Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

மின் மீட்டரை ஷார்ட் சர்க்யூட் செய்து கணக்கீட்டில் மோசடி; பொறியாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்!

திருப்பூரில் இயங்கி வரும் பின்னலாடை மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கான மின் பயன்பாட்டில் ஏராளமான குளறுபடிகள் நிலவுவதாக, அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் மின் பகிர்மான வட்டம், திருப்பூர் டவுன் தெற்கு மின்சார வாரியப் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட ஒரு தனியார் தொழிற்சாலை பயன்படுத்தப்பட்ட மின்சார அளவைக் குறைத்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில், விரிவான விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

திருப்பூர் மின்பகிர்மான மின் அளவீடு பிரிவு செயற்பொறியாளர் கலைச்செல்வி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது நேரடியாக சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்குச் சென்று கள ஆய்வு செய்தது. அதில், அந்த தொழிற்சாலை அதிகளவு மின்சாரத்தைப் பயன்படுத்தியதும், அதை மறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதற்காக தொழிற்சாலையில் இருந்த மின் மீட்டரை செயற்கையாக ஷார்ட் சர்க்யூட் செய்து அதை செயலிழப்பு செய்து கணக்கீடுகளில் மோசடி செய்தது தெரியவந்தது.

சஸ்பெண்ட்

இதையடுத்து, அந்த தனியார் தொழிற்சாலைக்கு ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், இந்த மோசடிக்கு திருப்பூர் பஜார் மின்வாரிய அலுவலக ஃபோர்மேன் பாபு, திருப்பூர் டவுன் தெற்கு மின்வாரிய அலுவலக ஃபோர்மேன் கணபதி, உதவி மின் பொறியாளர் சொக்கலிங்கம், வணிக ஆய்வாளர் பழனிசாமி, திருப்பூர் மின் பகிர்மான மின் அளவீடு பிரிவு உதவி மின் பொறியாளர் நிர்மல்குமார் ஆகிய 5 பேர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அபராதத் தொகையை வரும் 16-ம் தேதிக்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/crime/fraud-in-the-calculation-of-electricity-meter-5-persons-including-2-engineers-suspended

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக