Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

உ.பி: `என்னைச் சுட்டுவிடாதீர்கள்!’ - 6 மாதமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீஸில் திடீர் சரண்டர்!

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு, புல்டோசர் பாலிடிக்ஸ் மற்றும் என்கவுன்டர் கலாசாரம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்கிறார்கள். யோகியின் ஆட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 183 குற்றாவளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

குற்றவாளி சரண்டர் - உத்தரப்பிரதேசம்

இவ்வாறிருக்க, கொள்ளை வழக்கில் 6 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளியொருவர், நேற்று முன்தினம் பதாகையுடன், `என்னைச் சுட்டுவிடாதீர்கள்' என போலீஸில் சரணடைந்திருக்கிறார்.

முன்னதாக, மஹுலி கோரி கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜித் சவுகான் என்பவர், கடந்த பிப்ரவரி 20-ம் தேதி கல்லூரியிலிருந்து பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பிப்ராஹி பாலம் அருகே இரண்டு பேர் தன்னைத் தடுத்து நிறுத்தி, துப்பாக்கி முனையில் பைக், செல்போன், பர்ஸ் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

அதையடுத்து போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்ததில், அங்கித் வர்மா உட்பட இரண்டு பேர் இதில் ஈடுபட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் அங்கித் வர்மாவைக் கைதுசெய்தால், இருபதாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

குற்றவாளி சரண்டர்

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த அங்கித் வர்மா, செவ்வாய் கிழமையன்று சாபியா காவல் நிலையத்தில் `நான் சரணடைய வந்திருக்கிறேன். என்னைச் சுடாதீர்கள்' என்று கத்தியபடி, அதே வாசகத்தை எழுதியிருக்கும் பதாகையுடன் போலீஸார் முன்னிலையில் சரணடைந்திருக்கிறார்.

இதுகுறித்து நேற்று பேசிய அதிகாரி நவீனா சுக்லா, ``போலீஸார் மீதான பயத்தின் விளைவாக குற்றவாளிகள் இவ்வாறு சரணடைகிறார்கள்" என்று தெரிவித்தார். அதோடு, `முதல்வர் யோகி இங்கு வருவதற்கு முன்பாகவே குற்றவாளி சரணடைந்தது பெரிய சாதனை' என்று போலீஸார் கூறிவருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/do-not-shoot-me-6-months-abscond-accused-surrendered-police-with-placard

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக