Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

மும்பை விமான நிலையத்தில் சிக்கிய உகாண்டா பிரஜை... வயிற்றில் ரூ.7.85 கோடி மதிப்பு கொகைன் மாத்திரைகள்

ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த சில பிரஜைகள் போதைப்பொருள்களை பல்வேறு வழிகளில் இந்தியாவுக்கு கடத்தி வருகின்றனர். அதில் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை விழுங்கி எடுத்து வருவது ஒரு வகையாகும். உகாண்டாவில் இருந்து வரும் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக மும்பை விமான நிலைய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உகாண்டாவில் இருந்து வந்த ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். இதில் அவரிடம் போதைப்பொருள் எதுவும் இல்லை. ஆனால் அவர்தான் போதைப்பொருள் எடுத்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை விழுங்கி இருப்பதை அந்த நபர் ஒப்புக்கொண்டார். உடனே அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்தனர். உடனே அவர் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவரது வயிற்றில் இருந்த போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகள் அனைத்தையும் வெளியில் எடுத்தனர். மொத்தம் 65 மாத்திரைகள் இருந்தது.

அதில் 785 கிராம் கொகைன் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.7.85 கோடியாகும். அவர் மீது போலீஸார் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மும்பையில் யாரிடம் அந்த போதைப்பொருளை டெலிவரி செய்வதற்காக எடுத்து வந்தார் என்பது குறித்தும், இக்கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் ஒன்றாம் தேதி மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கி எடுத்து வந்த போது பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/crime/cocaine-pills-worth-rs-785-crore-in-stomach-of-ugandan-national-caught-at-mumbai-airport

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக