Ad

செவ்வாய், 2 நவம்பர், 2021

`திருமணத்தைத் தாண்டிய உறவால் விபரீதம்!’ - மாமியாரால் மருமகனுக்கு ஏற்பட்ட சோகம்

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்திருக்கும் கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் வேல்முருகன். இவருக்கும், வேப்பூரில் வசித்துவரும் இவரின் அக்கா குமுதாவின் மகள் பவித்ரா என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பவித்ரா தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், பிரசவத்துக்காக வேப்பூரிலுள்ள அம்மா வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறார். கடந்த அக்டோபர் 28-ம் தேதி இரவு மனைவியைப் பார்த்துவருவதாகக் கூறி வேப்பூரிலுள்ள தனது மாமியார் (அக்கா) வீட்டுக்குச் சென்றார். அன்றிரவு அங்கேயே தங்கிய வேல்முருகன் தூக்கு போட்டுக்கொண்டார் என அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்ட வேல்முருகன்

அதைத் தொடர்ந்து தன் மகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக வேல்முருகனின் தாய் மலர்கொடி வேப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் வேல்முருகனின் உடலைப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் வேல்முருகனின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், வேல்முருகனைக் கொலை செய்தவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று வேப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து வேல்முருகன் மரணத்தை கொலை வழக்காக மாற்றிய போலீஸார், அவரி மனைவி பவித்ராவையும் மாமியார் குமுதாவையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.

விசாரணையில் வேல்முருகனைக் கொலை செய்ததாக அவரின் மாமியார் குமுதா ஒப்புக்கொண்டதுடன் அதற்கான காரணத்தைக் கூறியபோது போலீஸாரே அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். குமுதா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``வேல்முருகனின் தந்தை பெரியசாமிக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் முதல் மனைவிக்குப் பிறந்தவர் குமுதா, இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் வேல்முருகன். அக்கா, தம்பியான இருவரும் ஒரே வீட்டிலேயே வளர்ந்திருக்கின்றனர். இருபது வருடங்களுக்கு முன்பு குமுதா திருமணமாகிச் செல்லும்போது வேல்முருகன் 7 வயது குழந்தையாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குமுதாவுக்கு வேல்முருகனுடன் திருமணம் தாணடிய உறவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் குமுதாவைச் சந்திக்க அடிக்கடி வேப்பூரிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார் வேல்முருகன். இருவரும் அக்கா, தம்பி என்பதால் குமுதாவின் கணவர் உள்ளிட்ட யாருக்கும் இவர்களது சந்திப்பில் சந்தேகம் எழவில்லை.

கைதுசெய்யப்பட்ட குமுதா

கடந்த ஆண்டு வேல்முருகனுக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய் முடிவு செய்த நிலையில், பிரிய மனமில்லாமல் இருவரும் தவித்திருக்கின்றனர். அப்போது `உன் மகளை எனக்குத் திருமணம் செய்துகொடுத்தால் கடைசிவரை நாம் ஒன்றாக இருக்கலாம்’ என்று குமுதாவிடம் கூறியிருக்கிறார் வேல்முருகன். அந்த முடிவு குமுதாவுக்கும் சரியென்று தோன்றியதால் 2021, ஜனவரி மாதம் குமுதாவின் மகள் பவித்ராவைத் திருமணம் செய்திருக்கிறார் வேல்முருகன். அதையடுத்து குமுதாவும் வேல்முருகனும் வழக்கம்போல தங்களது நட்பை வளர்த்துவந்திருக்கின்றனர்.

அக்காவைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு அடிக்கடி குமுதாவைச் சென்று சந்தித்திருக்கிறார் வேல்முருகன். இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் 28-ம் தேதி தன் மனைவியை பார்க்கச் சென்றிருக்கிறார் வேல்முருகன். மதுபோதையிலிருந்த அவர், மனைவி உறங்கியவுடன் பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்த அக்கா குமுதாவிடம் தனது விருப்பத்துக்கு ஒத்துழைக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார்.

Also Read: புதுச்சேரி: பள்ளிச் சிறுமியின் ஆபாச வீடியோ; அலறிய பெற்றோர்! -ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்

மகள் பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்ததால் அதற்கு மறுத்திருக்கிறார் குமுதா. அதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் வேல்முருகன். அப்போது `சத்தம் போடாதே!' என வேல்முருகனின் கழுத்தை குமுதா நெரித்ததால் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி சடலமாகச் சரிந்திருக்கிறார் வேல்முருகன். அதில் பயந்துபோன குமுதா, வேல்முருகனின் கழுத்தில் புடவையைக் கட்டி வீட்டின் மேற்கூரையில் கட்டி தொங்கவிட்டுவிட்டு, பக்கத்து அறைக்குச் சென்று மகளை எழுப்பி, `உன் கணவர் தூக்கு போட்டுக்கொண்டார்’ என்று கூறியிருக்கிறார். அதில் அதிர்ச்சியடைந்த அவர் தன் தாயுடன் சேர்ந்து, தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த கணவரை இறக்கி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பிரேத பரிசோதனையில் சிக்கிக்கொண்ட குமுதாவைக் கொலை வழக்கில் கைதுசெய்துவிட்டோம்” என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/in-cuddalore-woman-arrested-under-the-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக