கனவு - திருச்சி மாவட்டம்!
மரவள்ளிக் கிழங்கிலிருந்து உரித்தெடுக்கும் தோல் பெரும்பாலும் கழிவாகக் கருதி, அப்புறப்படுத்தப்படுகிறது. ஆனால், மரவள்ளிக்கிழங்கின் தோலைப் பயன்படுத்தி, கார்பன் இங்க் (Carbon Ink) தயாரிக்க முடியும். இது, அச்சுத் தொழில்கள், தொழில்நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்கள் ஆகியவற்றில் அச்சு, (Printing), ஒயிட்போர்டு மார்க்கர் (White Board Marker) எனப் வெவ்வேறு பயன்பாடுகளுக்கான கார்பன் இங்க் தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கின் தோலில் சுமார் 59 சதவிகித அளவுக்கு கார்பன் கன்டென்ட் உள்ளது. அதனைப் பயன்படுத்திக்கொண்டு, கார்ப்பனைசேஷன் (Carbonization) எனும் செயல்முறையின் வழியே கார்பன் இக்ங்கை உருவாக்கலாம்.
கார்பன் இங்க் தயாரிக்கும் செயல்முறை எளிதானது. முதலில் மரவள்ளிக்கிழங்கிலிருந்து அதன் தோலைப் பிரித்தெடுத்து, தண்ணீரில் நன்றாகக் கழுவிய பின்னர் உலரவைக்க வேண்டும். சுமார் 140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதனைச் சூடேற்றி, தோராயமாக 7 மணி நேரத்துக்கு ஓவனில் அப்படியே வைத்திருந்து, பின்னர் கார்பனைசேஷன் (Carbonization) எனும் முறையில் அதனை கார்பன் பவுடராக மாற்றிவிடலாம்.
இதனுடன் அரபிக் பிஸின் (Arabic Gum), ஆல்கஹால் (Alcohol) உள்ளிட்ட ரசாயனங்கள் சேர்த்து, கார்பன் இங்க்கை உருவாக்கலாம். இவற்றைக் கன்டெய்னர்களில் அடைத்து, வொய்ட்போர்டு மார்க்கர் உள்ளிட்ட பல பொருள்களாக, பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்குச் சுமார் 15 டன் வீதம் ஆண்டொன்றுக்குத் தோராயமாக 2,00,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இவற்றிலிருந்து மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன. அவற்றிடமிருந்து தோலை கொள்முதல் செய்து, கார்பன் இங்க் உருவாக்கலாம். சந்தையில் ஒரு மார்க்கரின் விலை 28 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தாலே ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் வருமான வாய்ப்பைப் பெறலாம்.
டிமென்ஷியா (Dementia) என்பது மறதி குறைபாட்டைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல். பெரும்பாலும் முதியோரைப் பாதிக்கும் இந்தக் குறைபாட்டுக்கு இதுவரை மருந்துகள் கண்டறியப்படவில்லை. இந்தியாவில் ஆண்டொன்றுக்குச் சுமார் ஒரு கோடி பேர் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது மருத்துவ உலகம். ‘இது பொதுவாகக் காணப்படும் ஒரு குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் செயல்பாடுகள் படிப்படியாகக் குறைந்து, பாதிக்கப்பட்ட நபர் நினைவாற்றலை மெல்ல மெல்ல இழப்பார்’ என்று சொல்கிறார்கள். மேலும், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர், மற்றொருவரின் உதவியை நாட வேண்டியிருக்கும்.
வரும் ஆண்டுகளில் மருத்துவ உலகம் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னைகளின் பட்டியலில் டிமென்ஷியா இடம்பெறும் என எச்சரிக்கிறது அல்சைமருக்கான உலக அமைப்பு!
டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாற்றல் பாதிக்கப்படுவதால், உடலின் தேவைக்கேற்ற போதுமான தண்ணீரைக் குடிக்க மறந்துவிடுவார்கள். நாளொன்றுக்கு ஒருவர் சுமார் 2 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் அருந்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துவரும் நிலையில், டிமென்ஷியா மறதி பாதிப்பினால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, பல உடல்நலச் சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும். இதற்கு தீர்வாக, ஜெல்லி டிராப்ஸ் மிட்டாய் (Jelly Drops Mittai) எனும் புராடக்டை உருவாக்கித் தரலாம்.
அதிக அளவு தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ் (Electrolytes), சர்க்கரை, ஜெல்லிங் ஏஜென்ட் (Gelling Agent) ஆகியவற்றின் கூட்டுக்கலவையே ஜெல்லி டிராப்ஸ் மிட்டாய். ஒரு ஜெல்லி டிராப் மிட்டாயில் சுமார் 12.5 மில்லி லிட்டர் அளவுக்குத் தண்ணீர் நிறைந்திருக்கிறது. இது மொத்த எடையில் தோராயமாக 95 சதவிகித அளவாகும். மீதமுள்ளவற்றில் எலக்ட்ரோலைட்ஸ், சர்க்கரை ஆகியவை 5 சதவிகிதம் இருக்கிறது. கூடுதல் ஊட்டச்சத்துகளைப் பெற ஜெல்லி டிராப்ஸ் மிட்டாயில் பழச்சாறு மற்றும் ஆரோக்கியமான உணவுகளான குளுக்கோஸ் போன்றவற்றைச் சேர்த்தும் தயாரிக்கலாம்.
நீரிழப்புக் குறைபாடுள்ளோர் மட்டுமின்றி, தினசரி அருந்தும் நீரின் அளவை அதிகரிக்க முயற்சிப்போர், நீர் அருந்துவதில் சிரமம் உள்ளவர்களுக்கும் ஜெல்லி டிராப்ஸ் மிட்டாய் பயனளிக்கக்கூடும். இதற்கான தொழிற்சாலையை திருச்சி மாவட்டத்தில் நிறுவலாம்.
இந்தியாவில் ஜெல்லி டிராப்ஸ் மிட்டாய்கள் இன்னும் தயாரிக்கப்படாததால், மிகப்பெரிய சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு ஜாரில் 55 ஜெல்லி டிராப்ஸ்களை நிரப்பி, அவற்றுக்கு 400 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்யும்போது ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய்க்கு வருமானம் பெறலாம்.
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்றொரு புகழ்பெற்ற பழமொழி தமிழில் உண்டு. இதை உலக அளவில் சரியாகக் கடைபிடிப்போர் ஜப்பானியர்கள். ஜப்பானில் 100 வயதைக் கடப்போரின் எண்ணிக்கை பிற நாடுகளைக் காட்டிலும் மிக அதிகம். அதற்குக் காரணம் உணவுகளை மெதுவாக உண்பது மட்டுமல்ல; வாழ்க்கை முறையும்தான். விளையாடுவதில் விருப்பமுள்ள ஜப்பானியர்கள், எந்தவொரு வேலையையும் கவனமாகவும் ஆழமாகவும் விரும்பியும் செய்வார்கள். சமைப்பதைக்கூட ஒரு சடங்குபோலச் செய்வார்கள். அவர்கள் தேநீர் அருந்துவதுகூட ஒரு சடங்குபோல இருக்கும். அப்படியான சடங்கு போன்ற சமைக்க உதவும் ஒன்றுதான் மெட்டல் பாப்கார்ன் கிட் (Metal popcorn kit). இந்த கிட் ஜப்பானில் பிரபலம். இதை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தலாம். அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் மெட்டல் பாப்கார்னுக்கான ஒரு பிராண்டை உருவாக்கி, அதற்கான தொழிற்சாலையை திருச்சி மாவட்டத்தில் நிறுவலாம்.
தியேட்டர்களில், பொரிக் கடைகளில் மட்டுமே கிடைக்கும் பாப்கார்னை இனி வீட்டிலேயே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல இன்ஸ்டன்ட்டாக மெட்டல் பாப்கார்ன் கிட்டைப் பயன்படுத்தி, சமைத்து உண்ணலாம். மெட்டல் பாப்கார்ன் கிட்டை பெரியோர்கள் மற்றும் பெரியோர்களிள் மேற்பார்வையில் சிறியவர்கள்கூட சமைக்கலாம். உலோகத்தால் செய்யப்பட்ட சிறிய பானையில் சோளம், எண்ணெய், சுவையூட்டி போன்றவற்றை இட்டு, அலுமினியத் தாள்கள் கொண்டு மூடப்பட்டிருக்கும். பானையை அடுப்பில் வைத்து சுமார் 3 நிமிடங்கள் சூடேற்றினால், சுவையான பாப்கார்ன் கிடைத்துவிடும். மெட்டல் பாப்கார்ன் கிட்டிலிருந்து பாப்கார்ன் உண்ட பின், எஞ்சும் கிட்டை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால், சுற்றுச்சூழலுக்கும் உகந்த புராடக்ட் என விளம்பரம் செய்து, பிரபலப்படுத்தலாம்.
திருச்சி மாவட்டத்தில், சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு ஏறக்குறைய 3 டன் வீதம் (இரு போகம்) ஆண்டொன்றுக்கு 1,20,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைப் பெற்று, மெட்டல் பாப்கார்ன் கிட் தயாரிக்கலாம். 20 கிராம் கொண்ட ஒரு கிட்டை சுமார் 50 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய்க்கு வருமானம் பெற முடிவதோடு, திருச்சி மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். சோளப்பொரி எனப்படும் பாப்கார்ன் (Popcorn), உடல் எடைக் குறைப்பு, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைச் சரிசெய்ய உதவுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளதால், அது விரும்பி உண்ணும் உணவுப் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது!
(இன்னும் காண்போம்)
source https://www.vikatan.com/business/economy/kanavu-a-series-by-suresh-sambandham-episode-109-trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக