Ad

புதன், 6 அக்டோபர், 2021

உள்ளாட்சித் தேர்தல்: `அதிகாரிகளுக்கு திமுக ரகசிய உத்தரவு’ - வேலூர் அதிமுக புகார்!

திமுக-வுக்கு ஆதரவாகச் செயல்படாமல், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நியாயமான முறையில் நடத்தக் கோரி அ.தி.மு.க-வின் வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன், பொருளாளர் மூர்த்தி ஆகியோரின் தலைமையில் அந்தக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனைச் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ``ஆளும் தி.மு.க அரசுக்குச் சாதகமாகச் செயல்படாமல், ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தேர்தலை நடத்த வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவை நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். 2006-ல் தி.மு.க அரசு அமைந்தவுடன் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலின்போதும், அரசு அதிகாரிகள் தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். முறைகேடாக தி.மு.க-வினர் பெற்ற அராஜக வெற்றியை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் மூலம் `ரத்து ஆணை’ பெற்று மறு தேர்தல் நடத்தவைத்திருக்கிறோம் என்பததையும் நினைவூட்டுகிறோம்.

Also Read: உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஸ்கோர் செய்யும் கட்சி எது? - அரசியல் விமர்சகர்கள் அலசல்

எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவித பாரபட்சமும் இன்றி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து வேலூர் எஸ்.பி அலுவலகத்திலும் அதே போன்றதொரு மனுவை அ.தி.மு.க-வினர் அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அ.தி.மு.க நிர்வாகிகள்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன் இருவரும், ``ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் அவர்களது வேட்பாளர்களை மட்டுமே வெற்றிப்பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. வேலூர் மாவட்ட அதிகாரிகளுக்கும் அப்படியொரு உத்தரவை இங்குள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாய்மொழியாகச் சொல்லியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அ.தி.மு.க-வினர் வெற்றிபெற்றாலும் அவர்கள் தோல்வி என்றே அறிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். எனவே, தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்திருக்கிறோம்’’ என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/news/local-body-election-dmk-secret-order-vellore-admk-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக