Doctor Vikatan: என் வயது 32. திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த நிலையில் விவாகரத்தாகி விட்டது. முதல் பிரசவமானதுமே குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டேன். இப்போது டைவர்ஸுக்கு பிறகு மறுமணம் செய்யும் முடிவில் இருக்கிறேன். அப்படிச் செய்துகொண்டால் எனக்கு குழந்தை பிறக்கச் செய்ய வழி உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
லேப்ராஸ்கோப்பிக் டியூபோபிளாஸ்டி அல்லது லேப்ராஸ்கோப்பிக் ரீகேனலைசேஷன் என்ற முறையில், ஏற்கெனவே கத்தரித்த கருக்குழாய்களை இணைக்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்தச் சிகிச்சையின் வெற்றி என்பது பல விஷயங்களைப் பொறுத்தது.
முதலில் செய்யப்பட்ட கருத்தடை சிகிச்சையின்போது வெட்டப்பட்ட கருக்குழாய்களின் நீளம், அமைப்பு ஆகியவை எப்படியிருக்கின்றன என்பது முதலில் பார்க்கப்பட வேண்டும். பிராக்ஸிமல் டியூப் மற்றும் டிஸ்ட்டல் டியூப் இரண்டும் போதுமான அளவு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், கருக்குழாய்களை இணைக்கிற இந்தச் சிகிச்சையின் வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கும்.
கருக்குழாய்களின் அமைப்பு சரியாக இருப்பதால் மட்டுமே இந்தச் சிகிச்சை 100 சதவிகிதம் வெற்றியைக் கொடுக்கும் என்று சொல்வதற்கில்லை. அது உங்களுடைய சினைப்பையில் முட்டைகளின் இருப்பு மற்றும் நீங்கள் திருமணம் செய்யப் போகிறவரின் விந்தணு எண்ணிக்கை ஆகியவற்றையும் பொறுத்தது.
சில நேரங்களில் இப்படி இணைக்கப்பட்ட கருக்குழாய்களில் கரு தங்கி வளரும் ரிஸ்க்கும் உண்டு. அதை 'எக்டோபிக் பிரெக்னென்சி' (Ectopic pregnancy) என்று சொல்வோம். அந்த ரிஸ்க் குறித்தும் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.
இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஏற்கெனவே குழந்தையை இழந்தவர்களுக்கு அல்லது வேறு காரணங்களுக்காக கருத்தடைக்குப் பிறகு மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இந்த நவீன சிகிச்சைகள் பெரும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. எனவே உங்கள் மருத்துவரை அணுகி இது குறித்து தெளிவு பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-remarriage-after-family-planning-is-there-a-chance-of-having-a-baby-again
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக