கடந்த 4-ம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் தொகுதியில் தனது பாதயாத்திரையைத் தொடங்கிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 5-ம் தேதி மதுரை வடக்கு தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
மேலூரில் அண்ணாமலையை வரவேற்க அழைத்து வந்த ஜல்லிக்கட்டுக்காளை திமிறி கலங்கடிக்கச் செய்ததால், அது போன்ற ஏடாகூடமான வரவேற்புகளை தவிர்க்க கட்சியினருக்கு கட்டளை இடப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அமைச்சர் பி.மூர்த்தியின் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடையில் அண்ணாமலை பேசும்போது, "அமைச்சர் மூர்த்தி செய்யாத ஊழலே இல்லை, ட்ரான்ஸ்ஃபருக்குப் பணம் கேட்கிறார், விஞ்ஞான முறையில் பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் செய்கிறார். தன் மகன் திருமணத்துக்குச் செலவுசெய்த தொகையில் மூடியுள்ள சர்க்கரை ஆலையைச் செயல்படுத்திருக்கலாம். தி.மு.க ஆட்சி, அவர்கள் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நடக்கிறது. தி.மு.க யாத்திரை தொடங்கியிருந்தால் `என் மகன், என் பேரன்' என்று தொடங்கியிருப்பார்கள் இந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. அதனை அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது.
பல கோடி ரூபாய்க்கு கலைஞர் நூலகம், பேனா சிலை என செலவு செய்யும் தி.மு.க அரசு, கரும்பு ஆலை திறக்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தி.மு.க தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள்.
ஆனால் குருப் 4 தேர்வு முடிந்து 13 மாதங்கள் ஆகின்றன. அதன் முடிவைக்கூட வெளியிட முடியவில்லை. 2023 ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக மோடி கூறிய நிலையில், 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவிட்டார். மதுரை நெசவாளர்கள் அதிகமாக உள்ள பகுதி. ஆனால், பள்ளிச்சீருடை தைப்பதற்கான அனுமதிகூட இங்குள்ளவர்களுக்கு அளிக்கவில்லை.
விருதுநகரில் 500 கோடி செலவில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதன் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" என்றவர்,
வடக்குத் தொகுதியில் பேசும்போது, தமிழகத்திலேயே பெரிய பறக்கும் பாலத்தை மதுரையில் 550 கோடி ரூபாய் மதிப்பில் பிரதமர் மோடி அவர்கள் கட்டி கொடுத்திருக்கிறார்.
2026 மே மாதத்தில் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்தியாவில் எந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் இல்லாத பெருமையாக 2,600 கோடி ரூபாய் செலவில் பிரதமர் மோடி மதுரையில் திறக்கவுள்ளார். வடக்கே டெல்லியில் எப்படி பெரிய அளவில் எய்ம்ஸ் உள்ளதோ தெற்கே அதே அளவில் எய்ம்ஸ் இருக்க வேண்டுமென்பதே பிரதமரின் கனவு.
1967-லிருந்து ஆட்சியில் இருக்கக்கூடிய, ஐந்து முறை மாநிலத்திலும் பல முறை மத்தியிலும் ஆட்சியில் இருந்த தி.மு.க, மதுரைக்கு ஒரு எய்ம்ஸ் கொண்டுவர நினைக்கவில்லை. ஆனால், பாரதிய ஜனதா எய்ம்ஸைக் கொண்டு வரும்போது, ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .
மதுரை தொகுதியில் கம்யூனிஸ்ட் எம்.பி இருந்து வருகிறார். கம்யூனிஸ்ட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியும், திட்டம் வேண்டுமென்று கேட்கவும் மாட்டார்கள், வந்த திட்டத்தை செயல்படுத்த விடவும் மாட்டார்கள். வேகமாக வேலை செய்யக்கூடியவர்கள் உள்ள தூங்கா நகரம் மதுரை. ஆனால், அப்படிப்பட்ட மதுரைக்கு தகுந்த எம்.பி இருக்கிறாரா என்றால் இல்லை.
புத்தகத் திருவிழாவில் எழுத்தாளராக உரையாற்றும் எம்.பி-யாகவே இருக்கிறாரே தவிர, மக்கள் பிரச்னைகளைப் பேசக் கூடிய எம்.பி-யாக அவர் இல்லை. மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் வேகமாக வளர வேண்டுமென்றால், பா.ஜ.க அல்லது பிரதமர் மோடியுடன் ஒட்டி இருக்கக்கூடிய எம்.பி-யாக இருக்க வேண்டும்.
மதுரை இராஜாஜி மருத்துவமனையில் முழுமையாக மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால், 2,000 செவிலியர்கள் வேண்டும். ஆனால், அங்கு 670 பேர் மட்டுமே இருக்கிறார்கள். 1,300 செவிலியர்கள் பணி காலியிடமாகவே உள்ளது. மற்றொரு பக்கம் செவிலியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டுமென்று சென்னையில் போராட்டம் நடத்துகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை. அதேநேரம் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். ஏனென்றால் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க அரசிடம் பணமில்லை" என்றார்.
இங்கு அண்ணாமலையை வரவேற்க விஜய் மக்கள் இயக்க கொடியுடன் விஜய் ரசிகர்கள் வந்திருந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-state-president-annamalai-slams-communist-mp-in-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக