Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

`அமைச்சர் உதயநிதி!' வெடிபோட்ட அன்பில் மகேஷ் - பின்னணி என்ன?

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, `தி.மு.க ஆட்சியமைத்ததும் ஸ்டாலினின் மகன் உதயநிதி நிச்சயம் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகிவிடுவார்!' என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்து தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றும் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை.

உதயநிதிக்கு சீட் ஒதுக்கியதையே எதிர்க்கட்சிகள் 'வாரிசு அரசியல்' என்றுதான் பேசுகின்றன. இதில் அமைச்சர் பதவியும் கொடுத்தால் அவ்வளவுதான் என்பது முதல்வர் ஸ்டாலினின் எண்ணமாக இருக்கிறது. 'எப்படியிருந்தாலும் ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதானே' என்று கிச்சன் கேபினட்டும் அமைதியாக இருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் திடீரென உதயநிதி அமைச்சராக வேண்டும் என்றிருப்பது அரசியல் சரவெடியை பற்றவைத்திருக்கிறது. இதன் பின்னணி குறித்து உதயநிதிக்கு நெருக்கமான எம்.எல்.ஏ ஒருவரிடம் கேட்டோம்.

``அன்பில் மகேஷ் பேசியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவரின் பேச்சில் உள் அரசியல் இருக்கிறது. எங்களுக்குத் தெரிந்த வரையில் 2022 ஜூன் மாதம் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவிருக்கிறது. அப்போது உதயநிதியும் அமைச்சராவார். இதற்கு அ.தி.மு.க-வில் ஒரு உதாரணத்தைக் கூறலாம். அதாவது, ஜெயலலிதா இறந்ததும், சசிகலா முதல்வராக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்.பி.உதயகுமார் முதன்முதலில் பேசத் தொடங்கினார். அவரை வைத்து ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா, தொடர்ந்து பலரையும் பேசவைத்தார். இந்த பேச்சுக்களைஉருவாக்கியபிறகுதான் பொதுச்செயலாளராகவும் ஆனார் சசி. முதல்வராகவும் ஆக முயன்றார். அதே ஃபார்முலாதான் உதயநிதி விஷயத்திலும் நடக்கிறது.

விஷயம் ஹைலைட் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் அன்பில் மகேஷிடம் இந்த அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. சரியாக அதைப் பயன்படுத்திய அன்பில், சேப்பாக்கம் தொகுதியிலேயே இதுகுறித்துப் பேசி பரபரப்பைப் பற்றவைத்துவிட்டார். ஊடகங்கள் அதுகுறித்துக் கேள்வி கேட்கும்போது அஜெண்டாவை உடைக்க வேண்டும் என்பதுதான் பிளான்.

அன்பில் மகேஷ்

உதயநிதியை அமைச்சராக்குவதில் முதல்வர் ஸ்டாலின் அமைதியாக இருந்தாலும், கிச்சன் கேபினட் விடுவதாக இல்லை. இப்போதே அமைச்சராக அமரவைத்தால்தான், பின்னாளில் துணை முதல்வர், முதல்வர் என்பதை நோக்கிப் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று கருதுகிறார் கிச்சன் கேபினெட். இன்று அன்பில் மகேஷ் ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதனை தாமாக வேறு எந்த நிர்வாகியும் வலிய சொல்லத் தேவையில்லை. மீடியாக்களே மற்ற அமைச்சர்களிடமும், நிர்வாகிகளிடமும் கேள்வியாகக் கேட்டு, விவகாரத்தை பெரிதாக்கும். எப்படியும் உதயநிதி அமைச்சராவது உறுதி!” என்று முடித்தார்.

Also Read: `வெல்க தளபதி... வெல்க உதயநிதி!’ -நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமாரின் கோஷமும் திமுக, அதிமுக ரியாக்‌ஷனும்



source https://www.vikatan.com/government-and-politics/politics/plan-behind-the-speech-of-anbil-mahesh-regarding-udhayanidhi-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக