கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாகத் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தன. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறாமல், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்த நிலையில், `நவம்பர் 1-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்' என்ற அறிவிப்பை வெளியிட்டு, தமிழக அரசு அண்மையியல் பள்ளிகளை முழுமையாகத் திறந்தது.
அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, மாலை அணிவித்து ஆசிரியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அதிலும், குறிப்பாக சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அரசு துவக்கப் பள்ளியில், ஆசிரியர்கள் யானையை அழைத்து வந்து மாணவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சென்னையில் மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் அரங்கேறியிருக்கும் சர்ச்சை சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்ச்சை சம்பவம் :
பெருநகரச் சென்னை மாநகராட்சியில், மொத்தம் 281 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 211 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மழலையர்கள் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகரில் செயல்பட்டுவரும் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஒரு சம்பவம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களை எஸ்.சி, எம்.பி.சி, பி.சி, எனச் சாதி அடைப்பிடையில் பிரித்து, பட்டியல் தயாரித்து, பள்ளிக்கு அழைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன நடந்தது?
எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அந்த பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசினோம். ``எங்கள் பள்ளியில் வருகை பதிவேட்டில் மாணவர்களின் பெயர்கள் எஸ்.சி, எம்.பி.சி, பி.சி என்ற வரிசையில் எழுதப்படுவது வழக்கம். அந்த வகையில், முதல் பத்து மாணவர்களை ஒரு பேட்ச்சில் போடும்போது ஒரே சாதியைச் சேர்ந்த மாணவர்கள் வந்துவிட்டார்கள். இது எதேச்சையாக நடந்த ஒன்றே தவிரச் சாதி அடிப்படையில் மாணவர்களை நாங்கள் பிரிக்கவில்லை" என்று விளக்கமளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) சினேகாவிடம் பேசினோம். ``நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அந்த பள்ளி தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. வரும் பதிலின் அடிப்படையில் விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வருகை பதிவேட்டில் மாணவர்களின் பெயர் அகர வரிசையில் தான் எழுதப்படுவது வழக்கம். சாதி அடிப்படையில் எழுதுவது வழக்கத்தில் இல்லாத ஒன்று. தற்போது அந்த பெயர் பட்டியல் மாற்றப்பட்டுவிட்டது. மேலும் சென்னையில் மற்ற மாநகராட்சிப் பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றனவா என்பதையும் ஆய்வு செய்தோம். ஆனால், மற்ற பள்ளிகளில் அப்படி எதுவும் இல்லை" என்றார்.
சென்னை போன்ற பெருநகரத்திலேயே இதுபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. `இனி வரும்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிகளிலும் நடக்காமல் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்' என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Also Read: சாதிவாரியாகப் பிரித்து, பள்ளிக்கு வரவழைக்கப்பட்டார்களா மாணவர்கள்?! விளக்கம் கேட்ட இணை ஆணையர்
source https://www.vikatan.com/government-and-politics/education/article-about-caste-discrimination-controversy-in-chennai-corporation-school
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக