நம் வாழ்வை வளமாக்க உதவும் பலவித முதலீடுகள் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பலவிதமான முதலீடுகளில் எதை எவ்வளவு வைத்துக்கொள்வது என்ற கேள்வி எழுவது இயற்கைதான். இரண்டு விதங்களில் இதை நாம் செயல்படுத்தலாம்.
அஸெட் அலொகேஷன்
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது போல, நம்மிடம் உள்ள பணத்தை ஒரே வித சொத்தில் முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். நம் பணத்தை வெவ்வேறு விதமான முதலீடுகளில் பிரித்துப் போடுவதே அஸெட் அலொகேஷன்.
ரியல் மற்றும் ஃபைனான்ஷியல் அஸெட்கள்
தங்கம் /வீடு / மனை / கடன் (ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் பாண்டுகள்) /மியூச்சுவல் ஃபண்ட் / பங்குகள் / கிரிப்டோகரன்சி போன்ற அனைத்து முதலீடுகளும் ரியல் அஸெட் மற்றும் ஃபைனான்ஷியல் அஸெட் என்ற இரு பெரும் பிரிவுகளில் அடங்குகின்றன.
ரியல் அஸெட்களில் ரிஸ்க்கும் குறைவு; ரிட்டர்னும் குறைவு. ஃபைனான்ஷியல் அஸெட்களில் ரிஸ்க் அதிகம்; ரிட்டர்னும் அதிகம். மேற்கண்ட முதலீடுகளில் முதல் மூன்றும் தொட்டுரணக்கூடியவையாக இருப்பதால் ரியல் அஸெட் என்று அழைக்கப்படுகின்றன.
கடன் முதலீடு ஃபைனான்ஷியல் அஸெட்தான் என்றாலும், அதில் ரிஸ்க் குறைவு என்பதால் இங்கு அதுவும் ரியல் அஸெட்டாகப் பார்க்கப்படுகிறது. மற்ற மூன்றும் ஃபைனான்ஷியல் அஸெட் என்று அழைக்கப்படுகின்றன.
இளம் வயதினர் தங்கள் பொருளாதார இலக்குகளை அடைய வேண்டி, ரிஸ்க் நிறைந்த முதலீடுகளில் ஈடுபட்டே ஆக வேண்டும்; அதில் இழப்பு நேரும் பட்சத்தில் அதைச் சரிகட்டவும், விழுந்த வேகத்தில் எழுந்து ஓடவும் அவர்களால் இயலும். ஆனால், அதிக ரிஸ்க் உள்ள ஒரு முதலீட்டில் இறங்கிய பின், அது ஏதேனும் நஷ்டத்தை விளைவித்தால் புதிதாக சம்பாதித்து அந்த இழப்பை சரிகட்ட 60 வயதினரால் இயலாது. ஆகவேதான் நமக்கு வயது ஏற, ஏற ரிஸ்க் அதிகமுள்ள முதலீடுகளைக் குறைக்க வேண்டியுள்ளது.
பொருளாதார ஆலோசகர்கள் கூறுவது என்ன?
பொருளாதார ஆலோசகர்கள், முப்பது வயதினர் தங்கள் முதலீட்டில் 30 சதவிகிதத்தை ரியல் அஸெட்களிலும், மீதி 70 சதவிகிதத்தை ரிஸ்க் நிரம்பிய ஃபைனான்ஷியல் அஸெட்டுகளிலும் முதலீடு செய்யும்படி அறிவுறுத்துகிறார்கள். அதன்படியே நாற்பது வயதினர் 40 : 60;
- ஐம்பது வயதினர் 50 : 50;
- அறுபது வயதினர் 60 : 40;
- எழுபது வயதினர் 70 : 30 என்ற விகிதாசாரத்தில் ரியல் அஸெட்டுகளிலும், ஃபைனான்ஷியல் அஸெட்டுகளிலும் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது.
Also Read: ஓய்வுக்காலத்தை நெருங்குகிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்த யோசனைகள்! - 54
இன்னொரு விதமான அஸெட் அலொகேஷன்
இன்னொரு முறையில் சொத்துகளை,
- வருமானம் தரும் சொத்துகள்,
- செலவுகளைக் குறைக்க உதவும் சொத்துகள்,
- பணத்தின் மதிப்பு குறைந்து விடாமல் பாதுகாக்கும் சொத்துகள் மற்றும்
- பணமதிப்பை சிதைக்கும் சொத்துகள் என்று நான்கு விதங்களாகப் பிரிக்கலாம்.
வருமானம் தரும் சொத்துகள்
ஃபிக்சட் டெபாசிட்கள் / பாண்டுகள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், வீடு ஆகியவை வட்டி, டிவிடெண்ட் மற்றும் வாடகை என்பது போன்ற பேசிவ் வருமானம் தரக்கூடியவை. ரிட்டயர் ஆகி சம்பளம் வராத நிலையில் இருக்கும் காலத்தில் இவை தரும் வருமானம் மிகவும் உதவியாக இருக்கும்.
செலவைக் குறைக்க உதவும் சொத்துகள்
இன்ஷூரன்ஸைப் பொதுவாக சொத்து வகையில் சேர்ப்பதில்லை. ஏனெனில், அது வருமானம் தருவதோ, பண மதிப்பைக் காப்பதோ இல்லை. ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் மட்டும் மருத்துவச் செலவுகளைக் குறைக்க உதவுவதால் இங்கு இடம் பெறுகிறது. வீடும் ஒரு செலவைக் குறைக்கும் சொத்தாக இருக்க வாய்ப்புண்டு. போகப் போக வாடகை அதிகமாகும் சூழலில் வாடகைச் செலவைக் குறைக்க வீடு உதவுவதால் அதுவும் இங்கு இடம்பெறுகிறது.
பண மதிப்பைக் காக்கும் சொத்துகள்
தங்கம், வீடு, மனை இவை மூன்றும் நம் முதலீட்டின் மதிப்பைக் காக்கும் சொத்துகள். இவை மூன்றுக்கும் உள்ள ஸ்பெஷாலிட்டி என்ன என்றால் லிமிடெட் அவைலபிலிட்டி - அதாவது குறிப்பிட்ட அளவே உலகில் கிடைப்பது (தங்கம் மற்றும் நிலத்தை நாம் உருவாக்க முடியாது). ஆகவேதான் இவை நம் முன்னோர்களால் மிகவும் மதிக்கப்பட்டன.
Also Read: `இவற்றையெல்லாம் செய்தால் ஓய்வுக்காலத்தை பயமின்றி கழிக்கலாம்!' - பணம் பண்ணலாம் வாங்க - 53
பண மதிப்பை சிதைக்கும் சொத்துகள்
அதிகப் பணமதிப்புள்ள பைக், கார், செல்போன் போன்றவற்றை தேவை ஏற்படும்போது விற்றுப் பணமாக்க முடியும் என்பதால் சொத்துகளாக சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், இவை மேற்கூறிய (வருமானம், செலவு குறைப்பு, பண மதிப்பைக் காப்பாற்றுவது) எந்தப் பலனையும் தருவதில்லை என்பதோடு, வாங்கிய மறு நிமிடமே அவற்றின் பண மதிப்பும் குறைந்து விடுகிறது.
உங்கள் வயதைக் கணக்கில் கொண்டு ரியல் அசெட் முதலீடு மற்றும் ஃபைனான்ஷியல் அஸெட் முதலீடு ஆகியவற்றின் விகிதாசாரத்தை தீர்மானிக்கலாம். மேலும், இப்போது உங்களிடம் இருக்கும் சொத்துகளை வருமானம் தருபவை, செலவைக் குறைப்பவை, பண மதிப்பைக் காப்பவை, பண மதிப்பை சிதைப்பவை என்று வகைப்படுத்தி வரக்கூடிய பத்து வருடங்களில் இன்னும் எந்த வகை சொத்தை வாங்குவதால் உங்கள் போர்ட்ஃபோலியோ மேம்படும் அல்லது முழுமை அடையும் என்பதைத் திட்டமிட்டு செயல்படுத்தலாம்.
- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணி சந்திப்போம். அத்துடன் இந்த தொடர் நிறைவு பெறுகிறது.
source https://www.vikatan.com/business/investment/how-to-choose-a-best-investment-option-to-create-wealth-a-simple-guide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக