மரபு ரீதியாக மட்டுமன்றி முறையற்ற வாழ்வியல் காரணமாகவும் பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகிறது. இன்றைக்கு செல்போன், டேப்லெட் போன்ற கேட்ஜெட்டுகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இப்படியான சூழலில் பார்வைத்திறனை மேம்படுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடுவதன் வழியே அக்குறைபாடு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். உணவு முறைகளைக் கொண்டு எப்படி பார்வைத்திறனை மேம்படுத்தலாம் என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் வசுமதி…
``நமது கண்களை கேமரா என வைத்துக்கொண்டால், அதன் ஃபிலிம் ரோல்தான் விழித்திரை (Retina). இந்த விழித்திரைதான் பார்வைத்திறனுக்கு மிக முக்கியமானது என்பதால், விழித்திரைக்குத் தேவையான உணவுகளைப் பார்ப்போம்.
வைட்டமின் ஏ அடங்கிய உணவுகள் அனைத்தும் விழித்திரைக்கு நல்லது. பளிச்சிடும் நிறத்தில் இருக்கும் பழங்கள் காய்கறிகள் அனைத்திலும் வைட்டமின் ஏ அடங்கியிருக்கும்.
உதாரணத்துக்கு கேரட், தக்காளி, குடை மிளகாய், பீட்ரூட் போன்ற காய்கறிகளிலும்... மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம் ஆகிய பழங்களிலும் வைட்டமின் ஏ சத்துகள் நிரம்பியிருக்கும்.
கீரை வகைகள் என்று பார்த்தால் பொன்னாங்கன்னி கீரை பார்வைத்திறனுக்கு மிகவும் நல்லது. அக்கீரையின் மகத்துவம் நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. ஆக இதுபோன்ற வைட்டமின் ஏ நிரம்பியிருக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
குங்குமப்பூ பார்வைத்திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. அதைப் பாலில் கலந்து குடிக்கலாம்.
மீன் வகைகளில் ஒமேகா 3 இருப்பதால் அது கண்களுக்கு நல்லது. அவற்றில் குறிப்பாக சாலமன் வகை மீன் இன்னும் சிறந்தது. சைவம் சாப்பிடுகிறவர்கள் மீனுக்குப் பதிலாக ஃப்ளாக் சீட்ஸ் சாப்பிடலாம். இதிலும் ஒமேகா 3 மற்றும் ஃபேட்டி ஆசிட்டுகள் இருக்கின்றன.
கொட்டை வகைகளில் பாதாம், வால்நட் ஆகியவற்றில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கண் வறட்சிக்கு நல்லது. பார்வைத் திறன் நன்றாக இருக்க இதுபோன்ற ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பழக்கம் அத்தியாவசியமானது. அதேபோல், உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் மிக முக்கியம்.
வைட்டமின் ஏ-வைப் போன்று வைட்டமின் டி சத்தும் பார்வைத்திறனுக்குத் தேவையானது. இளவெயிலில் கொஞ்ச நேரம் உலவுவதன் மூலம் நமக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கப்பெறும். வயதானவர்களுக்கு மாகுலர் டிஜெனரேசன் (Macular degeneration) என்கிற பிரச்னை வரும். இப்பிரச்னைக்கு ஆளாகும்போது விழித்திரையின் மையம் பாதிக்கப்பட்டு பார்வை மங்கிப்போய்விடும். கண்கள் வறட்சியாக இருக்கும்.
வைட்டமின் ஏ-யின் உயிர் வடிவமான (Bio form) ஆன லுடின் (Lutein) மற்றும் சியாசாந்தின் (zeaxanthin) ஆகியவை குறைவதாலேயே மாகுலர் டிஜெனரேசன் பிரச்னை ஏற்படுகிறது. குங்குமப்பூ மற்றும் மேற்சொன்ன வைட்டமின் ஏ மிகுந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் வயதானாலும் பார்வைத் திறனைப் பாதுகாக்க முடியும்” என்கிறார் வசுமதி.
source https://www.vikatan.com/health/diet/how-to-maintain-eye-health-by-foods
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக