Ad

புதன், 20 அக்டோபர், 2021

TRUTH - `சொந்தமாக சமூக வலைதளம் தொடங்குகிறார் டொனால்ட் டிரம்ப்!'

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப்பை வீழ்த்தி அமெரிக்க அதிபரானார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஜோ பைடனின் பதவியேற்பு விழாவின்போது முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கேப்பிடல் கட்டடத்தை முற்றுகையிட்டு பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அங்கு மிகப்பெரியளவில் வன்முறை வெடித்தது. டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோதலை ஏற்படுத்தும் வகையில், நடந்து கொண்டதாலும், சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவதூறாகக் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததாலும், ட்விட்டர் நிறுவனம் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. ட்விட்டரில் சுமார் 9 கோடி பேரால் பின்தொடரப்பட்டு வந்த டிரம்ப்பின் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூ-டியூபிலிருந்தும் அவரின் கணக்குகள் முடக்கப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டரை ஆண்டுகள் தடை விதித்திருந்த நிலையில், கூகுள் நிறுவனம் காலவரையற்ற தடை விதித்தது.

முடக்கப்பட்ட சமூக வலைதள கணக்குகள்

Also Read: `எனக்கா எண்டு கார்டு?'- ட்விட்டர், ஃபேஸ்புக் போலவே புதிய சமூக வலைதளத்தை உருவாக்கும் அதிபர் ட்ரம்ப்!

தன்னுடைய சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து டொனால்ட் டிரம்ப், ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மீது புளோரிடாவின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிதாக சமூக வலைதளம் ஒன்று தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 'TRUTH' சோசியல் மீடியா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சமூக வலைதளம் டிரம்ப்பின் (TMTG - Trump Media & Technology Group) நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த வலைத்தளத்தில் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்கள் சந்தா முறையில் பதிவிடப்படும் என்றும், சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த வலைதளமானது அடுத்த மாதம் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் பீட்டா முறையில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

'TRUTH' சோசியல் மீடியா

TRUTH சோசியல் மீடியா தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றில் பேசிய டொனால்ட் டிரம்ப், ``பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தன்னிச்சையான கொடுங்கோல் போக்கை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்த சமூக வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன். ட்விட்டரில் தாலிபன்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் உலகில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மௌனமாக இருந்து வருகிறார். அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தார். டிரம்ப்பின் TRUTH சோசியல் மீடியா குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/international/donald-trump-launching-new-social-media-platform-named-truth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக