பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகப் பெண்கள் குரல் எழுப்ப முடியாத வகையில், சமூகக் காரணிகளால் காலங்காலமாகவே அவர்களின் குரல்வளை அழுத்தப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் மீறி, ‘இவர் என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்’ என்று ஒரு பெண், புகார் கொடுப்பது... தைரியத்தின் உச்சமே. ஆனால், அப்படியான பெண்களுக்கு, உரிய நீதி கிடைக்கிறதா என்கிற கேள்விக்குக் கிடைக்கும் பதில்... கேள்விக்குறியாகவேதான் உள்ளது. இதற்குக் காரணம்... காவல்துறை, சட்டத்துறை, நீதித்துறை எல்லா வற்றுக்கும் மேலாக... அரசு என ஒட்டுமொத்த அமைப்புகளின் தோல்வியே!
கலாக்ஷேத்ராவின் நுண்கலைக் கல்லூரி மாணவிகள், தங்கள் ஆசிரியர்கள் நான்கு பேர் 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறி ஒரு மாதம் போராட்டம் நடத்தினர். நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய பின்னரே, காவல் நிலையத்தில் புகார்கள் பதிவிடப்பட்டன. ஹரிபத்மன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரும் தற்போது ஜாமீனில் வந்துவிட்டார். மற்ற மூவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அகில இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க-வின் எம்.பி-யுமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என வீராங்கனைகளும், வீரர்களும் டெல்லியில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வழக்கு பதிவிடப் பட்டது. ஆனால், பிரிஜ் பூஷன் முன்ஜாமீன் வாங்கிவிட்டார். நாடாளுமன்றக் கூட்டங்களிலும் அவையை அலங்கரிக்கிறார். அதுமட்டுமல்ல, `பாலியல் நோக்கமின்றி கட்டிப்பிடிப்பது குற்றமல்ல’ என்று நீதிமன்றத்தில் இப்போது வாதாடிக்கொண்டிருக்கிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி-யாக இருந்த முருகன் மீது, பெண் எஸ்.பி ஒருவர் 2018-ம் ஆண்டு பாலியல் ரீதியிலான புகார்களை ஆதாரத்துடன் அளித்தார். முருகன், ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால் பலகட்ட சட்ட நடை முறைகளுக்குப் பிறகு இப்போதுதான் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது.
2019-ல் இந்தியாவையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், அன்றைய ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரின் மீதுமே குற்றம் சுமத்தப்பட்டது. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோக்களை பதிவு செய்து மிரட்டி தொடர்ச்சியாக பலவந்தப்படுத்திய அந்த வழக்கில் 9 பேர் சிறையில் இருக்கிறார்கள். வழக்கு விசாரணை நீண்டு கொண்டே இருக்கிறது. தீர்ப்புதான் எப்போது என்று தெரியவில்லை.
இப்படி இன்னும் பல நூறு குற்றவாளிகளும் சட்டத்தையே கேடயமாக்கி, தொடர்ந்து தப்பித்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.
சட்ட நடவடிக்கைகளுக்கே நீண்ட போராட்டம் எனில், தண்டனை?
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
source https://www.vikatan.com/crime/gender/namakkulle-editorial-page-august-28-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக