Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

1 டிக்கெட் 2 தரிசனம், திருப்பதியில் சிறப்பு சேவை; மதுரை ஆவணித் திருவிழா - இந்த வார ஆலய அப்டேட்ஸ்!

திருப்பதி பாத யாத்திரைக்குக் குறைந்த கூட்டம்

திருமலை திருப்பதி இந்த வாரமும் பக்தர்கள் கூட்டம் வழக்கம் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் பாதயாத்திரையாக மலையேறிவரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவருகிறது. காரணம் மலைப்பாதையில் கரடி மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாகப் பரவும் செய்தி காரணமாக ஏராளமான பக்தர்கள் வாகனம் மூலம் நேரடியாக மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாத யாத்திரை செல்பவர்களுக்குச் சில கட்டுப்பாடுகளையும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமலை தரிசன டிக்கெட் முன்பதிவு தினங்கள்

வரும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெற இருப்பதால் தினமும் திருமலையில் லட்சக்கணக்கானவர்கள் குவிய வாய்ப்புள்ளது. இந்த நாள்களுக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் நாளை (22.8.23) அன்று நவம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்கள் முன்பதிவு தொடங்க இருக்கிறது.
திருமலை திருப்பதி

கல்யாண உற்சவம், ஊஞ்சல், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய டிக்கெட்களுக்கான முன்பதிவு நாளை (22.8.23) காலை 10 மணிக்கு தொடங்கும். நவம்பர் மாத அங்கப்பிரதட்சிணத்துக்கான டோக்கன்கள் முன்பதிவு 23.8.23 அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும்.

ஶ்ரீவாரி டிரஸ்ட் கோட்டாவுக்கான முன்பதிவு 23 ம் தேதி காலை 11 மணிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான தரிசன டிக்கெட்கள் அன்று மாலை 3 மணிக்கும் வெளியாகும். அதேபோன்று 300 ரூபாய சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான முன்பதிவு 24.8.23 அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும்.

அதேபோன்று திருமலை திருப்பதியில் நவம்பர் மாதம் தங்குவதற்கான முன்பதிவு வரும் 25 ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

இவை அனைத்துக்குமான முன்பதிவுகளை https://tirupatibalaji.ap.gov.in என்கிற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

1 டிக்கெட் 2 தரிசனம் - திருப்பதியில் அபூர்வசேவை

திருப்பதி திருமலையில் ஆண்டுதோறும் சுவாமிக்குப் புஷ்ப யாகம் நடைபெறும். சுமார் 8 டன்கள் மலர்கள் கொண்டு நடைபெறும் இந்த சேவையை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. இந்த சேவையை தரிசனம் செய்யும் பக்தர்கள் வைபவத்தன்று காலை 9 மணிக்கு கல்யாண உற்சவ மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். உற்சவர் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெறும்.

சுமார் 8 டன் மலர்கள் சுவாமிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையுடன் மந்திர கோஷங்கள் நடைபெறும். சுமார் 7 மணி நேரம் நாம் அமர்ந்து தரிசனம் செய்யும் வாய்ப்பு. இந்த சேவையின் மற்றுமொரு சிறப்பு இரண்டு தரிசனங்கள்.

9 மணிக்குத் தொடங்கும் இந்த சேவையின் முதல் பாதி சுமார் 11.30 மணி அளவில் முடிவடைந்து ஒரு பிரேக் விடப்படும். அப்போது ஒருமுறை சாமி தரிசனமும் பிற்பகலில் சேவை முடிவுற்றபின் 5 மணி அளவில் மற்றொருமுறையும் நாம் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவோம். ஒரே நாளில் இரண்டு தரிசனம் என்பது திருமலையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லாத அபூர்வம்.

திருமலை திருப்பதி

அப்படியிருக்க அதற்கு வகை செய்யும் இந்த புஷ்ப யாக சேவையில் பங்கு கொள்வது மிகவும் விசேஷம். இந்த ஆண்டு புஷ்ப யாகம் நவம்பர் 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட்கள் எப்போது வழங்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை அது நவம்பர் மாத சேவை டிக்கெட்கள் வெளியாகும் நாளையே வெளியாகவும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை அப்படி வெளியானால் பக்தர்கள் தவறவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தகவலை இந்த வார அப்டேட்டோடு தெரிவிக்கிறோம். மொத்தம் 800 டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்படும். ஒரு ஆதார் லாகினுக்கு ஒரு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நாளை வெளியாகவில்லை என்றால் பின்பு எப்போது வெளியிடப்படும் என்கிற தகவல் தேவஸ்தானம் வெளியிட்ட உடன் தவறாமல் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா என்று அழைக்கப்படும் திருவிளையாடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் மாணிக்கம் விற்ற திருவிளையாடல், தருமிக்குப் பொற்கிழி அளித்த திருவிளையாடல், உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல், பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல், சுவாமி பட்டாபிஷேகம், நரியைப் பரியாக்கிய திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் ஆகியன நடைபெற உள்ளன.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

ஶ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. காலையில் அபிஷேகமும், மாலையில் ஊஞ்சல் சேவையும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (27.8.23) அன்று சர்வ ஏகாதசியை முன்னிட்டு ரெங்கமன்னாரும் ஆண்டாளும் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருள்வார்கள்.

திருத்தணி

25-ம் தேதி முருகப்பெருமான் கிளி வாகன சேவையில் எழுந்தருள்வார்.

வாஸ்துநாள்

இந்த வாரம் புதன்கிழமை (23.8.23) வாஸ்துநாள். இந்த நாளில் வாஸ்துபூஜை செய்ய காலை 7.23 முதல் 7.59 வரை உகந்த நேரம்.



source https://www.vikatan.com/spiritual/temples/weekly-temple-updates-important-events-to-note-from-tirupati-madurai-and-srivilliputhur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக