Ad

புதன், 20 அக்டோபர், 2021

Doctor Vikatan: இரவில் சீக்கிரம் சாப்பிட்டால் ஈஸியாக எடை குறையுமா?

இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவதன் மூலம் எளிதில் எடையைக் குறைக்கலாம் என்கிறார்களே... அது உண்மையா? ரொம்பவும் சீக்கிரம் சாப்பிடும்போது, இரவில் பசி எடுத்தால் என்ன செய்வது?

- முரளி (விகடன் இணையத்திலிருந்து)

ரேச்சல் தீப்தி

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி.

``உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இரவு உணவை சீக்கிரமே சாப்பிடுவது. ஆனால் இந்தப் பழக்கம் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நபரின் வாழ்க்கைமுறையும் வெவ்வேறானது. எனவே எடைக்குறைப்புக்கான திட்டமிடல் என்பது அந்த நபரின் வயது, வாழ்க்கைமுறை என பல விஷயங்களைப் பொறுத்து டயட்டீஷியனின் உதவியோடு மேற்கொள்ளப்பட வேண்டியது.

இரவு உணவை சீக்கிரமே எடுத்துக்கொள்வது என முடிவெடுத்தால் சீக்கிரமே தூங்கச் செல்வதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இரவில் பசியெடுக்காமலிருக்கும். தவிர `நான் இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறேனே... ஏதாவது சாப்பிடலாமே...' என உங்கள் மூளைக்குத் தவறான சிக்னல் செல்வதையும், சீக்கிரமே தூங்கச் செல்வதன் மூலம் தவிர்க்க முடியும். எனவே உண்பதும் உறங்குவதும் உங்கள் உயிரியல் கடிகாரத்தை பாதிக்காதபடி அமைய வேண்டியது மிக அவசியம்.

Sleep

Also Read: Doctor Vikatan: பீரியட்ஸின் போது வலியை ஏற்படுத்தும் அடினோமயோசிஸ்; தீர்வு என்ன?

ஒருவேளை நீங்கள் டயட்டீஷியனின் ஆலோசனையோடு இரவு உணவை சீக்கிரமே எடுத்துக்கொள்வதென முடிவெடுத்தால், சாப்பிட்டதற்கும் தூங்குவதற்குமான அந்த இடைவெளியில் பசியெடுப்பதைத் தவிர்க்க, பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸையோ, பூசணி விதை, சூரியகாந்தி விதைகளையோ, பொட்டுக்கடலை, பொரி, பேரீச்சம் பழம், ப்ரூன்ஸ், உலர் திராட்சை, உலர் நெல்லிக்காய் போன்றவற்றையோ சிறிது எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள்தூள் சேர்த்துக் காய்ச்சிய கொழுப்பில்லாத பால் குடிக்கலாம். ஏதேனும் பழம் சாப்பிடலாம். உப்பு சேர்க்காத பாப்கார்ன், தாமரை விதை சாப்பிடலாம். சூப் அல்லது வேர்க்கடலை வெண்ணெய் (பீநட் பட்டர்) உடன் ஒரு ஸ்லைஸ் பிரெட் அல்லது ஒரு ரொட்டி சாப்பிடலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/will-eating-the-dinner-earlier-helps-in-weight-loss

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக