Ad

புதன், 1 டிசம்பர், 2021

''அரசியல் எனக்கு சரிப்பட்டுவராது!’’ - ஒப்புக்கொள்கிறார் ஜெ.தீபா

'அ.இ.அ.தி.மு.க ஜெ. தீபா அணி, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்றெல்லாம் தமிழக அரசியல் களத்தில் தடதடத்து வந்த, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா திடீரென அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகினார்

இந்தநிலையில், 'வேதா இல்லம் யாருக்கு சொந்தம்?' என்ற வழக்கில், 'ஜெ.-வின் வாரிசுகளுக்கே சொந்தம்' என தீர்ப்பு கிடைத்திருப்பது அவருக்கு புதுத்தெம்பைத் தந்திருக்கிறது. இதையடுத்து ஜெ.தீபாவிடம் பேசினேன்...

ஜெயலலிதா

''ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' சட்டபூர்வமாக உங்களுக்கு சொந்தமாகியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

'' 'வேதா இல்ல'த்தை எல்லோரும் பொலிட்டிகல் ஐகானாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் பாட்டி, அத்தை (ஜெயலலிதா), அப்பா என எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து நிறைந்த, எங்கள் குடும்பத்தின் உணர்வுபூர்வமான ஓர் அங்கம்தான் வேதா இல்லம். இந்த உணர்வுகள் எல்லாம் மதிப்பிட முடியாதது!

அத்தை மறைவுக்குப் பிறகு, வேதா இல்லத்தை நினைவில்லமாக்க இருப்பதாக பேச்சு கிளம்பியதுமே, அதை எதிர்த்து நான் வழக்கு தொடுத்துவிட்டேன். ஆனாலும் அதிகாரத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் என்னிடம் இல்லை. இப்போது இப்படியொரு தீர்ப்பு கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்!''

''வேதா இல்லத்தை வெறுமனே ஒரு தனிப்பட்ட நபரின் சொத்தாக மட்டுமே பார்க்க முடியுமா?''

''அத்தையின் பெயர், புகழ் ஆகியவற்றை மட்டுமே அறிந்தவர்கள், 'வேதா இல்ல'த்தை ஜெயலலிதா வாழ்ந்த வீடாக மட்டுமே பார்க்கிறார்கள். அது தவறு. வேதா இல்லம் என்பது எங்கள் பாட்டியின் வீடு. அவர்களோடே நாங்களும் சேர்ந்து வாழ்ந்த வீடு என்பதையெல்லாம் மறந்துவிடுகிறார்கள்.

குடும்பத்தினர் என்ற வகையில், அத்தை அனுபவித்த கஷ்ட நஷ்டங்களை உடனிருந்து அறிந்தவர்கள் நாங்கள் மட்டுமே. பாட்டி, அத்தை இருவருமே திரைத்துறையில் இருந்ததால், குடும்பத்தில் உள்ள ஆண் என்ற வகையில் என் தந்தை ஜெயக்குமார்தான் ஆரம்பகாலங்களில், வீடு கட்டுவதற்கான இடம் தேடி அலைந்து திரிந்தார். கடைசியில் போயஸ்கார்டனில் உள்ள (வேதா இல்லம்) இந்த இடம்தான் எல்லா வசதிகளோடும் இருப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்தே வேதா இல்லத்துக்கான ப்ளாட்டை என் பாட்டி சந்தியா வாங்கினார்.

ஜெயலலிதா

அதன்பிறகு, வேதா இல்லத்தைக் கட்டும்போதும்கூட என் அப்பாவுக்கென்று உடற்பயிற்சிக் கூடம் வசதி, அத்தைக்கு மேக்கப் அறை, டென்னிஸ் கோர்ட், பாட்டிக்கென்று தனியறை என மூவருக்கும் பிரத்யேகமான வசதிகளோடு திட்டமிட்டே வீட்டைக் கட்டிமுடித்தார். இப்படி எங்கள் குடும்பத்தினர் பார்த்துப் பார்த்துக் கட்டி வாழ்ந்த 'வேதா இல்லம்' பற்றிய வரலாறு எதையுமே தெரிந்துகொள்ளாமல், சிலர் பேசிவருவது அவர்களது இயலாமை என்றுதான் சொல்லவேண்டும்!

அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது... 'உங்களுடைய தனிப்பட்ட திறமையைக்கொண்டு அரசியல் செய்யுங்கள்; வளர்ச்சியடையுங்கள்! அதைவிடுத்து, சுயநல அரசியலுக்காக அ.தி.மு.க என்ற கட்சியை உடைத்துக்கொண்டிருக்காதீர்கள்.''

Also Read: ரத்தத்தில் கையெழுத்து; அரசுப் பேருந்து ஓட்டுநர் 'டு' அதிமுக அவைத்தலைவர் - யார் இந்த தமிழ்மகன் உசேன்?

''வேதா இல்லம் தவிர்த்து, ஜெயலலிதாவினுடைய ஏனைய சொத்துகளின் நிலை என்ன?''

''குறிப்பிட்ட சில சொத்துகள் சர்ச்சையில் இருந்து வருகின்றன. சிறுதாவூர் பங்களா மீது தனி வழக்கு ஒன்று இருக்கிறது. இதுதவிர பினாமி சொத்து என்ற வகையில் உள்ள வழக்கில் எங்களுக்கும் நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வழக்குகள் எல்லாம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை.

சர்ச்சைகள் எதுவும் இல்லாத மற்ற சொத்துகள் நீதிமன்றம் வழியே ஏற்கெனவே எங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. ஆனாலும்கூட வழங்கப்பட்டுள்ள இந்த சொத்துகளின் மீதும் வருமான வரி கட்டவில்லை என்ற பிரச்னையும் இருக்கிறது. இதுகுறித்த வழக்கில், அத்தையின் சொத்துகள் அனைத்தையும் ஒருசேர இணைத்துவைத்திருக்கிறது வருமான வரித்துறை. எனவே, வருமான வரி பிரச்னையை முழுமையாகக் களைவதற்கான வழிமுறைகளில்தான் நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம். இதைச் சரிவர செய்துமுடித்தால், எங்கள் கைவசம் கிடைக்கக்கூடிய சொத்துகளின் பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடலாம்.''

பூங்குன்றன்

''சொத்துக்குவிப்பு வழக்கிற்காக 2014-ல் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த ஜெயலலிதாவை ரத்த உறவு என்றவகையில் நீங்கள் மட்டுமே சந்தித்ததாக சொல்லியிருக்கிறீர்களே...?''

''ஆமாம்... சிறையில் இருந்த அத்தை, என்னைப் பார்க்க விரும்பியிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளையும் அவரே செய்திருந்தார். திடீரென அவரது உதவியாளர் பூங்குன்றனிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. 'உடனடியாக நீங்கள் பெங்களூருக்கு கிளம்பி வரவேண்டும் என்று மேடம் சொல்கிறார்' என்று தகவல் சொன்னார். அதுநாள் வரையில் எனக்கு பூங்குன்றன் நம்பர்கூட தெரியாது.

அந்த காலகட்டத்தில், பூங்குன்றன் தவிர்த்து மற்றொரு பெண்ணும்கூட அத்தையிடம் மேலாளர் போன்ற பணியில் இருந்துவந்தார். அவருடைய பெயர் எனக்கு மறந்துவிட்டது. அந்தப் பெண்மணிதான், நான் பெங்களூரு செல்வதற்கான விமான டிக்கெட் மற்றும் அங்கே நான் தங்குவதற்கான ஏற்பாடுகளையெல்லாம் பார்த்துக்கொண்டார். தனியே அவ்வளவு தூரம் செல்லவேண்டியிருந்ததால், என்னுடைய தோழி ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டுதான் பெங்களூரு சென்றேன்.

Also Read: ``ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போதைக்கு இல்லை!" - சரத்பவாரைச் சந்தித்த பிறகு மம்தா பானர்ஜி தகவல்

சிறைக்குள் (பரப்பன அக்ரஹாரா) என்னை மட்டும் அனுமதித்தார்கள். அங்கேயும் சென்று நாள் முழுக்கக் காத்திருந்துதான் அத்தையைப் பார்த்தேன். சிறை விதிப்படி பேசமுடியாது என்பதால், அப்படியே பார்த்துவிட்டு மட்டும் ஊர் திரும்பினேன்.

அன்றைய சூழலில், அத்தையே விருப்பப்பட்டு என்னை அழைத்திருந்ததால் மட்டுமே அவரை நேரில் சந்திக்க முடிந்தது. மற்றபடி நானாக முயற்சி எடுத்திருந்தால்கூட, அவரைச் சந்தித்திருக்க முடியாது என்பதுதான் நிஜம்.''

வேதா இல்லம்

''கடந்த காலத்தில், தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்த நீங்கள், 'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்' என்ற கேள்வியைக் கேட்டு சர்வே எல்லாம் எடுத்திருந்தீர்களே....?''

(சிரிக்கிறார்) ''உண்மையைச் சொல்வதென்றால், அந்தக் கேள்விக்கு மக்கள் என்னையும் சப்போர்ட் செய்திருந்தார்கள், அ.தி.மு.க-விலிருந்த தலைவர்களையும் சப்போர்ட் செய்திருந்தனர். இன்னும் சிலர், 'எல்லோரும் சேர்ந்தே செயல்படலாம்' என்றும் தெரிவித்திருந்தனர். ஆனாலும் அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது என்ற தீர்க்கமான முடிவெடுத்து ஒதுங்கிவிட்டேன்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/politics-does-not-suit-me-agrees-jdeepa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக