நெல்லை டவுண் சாஃப்டர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இடைவேளையின் போது, கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன், சுதீஷ் மற்றும் அன்பழகன் ஆகியோர் உயிரிழந்தனர். சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக்அபுபக்கர் சித்திக், அப்துல்லா ஆகிய 4 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்த மாணவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் உதவித் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்தத் தொகையை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் அளிக்க அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர்.
பின்னர் சபாநாயகர், அமைச்சர், ஆட்சியர் ஆகியோர் உயிரிழந்த மானவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினரிடம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களைக் கேட்டுக் கொண்டதுடன் அவர்களுக்கு தலா மூன்று லட்சத்துகான காசோலை வழங்கினார்கள்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ”சாஃப்டர் பள்ளியில் நடந்த விபத்து குறித்து அறிந்த தமிழக முதல்வர், உடனடியாக என்னைச் சம்பவ இடத்துக்கு செல்லுமாறு அனுப்பியதால் இங்கு வந்துள்ளேன். பள்ளி விபத்து குறித்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
இதனிடையே, பள்ளி சுவர் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து சாஃப்டர் மேல்நிலைப்பள்ளிக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்க நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஷூபாஷிணி உத்தரவிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/general-news/including-correspondent-three-persons-arrested-in-school-wall-collapsed-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக