Ad

திங்கள், 6 டிசம்பர், 2021

திருச்செந்தூர்: மூலவர் சந்நிதியில் திருடப்பட்ட 39 சவரன் தங்க நகைகள் - மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, பெரியார்நகரைச் சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற தபால் ஊழியரான இவர், மனைவி முத்துகமலம், மகன் முத்துபாண்டி, மருமகள் சங்கீதா லட்சுமி மற்றும் பேத்திகள் என குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் வந்திருந்தார். கோயிலின் அருகிலிருக்கும் ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். பின்னர், சாமி தரிசனம் செய்வதற்காக கணேசன் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தார். முடிக்காணிக்கை செலுத்திய கணேசன், கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடிவிட்டு நேர்த்திக்கடனை செலுத்தியிருக்கிறார்.

கணேசனின் பின்னால் நிற்கும் நகை திருடிய மர்மநபர்

அதைத் தொடர்ந்து, ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையில் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கணேசன் தன் தோளில் பேக் ஒன்றை அணிந்திருந்தார். மூலவர் சுப்பிரமணியர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சந்நிதிகளில் தரிசனம் செய்துவிட்டு தங்கக் கொடிமரம் அருகே வந்த போது, அவர் தோளில் அணிந்திருந்த பேக், எடை குறைந்து காணப்பட்டது.

அதனால் அவர், அந்த பேக்கை சோதனை செய்திருக்கிறார். அப்போது, அதில் துணிப் பையில் சுற்றி மடக்கி வைத்திருந்த 39 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை பிளேடால் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மூலவர் சந்நிதிப் பகுதியிலிருக்கும் சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், மூலவர் சுவாமி சுப்பிரமணியர் சந்நிதியில் கணேசன் சுவாமி தரிசனம் செய்த போது, அவருக்குப் பின்னால் நடந்து வந்த ஒருவர், தோள் பேக்கை பிளேடால் வெட்டி துணிப் பையோடு நகை மற்றும் பணத்தை திருடிய காட்சிகள் பதிவாகியிருந்தது.

காவல் நிலையத்தில் புகார் அளித்த கணேசன் மற்றும் அவரது மகன்

இந்த சம்பவம் தொடர்பாக கோயில் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், சி.சி.டி.வி. காட்சிப் பதிகள் மூலம் நகையோடு மாயமான அந்த மர்ம நபரைக் கண்டறியும் பணியில் தனிப்படை போலீஸார் இறங்கியிருக்கின்றனர். திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.14 லட்சம் என்று கூறப்படுகிறது. கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வது போல் வந்து பக்தர்ளோடு பக்தராக வரிசையில் காத்திருந்து மர்ம நபர் ஒருவர் தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: திருச்செந்தூர்: மழையால் சரிந்து விழுந்த கிரிப்பிராகார தடுப்புச்சுவர்... தவிர்க்கப்பட்ட விபத்து!



source https://www.vikatan.com/news/crime/theft-inside-tiruchendur-temple-police-investigation-goes-on

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக