தமிழகத்தில் ரெட் ஜெயின்ட் மூவீஸ் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் இயக்குனர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், `எங்கள் நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதுபோல ஒரு ஆடியோ பரவிக்கொண்டிருக்கிறது. அந்த ஆடியோவில் கூறப்படும் பெயர் கொண்டவர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த டில்லிபாபு, அனிஷ், ஹரிஷ், மஞ்சுநாதன், சிதம்பரம், மணிகண்டன், ராமதாஸ் உள்ளிட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், "கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நெல் வியாபாரி வெங்கடேஷ் என்பவர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஹரிஷ், அனிஷ் ஆகியோரிடமிருந்து சுமார் 25 லட்சம் ரூபாய்க் கடனாகப் பெற்றிருக்கிறார்கள்.
வாங்கிய கடனை நீண்ட நாள்களாகியும் திருப்பி தரவில்லை. பணம் குறித்து கேள்விக்கும் சரியான பதில் இல்லை. இதனையடுத்து, மஞ்சுநாதன் என்பவரின் உதவியுடன் திருவண்ணாமலையைச் சேர்ந்த டில்லி பாபுவுடன் தங்களின் பணத்தை வசூல் செய்துதரச் சொல்லி உதவு கேட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, டில்லி பாபு வெங்கடேஷை தொடர்புகொண்டு நான் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். ஹரிஷ், அனிஷிடம் வாங்கிய பணத்தை உடனடியாக தரவேண்டும் என்று மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்திய ஏழு பேரையும் நுங்கம்பாக்கம் பகுதி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
source https://www.vikatan.com/crime/police-have-arrested-seven-people-for-threatening-and-miss-use-of-red-giant-company-name
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக