'கவர்ச்சித் திட்டம்' என்று பலரையும் ஏமாற்றியதாக, இரண்டு நிதி நிறுவனங்களைச் சேர்ந்த எட்டு பேர்மீது, நாமக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி சிவகுமார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள தேவனாங்குறிச்சி கிராமம், கீழேரிப்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரின் மனைவி செந்தமிழ்செல்வி. இந்த தம்பதி 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில், 'வடிவேலன் பேங்கர்ஸ்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளனர். மோகன்ராஜ் - செந்தமிழ்செல்வி இறந்தவிட்ட நிலையில், அவர்களின் மகள் சவுந்தர்யா, அவரின் கணவர் தமிழ்கண்ணன் ஆகியோர் இந்த நிதி நிறுவனத்தை தொடர்ந்து கவனித்து வந்தனர். இந்த நிலையில், இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சவுந்தர்யா - தமிழ்கண்ணன் தம்பதிமீது மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்செங்கோடு கச்சேரி சாலை அருளகம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 79). இவரின் மனைவி செல்லம்மை (75). இந்தத் தம்பதியின் மகன் அருணாச்சலம், மருமகள் சொர்ணமாலா மற்றும் சோமசுந்தரத்தின் மகள்கள் காந்திமதி, வள்ளியம்மை ஆகிய 6 பேர், `சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவனம்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களைக் கூறி, பணம் பெற்றுள்ளனர். இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடைய மனைவி துர்காதேவி என்பவர் நாமக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார். இதேபோல், மேலும் 11 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் விசாரணை நடத்தி நிதி நிறுவனத்தை கவனித்து வந்து, அவர்கள் 6 பேர்மீது மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி, இந்த இரண்டு நிதி நிறுவனங்களிலும் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், நாமக்கல் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக வந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகாரளிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/crime/namakkal-econmic-offence-wing-police-filed-case-against-2-fraudster-firms-for-cheating-money
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக