Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

டெல்லி காற்று மாசு: `பெற்றோர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்; குழந்தைகளுக்குப் பள்ளியா?' -உச்ச நீதிமன்றம்

`டெல்லியில் காற்று மாசு மோசமாக அதிகரித்திருக்கும் சூழலில், பள்ளிகளைத் திறந்திருப்பது ஏன்?’ என டெல்லி கெஜ்ரிவால் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. `பணிக்குச் செல்பவர்கள் வீட்டில் இருந்தபடியே வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும்போது, குழந்தைகளை மட்டும் பள்ளிக்கு வரச்சொல்வது ஏன்?’ எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

டெல்லி

வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை, விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற பல்வேறு காரணங்களால், தலைநகர் டெல்லியின் காற்று மாசு அளவு கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில், மிக மோசமான அளவை எட்டியது. இதனால் டெல்லி அரசு பல கட்டுப்படுகளை விதித்தது. மேலும், அரசின் கட்டுப்பாட்டையும் மீறி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடிய பின்னர் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து கடுமையான நிலையை அடைந்தது.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, டெல்லி அரசுக்கு நீதிமன்றம் ஆலோசனையும் வழங்கியது. அதன்படி, வேலைக்குச் செல்வர்கள் இனி வீட்டிலிருந்து வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யவும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளில் பாடம் படிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும், அதிகப்படியான வாகனங்கள், கனரக வாகனங்கள் தலைநகருக்குள் வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

டெல்லி காற்று மாசு

இதனால், காற்றின் தரம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. அதாவது `பயங்கரமான' நிலையிலிருந்து `மிக மோசமான' நிலைக்கு வந்தது. மேலும், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் `மோசமான' அளவுக்குக் குறையும் எனவும் கணிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதம் கழித்து, கடந்த சில நாள்களுக்கு முன்னர் டெல்லியின் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும்போது, குழந்தைகளை மட்டும் பள்ளிக்கு அனுப்புவது ஏன்... இதை எப்படி எடுத்துக்கொள்வது?" என டெல்லி அரசுக்கு சரமாரியாக கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.

இந்த நிலையில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால் ராய், ``டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகரித்துவருவதால், டெல்லியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும்" என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/delhi-air-pollution-adults-wfh-children-in-school-supreme-court-slams

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக