வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஆபரேசன் ஜாப் ஸ்கேம் (operation job scam) தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக காவல்துறையினர் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான வழக்குகளை தூசி தட்டினர். அதன்அடிப்படையில் 58 வழக்குகளில் 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையைச் சேர்ந்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆபரேஷன், 1.11.2021-ம் தேதி முதல் 4.11.2021-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ``அரசு வேலை, வங்கி வேலை, ரயில்வே வேலை என ஆசை வார்த்தைகளைக் கூறி சிலர் பணத்தை வாங்கி மோசடி செய்திருக்கின்றனர். அதில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியனிடம் உதவியாளராக இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரியும் முன்னாள் எம்.எல்.ஏ பரிதி இளம் வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபத் (36), முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தெரியும் எனக்கூறி கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றிய ஹரிநாத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 30 பேர் மீதும் இன்னும் பல புகார்கள் உள்ளன.
இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு இவர்களிடம் இனியும் மக்கள் ஏமாறக்கூடாது. இதுபோன்ற ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவலை தெரிந்துக்கொள்ள காவல்துறை தலைமையிட கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்கள் 044-28447701, 28447703 என்ற எண்ணிலும் 9498105411 என்ற வாட்ஸ்அப் நம்பரிலும் மாநில காவல் கட்டுப்பாட்டறை 044-23452359 சென்னை காவல் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவின் நம்பர் 044-23452380 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: தொழிலதிபரிடம் முகநூலில் பழகி மோசடி! - அனுதாபம் மூலம் ரூ.1.1 கோடி பறித்த தாய், மகள்
இதுதவிர சென்னை போலீஸாரும் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான வழக்குகளில் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுகுறித்த விவரங்கள்: கடலூர் மாவட்டம், பண்ரூட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் டேனியல்ராஜ், ராணி எலிசபெத் ஆகியோர் தங்களுக்கு அரசியல், அரசு அதிகாரிகள் செல்வாக்கு உள்ளதாகக் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் ராதாகிருஷ்ணனின் ஒரு மகனுக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13 லட்சம் வாங்கியுள்ளனர். மேலும் இரண்டு பேருக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 90 லட்சத்தை டேனியல்ராஜ், ராணி எலிசபெத் ஆகியோர் வாங்கியிருக்கின்றனர். அதன்பேரில் 2018-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் கமிஷனரிடம் புகாரளித்தார். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் டேனியல்ராஜ், 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ராணி எலிசபெத் தலைமறைவாக இருந்தார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3.11.2021-ம் ஆண்டு சென்னையில் கைது செய்தனர். இவர் சென்னை சாந்தோம். லீத் கேஸ்ட்லி வடக்கு தெருவில் குடியிருந்து வருகிறார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை செய்து வரும் ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். கடந்த 2020-ம் ஆண்டு வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜெயசீலனிடமிருந்து 2,70,000 ரூபாயை ராஜேஷ் வாங்கியிருக்கிறார். அதன்பேரில் திருவிக நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் கடந்த 2.11.2021-ம் தேதி சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜேஷை (26) கைது செய்தனர். கைதான ராஜேஷ், பஞ்சாப் நேஷனல் வங்கி பெரம்பூர் கிளையில் துப்பரவு பணியாளராக வேலைப்பார்த்து வருகிறார்.
ஆவடி மேற்கு காந்தி நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ரயில்வேயில் பணிபுரிந்து வரும் உறவினரான வெங்கடேசனிடம் 12 லட்சம் ரூபாயை ரயில்வே வேலைக்காக கொடுத்திருக்கிறார். வேலையும் பணத்தையும் கொடுக்காததால் சுரேஷ்குமார், அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் கள்ளிக்குப்பம், பாலாஜிநகரைச் சேர்ந்த வெங்கடேசன் (54) என்பவரை 3.11.2021-ம் தேதி கைது செய்து அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவர் தென்னக ரயில்வேயில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
மதுரை ஆணையூர் கணபதி நகரைச் சேர்ந்தவர் ரங்கசாமி (49). இவர், தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கண்ணன் என்பவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு அரசு வேலைக்காக 30 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார். வேலை வாங்கிக் கொடுக்காததால் ரங்கசாமி, கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சென்னை எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த கண்ணனை 3.11.2021-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மண்ணடியில் உள்ள சிட்டி டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் கார்த்திக். இவர் நிறுவனத்துக்கு வர வேண்டிய பணத்தை இவரின் வங்கி கணக்கிற்கு மாற்றி இதுவரை 11,.04,317 ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார். இதுதொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் ஸ்டீபன் என்பவர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சென்னை எம்கேபி நகரைச் சேர்ந்த கார்த்திக் (40) என்பவரைக் 3.11.2021-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தீபாவளியையொட்டி நடந்த இந்த ஆபரேஷனில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் சிக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/job-racket-cheating-case-30-arrested-after-job-scam-operation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக