Ad

சனி, 6 நவம்பர், 2021

சீனா: `வூஹானில் கொரோனா குறித்து செய்தி திரட்டிய பெண் பத்திரிகையாளர்; சிறையில் கவலைக்கிடம்!'

2019-ம் ஆண்டு, சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் பரவி, அதிக அளவில் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஜாங் ஜான் (Zhang Zhan) என்பவர், 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் வூஹான் மாகாணத்துக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வூஹான் மாகாணத்தின் சூழ்நிலையைக் கட்டுரையாகவும், காணொளிப் பதிவாகவும் தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தார். மேலும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சீன அரசாங்கத்தின் செயல்பாட்டை விமர்சித்து ஜாங் ஜான் கேள்வியும் எழுப்பிவந்தார். அவர் சீன அரசு, மக்களுக்குப் போதுமானத் தகவல்களை வழங்காமல், வூகான் மாகாணத்தைப் பூட்டி, ஒரு பெரிய மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருவதாகக் குற்றம்சாட்டினார்.

கொரோனா வைரஸ்

ஜாங் ஜானின் வீடியோக்களும், கட்டுரைகளும் யூ டியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால், 2020-ம் ஆண்டு மே மாதம் ஜாங் ஜான் சீன அரசால் கைது செய்யப்பட்டார். சீன அரசின் சட்டத்தை மீறிச் செயல்பட்டதாகக்கூறி, 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் ஷாங்காய் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சீன அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாங் ஜான், சிறையிலேயே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அதனால், அவரின் உடல்நிலை மோசமடைந்து, மூக்கின் வழியே டியூப் செலுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக அவருக்கு உணவு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாங் ஜானின் உடல்நிலை தற்போது மேலும் மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஜாங் ஜானின் சகோதரர் ஜாங் ஜூ என்பவர், ஜானின் உடல்நிலைகுறித்து தனது சமூக வலைதள கணக்குகளில் தொடர்ச்சியாகப் பதிவிட்டுவருகிறார். அதில் அவர், ``எனது சகோதரியின் உடல்நிலை மிகக்கடுமையாக மோசமடைந்து வருகிறது. இந்த குளிர்காலத்தில் அவர் உயிருடன் இருப்பாரா என்றுகூடத் தெரியவில்லை. அவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். ஐ.நா. சபை தலையிட்டு, என் சகோதரியை மீட்க வேண்டும். அவருக்குச் சரியாக மருத்துவ சிகிச்சையளிக்க சீன அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

சீன பெண் பத்திரிகையாளர் ஜாங் ஜான்

ஜாங் ஜானின் உடல்நிலை குறித்த செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஜாங் ஜானை உடனடியாக விடுவிக்கவேண்டும் எனக்கோரி, சீன அரசை வலியுறுத்தி இருக்கிறது.

Also Read: `வூஹான் ஆய்வகத்திலிருந்து பரவிய கொரோனா..?' - அதிர வைக்கும் அமெரிக்க உளவுத்துறை அறிக்கை?!



source https://www.vikatan.com/government-and-politics/international/journalist-zhang-zhan-who-was-jailed-by-the-chinese-government-now-close-to-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக