Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

மதுரை மாநாடு: ரிக்‌ஷா ஓட்டும் அண்ணன்; திமுக கவுன்சிலருக்கே அழைப்பிதழ்! - `அலப்பறை கிளப்பும்’ அதிமுக

ஆகஸ்ட் 20 -ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநாடு இப்போதே களை கட்டத் தொடங்கிவிட்டது.

ரிக்சா ஓட்டும் செல்லூர் ராஜூ

இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்துவரும் நிலையில், மாநாட்டை மக்களிடம் பிரபலப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை அதிமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்கள்.

அதில் சிலர் செய்யும் வித்தியாசமான விளம்பரங்கள் மக்களை ஈர்த்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சமீபத்தில் மதுரை பஜாரில் ரிக்சா தொழிலாளர்களை மாநாட்டுக்கு அழைத்தவர், அப்படியே ரிக்சா ஓட்டி காண்பித்து கட்சியினரை குஷி படுத்தினார். அடுத்ததாக ஹெல்மெட் மாட்டிக்கொண்டு டூவீலரில் பயணம் செய்தும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மாநாட்டு விளம்பர வாகனம்

தன் தொகுதியிலுள்ள வீடுகளில் அழைப்பிதழ் கொடுத்தவர், அப்படியே மாநகராட்சி திமுக கவுன்சிலர் லக்சிகாஸ்ரீக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்ததெல்லாம் தனி காமெடி.

இவர் இப்படி என்றால், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பிதழுடன் மரக்கன்றுகளை வழங்கி பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

திமுக கவுன்சிலருக்கு அழைப்பிதழ்

அது மட்டுமின்றி மாநாட்டில் கலந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு ராணுவ அணிவகுப்பு போல வரவேற்பு அளிக்க டீசர்ட், பேன்ட் அணிந்து கொண்டு ஜெயலலிதா பேரவையினருக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவோ கோவில்பட்டியில் இரண்டு திரையரங்குகளில் ஜெயிலர் படத்தின் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி ரஜினி ரசிகர்களுக்கு வழங்கி அப்படியே மதுரை மாநாட்டுக்கு வரவேண்டுமென்று அழைப்பும் விடுத்துள்ளார்.

"இந்த நேரம் பார்த்து நம்ம ஹீரோ படம் ரீலீசாகவில்லையே, ஓசியில டிக்கெட் கிடைத்திருக்குமே' என்று மற்ற நடிகர்களின் ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு அலப்பறையை கிளப்புகிறார்களாம். .

இதுபோல் பல மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் மாநாட்டுக்கு ஆள் சேர்த்து வருகிறார்கள்.

இதற்கிடையே 'வருங்கா பாரதப் பிரதமர் எடப்பாடியாரே' என்று சிவகங்கை மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டி பாஜகவினருக்கு மட்டுமல்ல, அதிமுக-வினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் அதிமுக வழக்கறிஞர் நிர்வாகி மணலூர் மணிமாறன்.

போஸ்டர்

அதே நேரம், தென்மாவட்டத்துக்குள் நுழையாதே என்று சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். விமான நிலையம் அருகே மாநாடு நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு திமுக பிரமுகர் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், மாநாடு நடைபெறும் நாளில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி திமுக மாணவ, மருத்துவ இளைஞர் அணிகள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளதும் அதிமுக-வினரை டென்சனாக்கியுள்ளது. அதிமுக மாநாடு அச்சம் காரணமாகவே திமுக-வினர் போராட்டம் அறிவித்துள்ளனர் என்கிறார் எடப்பாடி!



source https://www.vikatan.com/humour-and-satire/politics/madurai-admk-conference-actions-bt-admk-cadres-are-in-high

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக