‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் புரியும் வண்ணம் விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
கடந்த அத்தியாயத்தில், ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் உள்ள பச்சிளங்குழந்தைகளில் ஏற்படும் ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாகக் கண்டோம். இந்த அத்தியாயத்தில், தாயிலிருந்து குழந்தைக்கு ஏற்படும் ஹெபடைடிஸ் பி (Hepatitis B) தொற்று பற்றி விரிவாகக் காணலாம்.
கேள்வி: டாக்டர், என்னுடைய கர்ப்ப காலத்தில், எனக்கு ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தை பிறந்த உடன், குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்படாமல் இருக்க ஒரு காலில் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியும், மற்றொரு காலில் ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியும் போட்டனர். தற்போது என் குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி பாதிப்பு ஏற்படவில்லை என்பதை எவ்வாறு உறுதி செய்வது?
தங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் முன் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று பற்றி விரிவாகப் பார்த்து விடலாம்...
ஹெபடைட்டிஸ் பி வைரஸால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உலக அளவில் சுமார் 30 கோடி பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வருடம்தோறும் 8 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பால் இறக்கின்றனர்.ஹெச்ஐவி வைரஸை போலவே ஹெபடைட்டிஸ் பி வைரஸும் ரத்தப் பரிமாற்றம், தொற்று பாதித்த ஊசியை பலர் பயன்படுத்துவது, பாதுகாப்பு இல்லாத உடலுறவு, தொற்று பாதித்த தாயிடம் இருந்து குழந்தைக்குத் தொற்று என பிறருக்குப் பரவுகிறது. எனினும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ஹெபடைட்டிஸ் பி தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று இருந்தால், குழந்தைக்கு பெரும்பாலும் பிரசவத்தின் போது நிகழும் தாய்-சேய் ரத்தக் கசிவினால், தாயின் ரத்ததுடன் தொடர்பு ஏற்பட்டு, குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்படுகிறது. தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று, கர்ப்பகாலத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்டிருந்தால், குழந்தைக்கு 10 சதவிகிதம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மாறாக, கர்ப்ப காலத்தின் இறுதி 3 மாதங்களிலோ அல்லது பிரசவ காலத்திற்கு மிக அருகிலோ ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்பட்டிருந்தால், குழந்தைக்கு தொற்று ஏற்பட 90% வாய்ப்பிருக்கிறது.
எனவே தான், கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டாயமாக ஹெபடைட்டிஸ் பி ஆன்டிஜென் (HBsAg) பரிசோதனை செய்கின்றனர். HBsAg பரிசோதனை பாசிடிவ் எனில், தாய்க்கு கல்லீரல் செயல்பாடு பரிசோதனை மற்றும் 28- 30-வது வார கர்ப்பகாலத்தில் ஹெபடைட்டிஸ் பி Viral load எவ்வளவு உள்ளது போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். வைரஸ் லோடு மிக அதிகமாக இருப்பின் தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி-க்கு எதிராக சிகிச்சை தொடங்கப்படும்.
ததாயிற்கு ஹெபடைட்டிஸ் பி இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், குழந்தை பிறந்தவுடன் உடனடியாக ஒரு காலில் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியும், மற்றொரு காலில் ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் (HBIG – Hepatitis B Immunoglobulin) ஊசியும் போட வேண்டும். குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று பெரும்பாலும் பிரசவத்தின்போது நிகழும் தாய்- சேய் ரத்தக்கசிவின் போது தான் ஏற்படுகிறது என்பதாலும், கர்ப்பகாலத்தில் நஞ்சுக்கொடி வழியாக ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று 4 சதவிகிதத்திற்கு கீழாகவே ஏற்படுகிறதென்பதால், ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுலின் பிறந்தவுடன் உடனடியாக போடப்பட்டுவிட்டால், குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்றை 95 சதவிகிதத்திற்கு குறைத்துவிடலாம்.
ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலினில் ஹெபடைட்டிஸ் பி வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளதால், குழந்தை பிறந்த 12 மணி நேரத்திற்குள் போடப்பட்டுவிட்டால், தாயின் ரத்தத்தில் இருந்து குழந்தைக்கு பிரசவ நேரத்தில் ஹெபடைட்டிஸ் பி கிருமி சென்றிருந்தால் கூட, அதனை அழித்தொழித்து விடும். ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியை முடிந்தவரை பிறந்த 12 மணி நேரத்திற்குள்ளும், அதிகபட்சமாக 48- 72 மணி நேரத்திற்குள்ளும் கட்டாயமாகப் போட வேண்டும். ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியின் விலை ரூ. 4,000- 6,000 வரை இருக்கும். ஆனால், இதை பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பல குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் கிடைக்காமல் போவதால், அவர்களுக்கு ஹெபடைட்டிஸ் பி பாதிப்பு ஏற்படுகிறது.
தற்போது, உங்கள் கேள்விக்கான விரிவான விடையை அறிந்திருப்பீர்கள். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும், பிற்க்கும்போது ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போடப்படுகிறது. அதன் பிறகு, ஐந்தடுப்பு ஊசியிலும் (Pentavalent vaccine) ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி இருப்பதால், குழந்தை பிறந்த 6,10,14 வாரங்களில் ஐந்தடுப்பு ஊசி வாயிலாக ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி குழந்தைக்கு கிடைக்கப் பெறுகிறது. தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி இருப்பின், ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி மற்றும் ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் கொடுக்கப்பட்ட குழந்தைகளில், 9- 18 மாதத்தில், ஹெபடைட்டிஸ் பி ஆன்டிஜென் (HBsAg) மற்றும் ஹெபடைட்டிஸ் பி ஆன்டிபாடி (Anti-HBs) பரிசோதனை செய்யப்படும்.
HBsAg பாசிடிவ் மற்றும் Anti-HBs நெகடிவ்வாக இருப்பின், குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோயுள்ளது உறுதிப்படுத்தப்படும். மாறாக, HBsAg நெகடிவ் மற்றும் Anti-HBs பாசிடிவ்வாக இருப்பின் ஆன்டிபாடியின் அளவை கண்டறிய வேண்டும்; Anti- HBs titre 10 mIU/ml மேல் இருந்தால் குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று இல்லை மாறாக தடுப்பூசிகளால் சிறந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதென அர்த்தம்; மாறாக, HBsAg நெகடிவ் மற்றும் Anti-HBs titre 10 mIU/ml கீழ் இருந்தால், ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று இல்லை மாறாக தடுப்பூசிகளால் சரியான அளவுநோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லையென அர்த்தம்.
எனவே, ஹெபடைட்டிஸ் பி வைரஸிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியூட்ட, குழந்தைக்கு மீண்டும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் போட வேண்டும். எனவே, இந்தப் பரிசோதனைகளை உங்கள் குழந்தைக்கு 9 மாதங்கள் ஆனவுடன், மருத்துவர் வழிகாட்டுதலில் தவறாமல் செய்துவிடுங்கள்.
இதைப்போல், ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று உள்ள நோயாளிகளிடம் இருந்து Needle Stick injury (தவறுதலாக ஊசி முனை கையிலோ/ நடக்கும் போது காலிலோ படலாம்) வழியாக ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கட்டாயமாக ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியின் மூன்று டோஸ்களை 0, 1 மற்றும் 6 மாதங்களில் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி 2007-ம் ஆண்டு முதல் தான் குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுவதால், அதற்கு முன் பிறந்தவர்கள் கூட தற்போது ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியின் மூன்று டோஸ்களை போட்டுக் கொள்ளலாம். ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி மூலம் குறைந்தது 20 வருடங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால், பூஸ்டர் டோஸ் தேவைப்படாது.
ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரே நாளில் 2,046 பேருக்கு (மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்) ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசிகள் போட்டு, புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி உலக சாதனை புரிந்துள்ளது. ஒரே நாளில் அதிகளவு ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசிகள் போடப்பட்ட மருத்துவ முகாம் என, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இச்சாதனையை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/health/kids/mother-to-child-transmission-of-hepatitis-b-virus-what-is-the-solution
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக