சுமந்துசெல்ல முடிந்த அளவான தலா 35 கிலோ கிழங்கை சாக்குப்பைகளில் வாங்கிக் கொண்டு, காட்டுப்பாதையில் மலை ஏறுவர். சுமைதூக்கி பழக்கம் இருந்த போதிலும், நேரம் ஆக ஆகத் திணறுவார்கள். ஒருவழியாக மூன்று மணிநேரம் நடந்து குதிரைவெட்டிக்கு வந்து, அங்கிருந்து சாயங்கால பேருந்தில் கிழங்குகளை ஏற்றி நாலுமுக்கு வந்துசேர்வார்கள்.
மறுநாள் எஸ்டேட் வேலைக்குப் போய்விட்டு சாயங்காலம் பப்பு கங்காணி முக்கில் வைத்து கிழங்குகளை விற்பனை செய்வர். வீட்டுத்தேவைக்குப் போக, மற்றவற்றை விற்று முடித்தாலும், எல்லாருமே கடனுக்குத்தான் வாங்குவார்கள். அந்தக்காசை முழுமையாக வசூலிக்க பெற்றோருக்குத் தெரியவில்லை. வசூலித்த காசும் அசலுக்கும் லக்கேஜுக்கும் கூட போதுமானதாக இல்லை. நாக்குத்தள்ள மூன்று மணிநேரம் சுமந்து வந்த அசதியை விட, அதற்கான காசு வசூலாகாமல் போனது அவர்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. இரண்டு மூன்று மாதங்களுடன் அந்த வேலையைக் கைவிட்டு விட்டார்கள்.
தேயிலைக்காட்டில் நாளொன்றுக்கு வரையறுக்கப்பட்ட 22 கிலோ தேயிலை பறித்தால் ஒருநாள் கூலி கிடைத்துவிடும். வெகு சிலரைத்தவிர மற்ற எல்லோரும் ஒருபோதும் 22 கிலோ தேயிலை பறித்ததோடு நிறுத்திக் கொள்வதில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிலோ அதிகமாக தேயிலை பறிப்பார்கள். அதிகமாகப் பறிக்கும் தேயிலைக்கு, கூடுதல் சம்பளம் கிடைக்கும். அதன் தொடர்ச்சியாய் அதிக போனஸ் கிடைக்கும். அந்தத் தொகையை அப்படியே கடன் வாங்கியவர்களிடம் கொடுத்து விடுவார்கள் பலர். வெகுசிலர் போனஸ் வாங்கிய காசில் நகை எடுப்பார்கள் அல்லது சேமித்து வைப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் பலருக்கும் படிக்கும் குழந்தைகள் இருக்காது அல்லது குழந்தைகளும் எஸ்டேட்டில் வேலை பார்த்துவந்திருப்பார்கள்.
1995க்குப் பிறகு எஸ்டேட்டில் ஒப்பந்த வேலைகள் அதிகரிக்கத் தொடங்கியது. கம்பெனியில் 8 மணிநேரம் வேலை முடிந்து, மாலை 4.30 – 6 மணி வரை ஒப்பந்த அடிப்படையில் வேலை இருக்கும். அப்போது தேயிலை பறித்தால், ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் கொடுப்பார்கள். ஆனால் கம்பெனி வேலையில் தேயிலை பறித்தால் அவ்வளவு தொகை கிடைக்காது. அதனால் மாதத்துக்கு 2 - 3 நாள்கள் விடுமுறை எடுத்து ஒப்பந்த வேலைக்குச் சென்றவர்களும் உண்டு. பெரும்பாலும் பெண் தொழிலாளர்களே அவ்வாறு வேலைக்குப் போவார்கள். கொழுந்து நிறைய கிடைக்கும் சமயத்தில், நாளொன்றுக்கு 100 முதல் 250 கிலோ வரை பறிப்பார்கள் சிலர். அப்படி நாளொன்றுக்கு சராசரியாக ரூபாய் 200 முதல் 500 வரை சம்பாதித்தார்கள்.
தேனீக்களில் ஒரு வகையான “கடந்தல்” தேயிலைச்செடிகளில் கட்டியிருக்கும் கூடுகளை அகற்றுதல், காட்டுச்செடியில் இருக்கும் புழுக்களை எடுத்தல், கம்போஸ்ட் உரம் தயாரிக்க இலைகளையும் மரக்கொப்புகளையும் வெட்டி சேகரித்தல், தேயிலைத் தொழிற்சாலைக்கு அடுப்பு எரிக்கத் தேவையான விறகுகளை வெட்டுதல், கட்டடங்கள் கட்ட கல் சேகரித்தல், தேயிலை நாற்றுகளை பாதுகாக்க மூங்கில் வகையில் ஒன்றான ‘ஈத்தை’களை வெட்டி அதனைத் தட்டிகளாக வேய்ந்து கொடுத்தல் என பல ஒப்பந்த வேலைகளுக்கும் செல்வர்.
தேயிலை பறிப்பது தவிர்த்த இதர ஒப்பந்த வேலைகள் பெரும்பாலும் ஆண்களுக்கானவைகளே. கம்பெனி வேலை போக, கூடுதல் வேலைபார்த்து கஷ்டப்பட்டு கிடைக்கும் வருவாயினை குடும்பச்சுமையினை குறைப்பதற்காகச் செலவிடாமல் பல ஆண்களும் சாராயத்துக்கே அழுதனர்.
20 வேலைநாள்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை உண்டு! அந்த விடுமுறையை ஆண்டில் ஒருமுறை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். அதனை “வருஷ லீவு” என்று சொல்லுவார்கள். அந்த ஆண்டில் அவர் பார்த்த வேலையின் அடிப்படையில் ஒருவருக்கு இந்த லீவுக்கான ஊதியம் கொடுக்கப்படும். தேயிலைக் காட்டில் வேலைபார்த்து அதிகமாக தேயிலை பறிக்கும் தொழிலாளிக்கு, கொஞ்சம் கூடுதலாக இந்த ஊதியம் கிடைக்கும். மழை, பனி, அட்டைக்கடி, ஏற்ற இறக்கமான காட்டில் சுமை தூக்குதல் போன்ற கஷ்டங்கள் இல்லாத தேயிலைத் தொழிற்சாலை வேலைக்குச்செல்ல போட்டிப் போடும் மக்களுக்கிடையே, இதுபோன்ற சில காரணங்களால், அம்மா போன்ற தொழிலாளர்கள் சிலர் தேயிலைக்காட்டுக்கு வேலைக்குப் போவதையே தேர்வு செய்வார்கள். வருஷ லீவு எடுத்து வீட்டில் ஓய்வு எடுக்காமல், பலரும் ஏலக்காய்/காப்பிப் பழம் பறிக்கும் வேலைகளைச் செய்வார்கள்.
நகரப் பகுதியில் கூடுதல் ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் இருப்பினும், தீண்டாமை வன்கொடுமைகள் இல்லாத எஸ்டேட்டில், தினமும் வேலை, குடியிருக்க லயன் வீடு, தண்ணீர் வசதி, மருத்துவத் தேவைக்கு எஸ்டேட் மருத்துவமனை போன்ற வசதிகள் இருந்ததால், கடன் வாங்கிக் கொண்டாவது, அங்கேயே தங்கியிருந்து, ஓய்வின்றி உழைத்து குடும்பத்தைக் கரைசேர்க்கவே போராடினார்கள் எம்மக்கள்.
படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார், அருண் பாஸ், காஞ்சனை சீனிவாசன், இராபர்ட் சந்திர குமார், நாலுமுக்கு வனராஜ், கோவை உதயகுமார்
source https://www.vikatan.com/features/human-stories/manjolai-estate-series-part-22-the-reason-behind-people-staying-in-the-estate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக