Ad

புதன், 1 டிசம்பர், 2021

பிக்பாஸ் சீசன் 5 epi.60: `மக்கள் எனக்கு'- அபிஷேக்கின் பன்ச்; `அன்புதான்' - பிரியங்காவின் டெம்ப்ளேட்!

“வணக்கம்.. ரமேஷ்.. இணைப்பில் இருக்கீங்களா.. ரெண்டு நாளா பிக்பாஸ் வீட்டில் ‘சானல் வார்’ போயிட்டு இருக்கறதா தகவல்கள் வந்துட்டு இருக்கு.. அந்த நிலவரங்களை சொல்லுங்க.. நேத்து என்னவெல்லாம் அங்க நடந்துச்சு..”

(ரமேஷ் சில விநாடிகளுக்கு தலையாட்டுகிறார். இது ஒரு விடமுடியாத பழக்கம்) “வணக்கம்.. சுரேஷ். நிச்சயமா. தகவல்கள் தரேன்.. சானல் டாஸ்க் நேத்திக்கும் போயிட்டு இருந்தது. முந்தா நேத்து நடந்ததுக்கும் நேத்திக்கும் பெரிசா ஒண்ணும் வித்தியாசம் இல்ல... ரெயின்கோட் ராஜூ வழக்கம் போல நல்லா காமெடி பண்ணாரு. அவருக்கு அண்ணாச்சி உறுதுணையா இருந்தாரு. ‘பவானி’ ரசிகர் மன்றத் தலைவரா வருண் கொஞ்சம் காமெடி பண்ணாரு. தாங்கள் புறக்கணிக்கப்பட்டதா பாவனியும் தாமரையும் கோபப்பட்டாங்க... “நிரூப் மாதிரி நீங்களும் பாவனியோட தம்பிதானே?”-ன்னு அமீர் கிட்ட கேட்டு அபினய் தன் பொஷிஷனை காப்பாத்திக்க நினைச்சாரு... பிரியங்கா – நிரூப் விவகாரம் எட்டாவது சீசன் வரைக்கும் போகும் போல. தன்னை பலியிட்டாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்ப்படுத்துவதாக அபிஷேக் வீரசபதம் எடுத்திருக்காரு... அன்பு காட்டுவதில் அர்ச்சனாவையும் மிஞ்சிடுவாருபோல...”

“ம்.. தகவல்களுக்கு நன்றி ரமேஷ்.. இணைப்பில் தொடர்ந்து இருங்கள்..”..

“ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்யணும். ‘பிக்பாஸ் வீட்டில் அழகான பெண்கள் இல்லையா?’ன்னு ஒரு டாப்பிக் ஓடிட்டு இருக்கு. அதில் ஒரு உண்மையை எல்லோருமே மூடி மறைக்கறாங்க.. அந்த டாஸ்க் நடந்த அன்னிக்கு சேலை கட்டிட்டு ரொம்ப அம்சமா ஒருத்தர் இருந்தாங்க.. அந்த குறிப்பிட்ட எபிஸோடிற்கு மட்டும் ஆண்களின் பார்வையாளர் சதவீதம் கன்னாபின்னான்னு அதிகமாச்சுன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது.. ..ஹலோ.. ஹலோ. சுரேஷ்.. கேக்குதா..?

“ரமேஷ்.. இணைப்பில் ஏதோ பிரச்சினை போல இருக்கு. நான் திரும்பவும் அழைக்கிறேன்”… (மனதிற்குள் – “இவனையெல்லாம் யார் ரிப்போர்ட்டரா வேலைக்கு எடுத்தது?!”).

“சுருக்கமான செய்திகளைப் பார்த்தோம். விரிவான செய்திகளை அறிந்து கொள்ள 24 மணி நேரமும் விகடன்.காம் இணைப்பை தொடர்ந்து பாருங்கள்”…

எபிசோட் 60-ல் என்ன நடந்தது?

‘லாலா கடை சாந்தி’ என்கிற சென்ற நூற்றாண்டு பாடலை பிக்பாஸ் இன்னமும் வைத்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கடை மூடியே பல ஆண்டுகள் கடந்து விட்டன என்பதை அவர் அறியவில்லைபோல.

நீல சானலில் ராஜூ மற்றும் இமானின் ஆதிக்கம் அதிகமிருப்பதாக அவரது அணியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். குறிப்பாக இமான் தன்னை அவமதித்துவிட்டதாக உணரும் அமீர், ஒரு ஸ்டோரி பற்றி தன்னிடம் விவாதிக்க வரும் ராஜூவிடம் “நாம இப்படி பிளான் பண்ற மாதிரிதானே போகும்?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்கிறார். இந்த நகைச்சுவையாளர்களிடம் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், டேக்கின்போது அவர்களாக அந்தக் காமெடியை டெலவப் செய்து கைத்தட்டல் வாங்கிவிடுவார்கள். இதனால் எதிரில் நடிப்பவர்கள் திகைத்து விடுவார்கள். ஹீரோக்களே அஞ்சும் விஷயம் இது. ‘சிபி – அக்ஷரா’ ஸ்டோரியை உருவாக்கலாம் என்பது இவர்களின் பிளான்.

சிபியை நேர்காணல் செய்யச் செல்கிறார் அமீர். “நான் பார்க்கறதுக்கு சைலன்ட்டா இருப்பேன். தேவைப்பட்டா வயலன்ட்டா மாறுவேன். நானும் அக்ஷரா மாதிரி கூட்டுக்குள் வாழ்ந்த பறவை. ரெண்டு பேரும் செல்லமா வளர்ந்திருக்கோம்போல. ஆனா நான் வெளிநாடு பறந்து திரிஞ்சு உலகத்தைப் புரிஞ்சுக்கிட்டேன். அக்ஷரா இன்னமும் கூட்டுக்குள்ளயே இருக்காங்க. இப்பத்தான் பிக்பாஸ்-ன்ற உலகத்தைப் பார்க்க வந்திருக்காங்க” என்று சிபி சொல்ல “அவன் வலது ஓரத்துல உக்காந்திருப்பான். நான் இடது ஓரத்துல உக்காந்திருப்பேன். இப்படி ஓரம்... ஓரமா நாங்க உக்காந்தாலும் அப்பப்ப காரமா சண்டை போடறது மட்டும் எப்படியோ நடந்துடுது” என்று மூக்கைச் சுருக்கி சிரித்தபடியே இன்டர்வியூ தந்தார் அக்ஷரா.

“இந்த ராஜூ பய எது செஞ்சாலும் அந்தப் பழி என் மேலதான் வந்து விழுது. எப்பப் பாரு என்னையே நோண்டிட்டு இருக்கான். அவன் கிச்சன் பக்கம் வரமாட்டான்…ஆனா என்னைத்தான் இங்க உப்புமாவா போட்டு கிளறுவாங்க... ஆங்... இந்த தாமரை பத்தி சொல்லணும். இந்த வீட்டில் ஒரே ரவுடி பேபிதான் இருக்கணும். அது அவங்களாதான் இருக்கணும். இன்னொரு ரவுடி இருந்தா தாமரைக்கு பிடிக்காது” என்று பாவனி சொன்னதையெல்லாம் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டார் நிரூப்.

ராஜு - இமான்

அமீரை வரவழைத்து வருணும் அபினய்யும் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்கள். “ரெண்டே ரவுண்டுதான்.. இந்த அமீரோட கதையை முடிச்சுக் காட்டறேன்”ன்னு சல்பேட்டா பரம்பரை பாவனி சவால் விட்டிருக்காங்களே.. அதைப் பத்தி என்ன சொல்றீங்க?” என்று வருண் கேட்க, ‘தக்காளி’ என்று அமீர் முனகுகிறார். (வில்லங்கமாக ஒன்றுமில்லை. தக்காளி விலையேற்றத்தைப் பற்றி அவர் கவலையுடன் குறிப்பிடுகிறார்).

“பாவனி, நிரூப்பை தம்பி மாதிரி பார்க்கறதா சொல்லியிருக்காங்க. உங்களையும் அப்படித்தான் பார்க்கறாங்களா?” என்று அபினய் கேட்க “உன் பிரச்சினை உனக்கு. நடுவுல நான் போட்டியா வந்ததுல உனக்கு காண்டா?” என்று மைண்ட் வாய்ஸில் முனகிய அமீர் “அப்படியெல்லாம் இல்லை. நிரூப்பிற்கு வாடகை மூளைதான். எனக்கு சொந்தமாவே நாலைந்து மூளை இருக்கு. எனக்கொரு பைத்தியக்கார பிரெண்ட் வெளில இருக்கான். பாவனியும் அப்படியொரு பைத்தியம். பிக்பாஸ் முதல் நாள்ல இருந்து இங்க வரலையேன்னு ஏக்கமா இருக்கு” என்று பதில் சொல்லி சாமர்த்தியமாக அமீர் எஸ்கேப் ஆக... “பல அரிய கருத்துக்களைத் தந்து உங்கள் நேரத்தை எங்களுக்காக செலவழித்தமைக்கு நன்றி” என்று சொல்லி விடை தருகிறார் வருண். “இவனுங்க என்ன சானல் நடத்துறானுங்க.? எப்பப் பாரு இவனுங்களே கோட்டை போட்டுக்கிட்டு காமிரா முன்னாடி குத்த வைச்சு உக்காந்திருந்தா. நாங்கள்லாம்... என்ன ஆடியன்ஸா … உக்காந்து கைத்தட்ட மட்டும் வந்திருக்கோமா?” என்று பாவனியும் தாமரையும் தங்களுக்குள் கோபமாக முனகிக் கொண்டிருந்தார்கள்.

நீல சானலின் ஒளிபரப்பு துவங்கியது. ‘இது உடான்ஸ் அல்ல உண்மை’... அப்படின்னு நீங்க நெனப்பீங்க. ஆனா இது உடான்ஸேதான்… வாங்க.. இன்னிக்கு தலைப்பு செய்திகளைப் பார்ப்போம்” என்று நிகழ்ச்சியை துவக்கிய இமான் “சுயம்வரம் தேடி வந்து சுயபுத்தியை இழந்த நிரூப்”… இதுதான் இன்னிக்கு டாப்பிக்.. அபிஷேக் இத பத்தி என்ன நெனக்கறீங்க?” என்று அவரின் வாயைக் கிளற ஆரம்பித்தார்.

“வைல்ட் கார்ட் ரவுண்ட்லயாவது தனக்கேத்த அழகான பொண்ணா வரும்-னு நிரூப் நெனச்சான். ஆனா ரெண்டு தடியன்ங்கதான் வந்தாங்க.” என்று அபிஷேக் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவரை இடைமறித்த ரெயின்கோட் ராஜூ “அப்படின்னா… இப்ப இருக்கற பொண்ணுங்க கொடூரமானவங்கன்னு சொல்ல வர்றீங்களா?” என்று பெண் போட்டியாளர்களை பங்கம் செய்ய “அப்படில்லாம் நான் சொல்லல. இப்படி இருந்தும் அவனுக்கு இன்னமும் அந்த வரம் கிடைக்கலை” என்று சொல்லி முடித்துக் கொண்டார் அபிஷேக்.

நிரூப்பை விடவும் ‘ஆட்டநாயகன் அபினய்’யின் நடனத்தை மட்டுமே அதிகம் பார்த்து ரசிப்பதாக சிபி சொல்லியதைக் கண்டு பிக்பாஸே கலவரம் ஆகியிருப்பார். (இந்தச் சம்பவம்லாம் எப்படா நடந்தது?!). ``Handsome hunk வருண் அவர்களே.. இந்த வீட்டில் அழகான பெண் யார்?” என்று ராஜூ கேட்க “என்னைச் சொல்லுடா முண்டம்” என்று மைண்ட் வாய்ஸில் ஹைடெஸிபலில் அலறினார் அக்ஷரா."அப்படி யாருமில்லை" என்று வருண் கூற, பாறாங்கல்லிற்குப் பதிலாக அருகிலிருந்த தலையணையை வருணின் மீது தூக்கியெறிந்தார். “சுமார் மூஞ்சு குமாருன்னு பிரியங்காவை சொல்லலாம்” என்பது வருணின் அழுத்தமான அபிப்ராயம்.

வருண் - பிரியங்கா

“அய்யா.. வருண்.. அப்பப்ப இந்த ‘இது.. இது’ன்றீங்களே.. அந்த இது எதுங்கய்யா.? The nation wants to know about ‘இது’ இதப்பத்தி நீங்க பேசியாகணும்” என்று ராஜூ ஆரம்பிக்க ‘இது வந்து ஒரு கேள்வியா. நான் அதப்பத்தி பேசிட்டு இருக்கும் போது இது கேட்கறீங்க” என்று வருண் ஆரம்பிக்க ‘இது நமக்குத் தேவையா?” என்று கேட்டு இந்தக் கேள்வியின் மீது ‘இதைப்’ போட்டு அணைத்தார் இமான்.

“திருநெல்வேலில இருந்து நிரூப்போட தீவிர ரசிகர் ஒருத்தர் பேசறாரு” என்று அண்ணாச்சி சொல்ல “என்னது... திருநவேலில எனக்கு ரசிகரா?”என்று நிரூப்பே ஆச்சரியமடைகிறார். “நீங்க தனியா விளையாடறீங்களா... கூட்டமா விளையாடறீங்களா?” என்று ரசிகர் கேட்க “தனியா இருக்க என் வாழ்க்கைலதான் இவிய்ங்க கூட்டமா வந்து விளையாடறாங்க... இங்க போனா அங்க துரத்தறாங்க... அங்க போனா இங்க துரத்தறாங்க.. எங்க போறதுன்னு தெரியாம இப்ப காயினை வெச்சு தலைவர் ஆயிட்டேன்” என்று நிரூப், ராஜூவின் குரலில் பதில் அளித்தார்.

“என்னைப் பார்த்து பயமான்னு அண்ணாச்சி உங்களைப் பார்த்து கேட்கறாரே. இது நியாயமா தலைவா...” என்று ரசிகர் கேட்க “பாவம்.. நம்ம அண்ணாச்சி..ன்னுதானேன்னு அடிக்காம விட்டுட்டேன்.. வேற யாராவதா இருந்தா ‘என்னாச்சி’ன்னு விசாரிக்கற அளவிற்கு அவர் முகத்தில் காயம் இருந்திருக்கும்..” என்று நிரூப் (ராஜூ) பதிலளித்தார். “உங்க வளர்ச்சிக்கு என்ன காரணம் தலைவா?” என்று ரசிகர் கேட்க “ரெண்டு அடில புதைச்சு இரண்டு வருஷம் தண்ணி ஊத்தினா. இப்படி வளர்ந்துடுவேன்” என்று ராஜூ சொன்னதெல்லாம் கடந்த நிமிடத்தில் சட்டென்று டெவலப் செய்த காமெடியாக இருக்க வேண்டும்.

“நான் வாழ்க்கைல ரொம்ப அடிபட்டிருக்கேன். அதனாலதான் யாரையும் நம்ப முடியலை. ஒருத்தரை நம்பி அது பொய்யா போயிடுச்சின்னா ரொம்ப வலிக்கும். இந்த வீட்டில் நாம் நம்புவது பிரியங்கா மற்றும் ராஜூ” என்று சொல்லி ராஜுவையே அதிர்ச்சியடைய வைத்தார் நிரூப். “நீங்க..என்னை நம்பறீங்களா..? இத என்னாலேயே நம்ப முடியலை” என்பது ராஜூவின் கமெண்ட். அபிஷேக்கை விட்டு விட்டு ராஜூவின் பெயர் சொல்லப்பட்டது குறித்து பிரியங்காவிற்கும் அபிஷேக்கிற்கும் மனவருத்தம் ஏற்பட்டிருக்கும் என்பதை பிறகு அறிய முடிந்தது. அபிஷேக்குடன் இணைந்தால் மக்கள் தன்னை விரைவில் வெளியேற்றி விடுவார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கும் நிரூப்பிற்கு பாராட்டு.

“அடுத்த கேள்வி. பிரியங்கா மற்றும் அபிஷேக்கிடம். இரவெல்லாம் தூங்காமல் தெய்வத்திருமகள் விக்ரம் – சாரா மாதிரி சைகைமொழியில் ஒரு மர்ம விளையாட்டு விளையாடுகிறீர்களே. அதன் ரகசியம் என்ன?” என்று ராஜூ கேட்க “வெளில போய் என்னல்லாம் செய்யலாம்-ன்னு இங்க பேசிப்போம்” என்று பிரியங்கா திருப்பதி ஜாங்கிரியை தர “இங்க இருக்க கொஞ்ச நாள்ல பிரியங்கா கிட்ட அன்பைக் கொட்ட முயற்சிக்கிறேன்” என்று அபிஷேக் பதிலுக்கு அல்வாவைக் கிளறினார். (பிக்பாஸ் வீட்டை விட்டுச் சென்ற பிறகு அபிஷேக்கின் மொபைலில் இருந்து பிரியங்காவின் நம்பரை யாராவது அழித்து விடுவார்களா?! என்ன கதைல்லாம் சொல்றான் பாருங்க. கம்பி கட்ற கதையெல்லாம்!).

பிரியங்கா - அபிஷேக்

பிரியங்கா – அபிஷேக் இருவருக்கு இடையிலான உறவு எத்தகையது என்கிற அதிமுக்கியமான விஷயத்தை சமூகத்திடம் தெரிவிக்க நீல சானல் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டது. ‘பாசமலர்’ சிவாஜி – சாவித்திரிக்கு அப்புறம் இவங்க காம்பினெஷன்தான் பெஸ்ட். அண்ணாத்தே கூட அப்புறம்தான்” என்று மக்கள் கண்கலங்கி சொல்ல “அபிஷேக் மாதிரி ஒரு பிரண்ட் இல்லையேன்னு எனக்கு ஏக்கமா இருக்கு” என்றார் பாவனி. “ஏன். உங்களுக்கு துக்கம் வந்தாலும் தூக்கம் வந்தாலும் டக்குன்னு அடுத்த செகண்ட்டே அபினய் வந்து நிக்கறாரே.. அந்த பாவப்பட்ட ஜீவனைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தீங்களா? என்று அபினய்யின் தியாகத்திற்காக வருந்தினார் ராஜூ.

நமீதா, நாடியா, அபிஷேக், இசை, ஐக்கி ஆகியோர் வெளியேறும் போதெல்லாம் எத்தனை சென்டிமீட்டர் கண்ணீர்மழை பிக்பாஸ் வீட்டில் பொழிந்தது என்கிற வானிலை நிலவரத்தை சொன்னார் ராஜூ. இதைப் போலவே இமான், தாமரை ஆகியோரிடம் இருந்த வெப்ப நிலவரத்தையும் சொல்லி சமன் செய்தார். ‘அரிசி டப்பாவிற்குள் அன்பை தேடும் அபினய்’ என்பதுதான் அடுத்த நிகழ்ச்சியின் தலைப்பு. Stay Tuned’ என்று சொல்லி நீல சானல் தன் ஒளிபரப்பை முடித்துக் கொண்டது. ‘ரெயின்கோட் ரகு’விற்கு நன்றி சொன்னார் அண்ணாச்சி.

“எங்களை ஏன் ஆட்டத்துல சேர்த்துக்கலை?” என்று ராஜூவிடம் பாவனி கோபமாக கேட்க “நீயா வந்து கலந்திருக்கணும். ஒருபக்கம் தோசை ஊத்தினாலும் இன்னொரு பக்கம் ஆசையா வந்து இந்த டாஸ்க்கை நான் செய்யலை” என்று குறுக்கே பதில் சொல்லி, பாவனியின் கோபத்தில் நல்லெண்ணைய்யை ஊற்றினார் அக்ஷரா. “எதையும் பிளான் பண்ணி பண்றதில்ல. அப்படியே ஒரு ப்ளோல போகுது. வேணுமின்னா நீயும் வந்து ஐடியா கொடு” என்று பாவனியிடம் மல்லுக்கட்டி சோர்ந்து ஒதுங்கினார் ராஜூ.

அடுத்ததாக ரெட் சானல் ஒளிபரப்பைத் துவங்கியது. “சைதாப்பேட்டையில் ஏதோ மறியல். அங்கிருந்து செய்தியாளர் பிரியங்கா நமக்காக நேரடி விவரங்களைத் தருகிறார்..” என்று அபிஷேக் சொன்னவுடன் தலையில் ரிப்பன் கட்டிக் கொண்டு பிதாமகன் விக்ரம் மாதிரி அமர்ந்திருந்த வருணை விசாரிக்கிறார் செய்தியாளர். “ஏய். எங்க தலைவி யாரு தெரியுமா.. கீச்சிடுவேன். எவன்டா அந்த அமீரு?” என்று வருண் ஆர்ப்பாட்டமாக குதிக்க “இருப்பா. என்னதான் உன் பிரச்சனை?” என்று விசாரிக்க அவர் பவானி தற்கொலை பேரவையின் தலைவராம். அமீர் –பாவனி நட்பை வருண் இப்படியாக கிண்டலடித்துக் கொண்டிருக்க “அடடே! நமக்கு இன்னொரு அடிமை சிக்கிட்டான்” என்கிற குஷியில் உற்சாகமாக கைத்தட்டி சிரித்துக் கொண்டிருந்தார் பாவனி என்கிற பவானி.

ரெட்சானலில் அடுத்ததாக ராஜூவையும் இமானையும் மறைமுகமாக கிண்டல் செய்தார்கள். இந்தக் காரியத்தை சுமாரான காமெடியில் செய்தார் ஆட்டோ மீட்டர் நிரூப். கை, கால்களை உதைத்துக் கொண்டு பிரியங்கா அழுது புரளும் அதிபயங்கர காமெடிக்காட்சியையும் ஒளிபரப்பி மகிழ்ந்தது ரெட் டிவி. நிரூப்பின் நட்பு ஒரு கட்டத்திற்குப் பிறகு ஐக்கியின் மீது திசைமாறியதைப் பற்றி கிண்டலடித்தார் பிரியங்கா.

பாவனி - தாமரை

“நீ என் செல்லாக்குட்டிடா. நீ வெறுத்தாலும் நான் அன்பைத் தருவேன். பிரியங்கா – நிரூப் எபிசோட் எனக்கே போரடிக்குது. (இனிமேலாவது அபிஷேக் பத்தி பேசித் தொலைங்கடா!) எனக்கு அன்பை கொடுத்துதான் பழக்கம். வாங்கிப் பழக்கமில்ல. என்னைக் கொளுத்திக்கிட்டாவது இந்த நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் என்னும் வெளிச்சத்தைத் தருவேன். அதுக்குத்தான் மக்கள் எனக்கு பிச்சை போட்டு இங்க அனுப்பியிருக்காங்க. (எதே?!). ஐ லவ்யூடா செல்லாக்குட்டி” என்று நிரூப்பிடம் ‘அன்புக்கதறலை’ நிகழ்த்திக் கொண்டிருந்தார் அபிஷேக். (அர்ச்சனா இதைப் பார்த்திருந்தால் மயக்கம் போட்டு விழுந்திருப்பார்).

இரண்டு சானல்களையும் மதிப்பிட வந்த சஞ்சீவ் “சொல்றதுக்கு நெகட்டிவ்-ன்னு எதுவுமில்ல. நீல சானல் 11 மதிப்பெண். சிவப்பு சானல் 14 மதிப்பெண். டிவியை ஆஃப் பண்ணிட்டு தூங்கப் போங்கடா” என்று சுருக்கமாக தன் மதிப்பீட்டை தெரிவித்தார்.

“அப்பப்ப சண்டை போட்டுட்டு பிரியங்கா வந்து உங்களை கட்டிப் பிடிக்கறாங்க. நீங்களும் கட்டிப் பிடிக்கறீங்க” என்று வத்திக்குச்சியுடன் வந்து தாமரையை கொளுத்திப் பார்த்து மகிழ்ந்தார். “லூஸா.. நீயி. நானா போயி அவங்களை எப்பவாவது கட்டிப்பிடிச்சிருக்கேனா?” என்று அக்ஷராவை கோபித்துக் கொண்டார் தாமரை.

“ஹலோ. கேபிள் ஆப்ரேட்டருங்களா.. நான் போட்டிருக்கிற பேக்கேஜ்ல.. ரெட். ப்ளூன்னு ரெண்டு சானல் இருக்கு. எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. அந்த ரெண்டை மட்டும் எப்படியாவது தூக்கிடுங்க. முடியல”..



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/article-about-biggboss-season-5-episode-60

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக