Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழக அரசின் முடிவும் நன்மைகளும்!

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு அவர் பேசுகையில், “சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, ஊபர், ஸ்விகி, சோமோட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம். நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று (ஆக 15) அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் ஸ்விகி, சோமோட்டோ போன்ற உணவு விநியோக சேவை, ரேபிடோ, ஊபர், ஓலா போன்ற டாக்ஸி சேவை தளங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நலனுக்காக ‘கிக்’என்கிற அமைப்பு இயங்கி வருகிறது. கர்நாடகா மாநில தேர்தலுக்கு, வாக்கு சேகரிக்க வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ‘கிக்’ பணியாளர்களை சந்தித்துடன், அவர்களுக்கான நலவாரியம் தொடங்கி மற்றும் சலுகைகள் ஏற்படுத்தப்படுமென உறுதியளித்தார். அதன்பின், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், இந்த பணியாளர்களின் நலனுக்காக நாட்டில் முதல் முறையாக, 4 லட்சம் ரூபாயில் விபத்து மற்றும் உயிர் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மூன்று வாரங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ‘கிக்’ பணியாளர்களுக்கு தனியான நலவாரியம் அமைக்கப்படுமென மசோதா நிறைவேற்றியுள்ளது.

கிக் பணியாளர்களுடன் ராகுல் காந்தி

ராஜஸ்தான் அரசின் இந்த முடிவு தேசிய அளவில் ‘கிக்’ பணியாளர்களின் நலனுக்கான முதல் முயற்சியாக கருதப்படுகிறது. இப்படியான நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், உணவு, இதர பொருட்கள் விநியோகம், டாக்ஸி சேவை பணியாளர்களுக்காக தனியான நலவாரியம் அமைக்கப்படுமென அறிவித்துள்ளார். ‘கிக்’ பணியாளர்கள் வகையில் பலதரப்பட்ட முறைசாரா பணியாளர்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் உணவு டெலிவரி தளங்களான ஸ்விக்கி, சோமோட்டோ, டன்சோ போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், மருந்து மற்றும் இதர பொருட்கள் விநியோகம்; ரேபிடோ, ஊபர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

food delivery

மத்திய அரசின் நிதி ஆயோக் 2022 ஜூன் மாதம் எடுத்த கணக்கெடுப்பின் படி, உணவு விநியோகம், டாக்ஸி சேவை, பகுதி நேரமாக சேவைகள் வழங்குவோர் என ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் மொத்தம் 77 லட்சம் பேர் ‘கிக்’ பணியாளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 2030-ம் ஆண்டுக்குள் ‘கிக்’ பணியாளர்களின் எண்ணிக்கை 2.35 கோடி பேராக உயரக்கூடும் என அறிவித்துள்ளது. 77 லட்சம் அளவுக்கான ‘கிக்’ பணியாளர்கள் இருந்தும், இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட இவ்வகை பணியாளர்கள் எந்த வகையிலும் முறைப்படுத்தப்படாத முறைசாரா பணியாளர்களாகவே உள்ளனர். உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம், டாக்ஸி பணி செய்யும் ‘கிக்’ பணியாளர்கள் தங்களை முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக மாற்றி, தொழிலாளர் நலத்துறையின் அடிப்படையான சலுகைகளையாவது வழங்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ‘கிக்’ அமைப்பினர் சிலர், “எங்கள் குறைகளை கேட்க இதுவரை எந்த அமைப்பும் இருந்ததில்லை. நலவாரியம் அமைப்பதால், எங்களுக்கான நியாயமான கூலி, தொடர்ச்சியான பணி மற்றும் திடீரென வேலை பறிப்பு சம்பவங்களை அரசு தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம். தற்போது, நாங்கள் நியாயமான கூலி கேட்டு போராட்டம் நடத்தினால் கூட, எங்கள் நிறுவனம் எங்கள் ‘ஐ.டியை பிளாக்’ செய்து எங்கள் பணியை பறிக்கின்றனர். ராஜஸ்தானை தொடர்ந்து தமிழக அரசும் ‘கிக்’ பணியாளர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படுமென அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

இந்திய அளவில் ‘கிக்’ பணியாளர்களின் குறைகள் கேட்டு சரிசெய்ய எந்த ஒரு அரசு அமைப்பும் இல்லை என்பது தான் வருத்தத்துக்குறியது. ஏனெனில் ‘கிக்’ பணியாளர்கள் அரசின் எந்தவொரு தொழிலாளர் நலவாரியத்திலும் பதிவு செய்யப்படாமல் உள்ளனர். இதனால், மற்ற சாதாரண பணியாளர்களுக்கு கிடைக்கும் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, உதவித்தொகை, ஓய்வூதியம் என எந்தவொரு அடிப்படை தொழிலாளர் நலச்சட்டத்தின் உரிமைகளும், சலுகைகளும் கிடைப்பதில்லை” என்றனர்.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசினோம், “தமிழகத்தில் உள்ள பல தொழிலாளர்களின் நலனை காக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்காக நலவாரியம் அமைப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது முதற்கட்ட அறிவிப்பு தான். இனி துறை சார்ந்த ஐ.ஏ.எஸ் அளவிலான அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, இந்தப்பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நலவாரியத்தின் செயல்பாடுகளை தீர்மானிப்போம்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/separate-welfare-board-for-delivery-employees-results-and-benefits-of-tamil-nadu-govt-annoncement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக