Ad

வியாழன், 4 நவம்பர், 2021

இல்லம் தேடிக் கல்வி: `எங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினோம்; திமுக மீது நம்பிக்கை இருக்கிறது’ -முத்தரசன்

``இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தமிழக பள்ளிக் கல்வியை மேலும் மேம்படுத்தும்'' என்று தி.மு.க-வும், ``இல்லை இது ஆர்.எஸ்.எஸ் கொள்கையைப் பரப்பும் திட்டம்" என்று எதிர்க்கட்சிகளும் அனல் பறக்க விவாதித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே, முதலில் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க கூட்டணிக் கட்சியினரும், தற்போது முதல்வர் கொடுத்த விளக்கத்துக்குப் பிறகு இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் இதுதொடர்பான சந்தேகங்களைக் கேள்விகளாக முன்வைத்தோம்.

''புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்காது என ஏற்கெனவே தி.மு.க அரசு கொள்கை முடிவாக அறிவித்துவிட்ட பிறகும்கூட, 'இல்லம் தேடிக் கல்வி'த்திட்டம் குறித்து முதலில் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?''

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் மீதான எங்கள் கட்சியின் கருத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆனால், இதை 'தி.மு.க-வுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான மோதல்' என்பதுபோன்ற மாய பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

'இந்தத் திட்டத்தைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை' என முதல்வரும் விளக்கம் அளித்திருக்கிறார். சமூக நீதி விஷயத்தில், தி.மு.க உறுதியாக நிற்கும் என்பதில் எங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதேசமயம், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப்போகிற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் யார் என்ற கேள்வி எழுகிறபோது, 'அங்கே சங் பரிவார் அமைப்புகள் உள்ளே நுழைய வாய்ப்பு ஏற்படும். அவர்களால் குழந்தைகள் மனதில் மத வெறி எனும் நஞ்சு புகட்டமுடியும்' என்றெல்லாம் நாங்கள் அச்சப்பட்டோம். எனவே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், தமிழக அரசின் கண்காணிப்பின் கீழ்தான் தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். மேலும் தொடர்ந்து அவர்களை அரசு கண்காணித்தும் வரும் என்று அரசுத் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே, இப்போது திட்டத்துக்கு நாங்களும் ஆதரவு தெரிவிக்கிறோம்.''

முத்தரசன்

``அப்படியென்றால், உங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.க அரசு மீது ஆரம்பத்தில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?''

''அப்படியில்லை. சங்பரிவார்கள், ஏற்கெனவே இந்தியா முழுக்க பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறார்கள். அவர்கள் தங்களின் மனுதர்ம கொள்கையை நாளைய தலைமுறையினரிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில், தமிழக அரசு அறிமுகப்படுத்துகிற 'இல்லம் தேடிக் கல்வி'த் திட்டத்திலும் அவர்கள் ஊடுருவிவிட பெரும் வாய்ப்பு இருக்கிறது என்ற எங்கள் அச்சத்தைத்தான் வெளிப்படுத்தினோம். முதல்வரும் தி.மு.க அரசும் அதற்கான எள் முனை வாய்ப்பைக்கூட ஏற்படுத்திவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது."

''`பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு, தி.மு.க அரசு அடிபணிந்தே போகும்' என்ற அரசியல் விமர்சனங்கள் எழுகிறதே?''

``நீங்கள் சொல்வதுபோல, ஒன்றிய அரசுக்குப் பயந்துபோனதாக தி.மு.க அரசு இருந்திருந்தால், நீட் தேர்வு மற்றும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்களை இயற்றியிருக்க முடியாது, ஒன்றிய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்திலும் பங்கேற்றிருக்க முடியாது.
இன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு, கல்வி விஷயத்தில் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்து வருகிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில் மட்டும் இதுவரையிலும் நாம் 17 உயிர்களை இழந்திருக்கிறோம். அதனால்தான் நீட் தேர்வை எதிர்ப்பதில் தி.மு.க அரசும் உறுதியாக இருக்கிறது. எனவேதான், இதுகுறித்து ஆய்வுக்குழு அமைத்து ஆய்வு செய்ததோடு, சட்டமன்றத்திலும் எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் பெற முதல்வரே நேரில் சென்று முனைப்புக் காட்டியும் வருகிறார்.
மத்திய-மாநில ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களிடையே உறவு நீடிப்பதுதான் நல்ல ஜனநாயக முறை. ஆனால், ஒருவருக்கு அடிமையாக இருந்துதான், உறவை நீட்டிக்க வேண்டும் என்றால், அது ஜனநாயகமே அல்ல. அந்தப் பாதையை தி.மு.க அரசும் ஏற்றுக்கொள்ளாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்."

ஸ்டாலின், மோடி

''விவசாயிகள் போராட்டம், தொழிலாளர்கள் வேலையிழப்பு, பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு என பிரச்னைகள் ஆயிரம் இருந்தும், பா.ஜ.க-வுக்கு மக்கள் செல்வாக்கு குறையவில்லையே?''

''பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்தானே போராடிக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் யாரும் கிளர்ந்தெழவில்லையே என்று சொல்ல வருகிறீர்கள். மக்கள் பிரச்னைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி மக்களை விழிப்படையச் செய்வதுதான் அரசியல் கட்சிகளின் கடமை. அதை நாங்கள் சரியாகவே செய்துவருகிறோம். அதற்கான உதாரணம்தான், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம். மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்கும் அரசாக ஒன்றிய பா.ஜ.க அரசு இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத இந்த சர்வாதிகார அரசின் போக்கை மக்களும் புரிந்துகொண்டுதான் வருகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அந்த மாநில அரசு எப்படியெல்லாம் நடந்துகொண்டு வருகிறது என்ற உண்மைகளை எல்லாம் நீதிமன்றமே இன்றைக்கு விமர்சிக்கிறது, அம்பலப்படுத்துகிறது. அதேபோல, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு மற்றும் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்த ஒன்றிய பா.ஜ.க அரசே, இன்றைக்கு `அந்தச் சட்டங்களை எல்லாம் நிறுத்திவைக்கிறோம்' என்கிறது நீதிமன்றத்தில். நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உறுதியுடன் அமல்படுத்த வேண்டும் அல்லது திரும்பப்பெறவேண்டும். ஆனால், இந்த இரண்டில் ஒன்றைச் செய்யாமல், 'நிறுத்தி வைக்கிறோம்' என்று அவர்கள் சொல்வதே மக்களின் எதிர்ப்புக்குப் பயந்துதானே!"

Also Read: ஆளுநர் தலையீட்டுக்கு தி.மு.க சொல்லும் விளக்கம் ஏற்புடையது அல்ல!

''இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பா.ஜ.க வலுவாக இருக்கும் என்று அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சொல்லியிருக்கிறாரே?''

''அன்றாடம் எளிய மக்கள் பயன்படுத்திவருகிற சாதாரண பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால், விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படக்கூடிய முதல்தர பெட்ரோலின் விலை இன்றைக்கும் 70 ரூபாய்தான்.
ஆக, ஏழை எளிய மக்களுக்கு 100 ரூபாயைத் தாண்டியும் விற்றுவருகிற இதே ஒன்றிய பா.ஜ.க அரசுதான், கோடீஸ்வரர்கள் நடத்திவருகிற விமான கம்பெனிகளுக்கும் அந்த விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகிற கோடீஸ்வரர்களுக்கும் சலுகை செய்யும்விதமாக 70 ரூபாய்க்கு பெட்ரோலை விற்றுவருகிறது. ஆனால், இந்த உண்மை நிலவரம் பெரும்பாலான பொதுமக்களுக்கு இன்னமும் போய்ச் சேரவில்லை.
200 ஆண்டுக்காலம் இந்த நாட்டை வெள்ளையனும் ஆண்டுகொண்டுதான் இருந்தான். ஆனால், மக்களிடையே விடுதலை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகுதான் 'வெள்ளையனே வெளியேறு' என்று முழுமூச்சோடு முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடிக்க முடிந்தது. அதுபோல, இப்போது உள்ள ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடையே எடுத்துச்சொல்லி விழிப்படைய வைக்கும் பணிகளில் கம்யூனிஸ்ட்கள் தீவிரமாகக் களமாடிவருகிறோம். எனவே, விரைவில் ஒன்றிய பா.ஜ.க அரசு துடைத்தெறியப்படும்!''

முத்தரசன்

''ஆனால், அண்மையில்கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது நம்பிக்கை இல்லாமல், கன்ஹையா குமார் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார்தானே?''

''கன்ஹையா குமார், டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர், மாணவர் சங்க முன்னாள் தலைவர். அவர் மீது பல்வேறு வழக்குகளும்கூட இருந்தன. எனவே, கம்யூனிஸ்ட் கட்சியின் உதவி அவருக்கும் தேவைப்பட்டது. ஜனநாயகத்துக்காக நாங்களும் உதவி செய்தோம்.
இளம் தலைமுறையினரில் நாடறிந்த தலைவர் என்ற வகையில் பல்வேறு கூட்டங்களிலும் பங்கேற்றார். அதேநேரம் தன்னைப்பற்றிய அவரின் மதிப்பீடு என்பது மிகை மதிப்பீடாகவே இருந்தது. அதாவது, 'கட்சியில் நான் இருப்பதால்தான், என் பேச்சைக் கேட்கவும் மக்கள் வருகிறார்கள்' என்ற உண்மை நிலையை உணராமல், 'நான் சொல்வதால்தான் அனைவரும் கேட்கிறார்கள்' என்றளவுக்கு தன்னிடம் மிகையான செல்வாக்கு இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டார். எல்லைக் கோட்டைத் தாண்டி காங்கிரஸ் கட்சிக்கும் போய்விட்டார். எதிர்காலத்தில், படிப்பினை பெறுவார்.''

''கடந்த காலங்களில், மத்திய அரசுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வல்லமைபெற்ற தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தனர். ஆனால், இன்று அதுபோன்ற தலைவர்கள் கட்சியில் இல்லையா அல்லது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைக் கம்யூனிஸ்ட்டுகள் இழந்துவிட்டனரா?''

''அரசியலில் எப்போதுமே வெற்றிடம் என்பது இல்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பரதன் போன்ற மூத்த தலைவர்கள் இருந்த இடத்தில் இன்றைக்கு டி.ராஜா இருக்கிறார். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன் மாதிரியான மதிப்புமிக்கத் தலைவர்கள் இருந்த இடத்தில் இன்றைக்கு சீதாராம் யெச்சூரி இருந்துவருகிறார்.
ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போன்ற மூத்த தலைவர்கள் எப்படியெல்லாம் முயற்சி மேற்கொண்டார்களோ அதேபோன்று இன்றைய இளம் தலைவர்களும் மிகக் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனால்தான் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடு முழுவதும் 19 எதிர்க்கட்சிகளைக் காங்கிரஸ் தலைமையில் ஓரணியாகத் திரட்ட முடிந்தது. தமிழ்நாட்டில், தி.மு.க-வுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் இதில் பங்குபெற வைத்திருக்கிறோம்.

முத்தரசன்

எனவே, கம்யூனிஸ்ட் தலைவர்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றது.
எதிரி யார் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. அதேசமயம், அந்த எதிரியை வீழ்த்துவதற்கு எங்கள் சொந்த பலம் மட்டும் போதாது என்பதும் வெளிப்படையானது. எனவே, ஜனநாயகம், மதச்சார்பற்ற கொள்கை மற்றும் அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். அதில், வெற்றியும் பெற்று வருகிறோம்".



source https://www.vikatan.com/government-and-politics/politics/marxist-communist-leader-mutharsan-interview-about-current-political-affairs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக