Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

Jailer:`ரஜினி சார் என்னைக் கட்டிப்பிடிச்சு பாராட்டினார்'- ஜெயிலர் பட அனுபவம் பகிரும் அறந்தாங்கி நிஷா

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் திரைப்படம் `ஜெயிலர்'. இந்தத் திரைப்படத்தில் விஜய் டிவியில் நமக்குப் பரிச்சயமான அறந்தாங்கி நிஷாவும் நடித்திருக்கிறார். இந்தப் பட புரொமோ வீடியோவிலேயே நிஷா வந்திருந்தார். `அடடே இவங்க `ஜெயிலர்'ல நடிக்கிறாங்களா?' என அவரின் ரசிகர்கள் எல்லாரும் கொண்டாட அவரிடமே இது தொடர்பாகப் பேசினோம்.
அறந்தாங்கி நிஷா

"நெல்சன் சாருடைய அசிஸ்டெண்ட் டைரக்டர் மணிதான் என்கிட்ட பேசினார். சாருடைய படம்... போலீஸ் கேரக்டர்னு சொன்னார். நெல்சன் சார்தான் 'கோலமாவு கோகிலா' படத்துல எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம் எனக்குன்னு ஒரு பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. ஆரம்பத்தில் இது ரஜினி சாருடைய படம்னு எனக்குத் தெரியாது. உங்க போட்டோவும் அனுப்பியிருக்கோம். சார் பார்த்துட்டு சொல்லுவாங்கன்னு மணி சொல்லியிருந்தார். அதுக்கப்புறம் சார் ஓகே சொல்லிட்டார்னு சொன்னாங்க. ரஜினி சாருடைய படம்னு தெரிஞ்சதும் சார்கூட காம்பினேஷன் இருக்குமா, நம்மள செலக்ட் பண்ணுவாங்களான்னுலாம் ரொம்ப பயமா இருந்துச்சு.

இதுவரைக்கும் நான் போன படங்கள் எல்லாமே ஷூட்டுக்குக் கூப்பிடுவாங்க. போய் நடிச்சிட்டு வருவேன், அவ்வளவுதான். இந்தப் படம் கமிட்டானதும் திடீர்னு ஒருநாள் போன் பண்ணி சன் டிவி ஆபிஸூக்கு அக்ரிமென்ட் போட வரச் சொன்னாங்க. அக்ரிமென்ட் எல்லாம் போடுறாங்கன்னா கண்டிப்பா நம்மள செலக்ட் பண்ணிட்டாங்கப்பான்னு சந்தோஷமா போய் அக்ரிமென்ட் சைன் பண்ணிட்டு வந்தேன். மறுபடியும் ஒரு நாள் லுக் டெஸ்ட்டிற்காக வாங்கன்னு சொன்னாங்க. நான் 87-ல் பிறந்தவள்தான். ஆனா, செட்டுல பசங்க எல்லாரும் அக்கா, அக்கான்னு கூப்பிட்டு நம்மள பெரிய ஆள் மாதிரி காட்டிட்டாங்க. நெல்சன் சார் என்னைப் பார்த்துட்டு டை அடிச்சிருக்கீங்களான்னு கேட்டார். இல்லைன்னு சொல்லவும் இந்த கேரக்டர் கொஞ்சம் மெச்சூர்டா வேணும்னு தலையில எண்ணெய் ஊற்றிப் பெரிய பொட்டெல்லாம் வச்சு என்னைக் கொஞ்சம் மாத்தினார்.

ஜெயிலர்

அதுக்கப்புறம் 2, 3 காஸ்டியூம்ல போட்டோஷூட் நடந்துச்சு. 'ஜெயிலர்' படத்துலதான் முதன்முதலா போட்டோஷூட்னா என்னன்னே தெரிஞ்சது. இந்த அனுபவமே இது எவ்ளோ பிரமாண்டமான படம் என்பதை உணர்த்திச்சு!" என்றவர் தொடர்ந்து பேசினார்.

"ரஜினி சாரை எப்போ மீட் பண்ணுவோம்னு எல்லார் மாதிரியும்தான் நானும் நினைச்சிட்டு இருந்தேன். ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷூட்டே ரஜினி சார் கூடத்தான்னு சொல்லவும் எனக்கு வயிறு கலக்கிடுச்சு. ரொம்ப நேரம் கேரவன்ல இருந்தேன். எனக்கு டயலாக் பேப்பர் எதுவும் வரல. சரி, சார் பேசுவாங்க நாம சும்மா நிற்கணும் போலன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஷாட் போறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அந்த மணி பையன் வந்து சீன் பேப்பரைக் கொடுத்தாங்க. அவங்க கொடுத்தப்ப மணி நைட்டு 12.45. பேப்பரை மட்டும் கொடுத்துட்டு போகாம, 'ரொம்ப டேக் எடுத்துக்காதீங்க. சார் வராங்க! மனப்பாடம் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டாங்க. நாம நல்லா பண்ணணும்னு கொஞ்சம் பதற்றம் இருந்துச்சு.

'ஜெயிலர்' படத்தில் அறந்தாங்கி நிஷா

கேரவன்ல இருந்து உள்ளே போகும்போதே டீம் எல்லாரையும் பார்த்துட்டேன். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மூலமா ஏற்கெனவே ரம்யா கிருஷ்ணன் மேம் எனக்குப் பழக்கம். அவங்களைப் பார்த்ததும், 'சார் நல்லா மோட்டிவேட் பண்ணுவாங்க. மணி 1 ஆச்சு. நல்லா பண்ணிடு!'ன்னு சொன்னாங்க. சொல்லிட்டுப் போய் நிற்கவும் ரஜினி சார் கிராஸ் பண்ணினாங்க. என்ன பேசுனா சரியா இருக்கும்னு தெரியல. டக்குன்னு 'வணக்கம் சார்'ன்னு சொன்னேன். 'வணக்கம்'ன்னு டக்குன்னு சொல்லிட்டே டயலாக் பேப்பரை எடுத்துப் படிச்சார். அது ஒரு எமோஷனல் சீன். அதனால செட்டே மொத்தமா இறுக்கமாத்தான் இருந்தது. அவர் நான் என்ன பேசப் போறேன்னு படிச்சிட்டு இருந்தார். டேக் சொன்ன உடனே அந்த சீனை ஒரே டேக்ல ஓகே பண்ணினேன்.

அந்த சீன் நான் பண்ணி முடிச்சதும் என்னைக் கட்டிப்பிடிச்சு பாராட்டினாரு. நடுராத்திரி ரெண்டு மணிக்கு என் புருஷனுக்கு போன் பண்ணி ரஜினி சார் என்னைக் கட்டிப் பிடிச்சு பாராட்டினாருன்னு சொன்னேன். அவருக்கெல்லாம் பயங்கர சந்தோஷம்.

'இந்த டயலாக் நான் பேசியிருந்தா 22 டேக் எடுத்திருப்பேன். நீங்க ஒரே டேக்ல சூப்பரா பண்ணீட்டீங்க!'ன்னு அவரைத் தாழ்த்திட்டு என்னை உயர்த்திப் பேசினார். எப்போதெல்லாம் என்னைப் பார்க்கிறாரோ அப்போதெல்லாம் இதைச் சொல்லிட்டே இருந்தார். இப்படி ஒரு பெரிய லெஜெண்டை சந்திச்சேன்னு எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

'ஜெயிலர்' ரஜினி

அவர் கூட மூணு நாள் ஒர்க் பண்ணினேன். அவ்ளோ பாசிட்டிவிட்டி, அவ்ளோ எனர்ஜி. அவர் செட்டுல குழந்தை மாதிரி விளையாடிட்டு இருப்பார். அவரெல்லாம் என்னை மாதிரி ஒருத்தரை மனசார பாராட்ட வேண்டிய அவசியமே இல்ல. நான் 6 சீன் நடிச்சேன். அதுல நாலுதான் படத்துல வரும்னு நினைக்கிறேன். ஏன்னா, 4 சீனுக்குத்தான் டப்பிங் பேசினேன். ஆனா, அதுவே பெரிய படத்துல நடிச்ச ஃபீல் கொடுத்துச்சு. 

நெல்சன் சாருடைய மிகப்பெரிய முயற்சின்னுதான் சொல்லணும். ரஜினி சாரை வயதான தோற்றத்திலேயே ரொம்ப லைவ் ஆக காட்டியிருக்கார். அதுவே எதார்த்தமா அழகா இருந்துச்சு. மாஸ் என்ட்ரி, மாஸ் டயலாக்னு படத்துல நிறைய சர்ப்ரைஸ் இருக்கு. கொஞ்சம் சாந்தமா அப்புறம் மாஸா நடிச்சிருக்கார். அது ரெண்டுமே மக்களுக்குப் பிடிக்கும்!" என்றார்.



source https://cinema.vikatan.com/kollywood/aranthangi-nisha-talks-about-the-jailer-movie-shooting-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக