ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் இன்று மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடக்கிறது. மாவட்ட கவுன்சிலர்கள் கூடி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவரை தேர்வுச்செய்கிறார்கள். ஒன்றியக் கவுன்சிலர்கள் கூடி தங்களுக்கான ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவரை தேர்வுச் செய்கிறார்கள். கிராம வார்டுகளில் வெற்றிப்பெற்ற உறுப்பினர்களுள் ஒருவர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். மறைமுகத் தேர்தலையொட்டி, சரியாக காலை 10 மணிக்கு அனைவரும் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வந்துவிட வேண்டும்.
தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு படிவம் 27 (ஏ) வழங்கப்படும். வேட்பாளர், அந்த படிவத்தில் சுய விபரம், போன்றவற்றை எழுதிவிட்டு உறுதிமொழி கையொப்பமிட வேண்டும். அதில், முன்மொழிவோர், வழிமொழிவோரின் கையொப்பமும் இடம் பெற வேண்டும். முதலில், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுகின்றன. எத்தனைப் பேர் போட்டியிடுகிறார்கள் எனத் தெரிந்துகொண்டு... அதற்கேற்ப வாக்குச்சீட்டு தயாரித்து உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அதில், வேட்பாளரின் பெயர், வார்டு எண்ணை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் கையொப்பமிடுவார்.
ஓட்டுப் போடுவதற்காக கூட்ட அரங்கில் மறைவான ஓரிடம் ஏற்படுத்தப்பட்டு, வாக்குப் பெட்டி வைக்கப்படும். கவுன்சிலர்கள் அங்குச் சென்று தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயருக்கு நேராக ‘டிக்’ மட்டுமே செய்ய வேண்டும். பெருக்கல் குறி அல்லது வேட்பாளரின் பெயருக்கு நேராக கையெழுத்துப் போட்டால், அது செல்லாத ஓட்டு என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கவுன்சிலர்கள் காலை 10 மணிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். காலம் கடந்துவந்தால் மனு ஏற்கப் படாது. ஒரு நபருக்குமேல் வேட்பு மனுத் தாக்கல் செய்தால் மட்டுமே அந்தப் பகுதிக்கான தலைவர் தேர்தல் நடத்தப்படும். ஒரே நபர் மட்டுமே மனுத் தாக்கல் செய்யும் பட்சத்தில், அவர் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்படும்.
தலைவர் தேர்தல் முடிந்தவுடன் மதியம் 2.30 மணிக்கு மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்படுகின்றன. அதற்கும் தலைவர் தேர்தலுக்கான நடைமுறையே பின்பற்றப்படும். நேற்று முன்தினம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளாத கவுன்சிலர்கள் இன்று காலை மறைமுகத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மறைமுகத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக அவர்கள் கருதப்படுவார்கள்.
மேலும், சூழ்நிலை மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு, தேவைப்படும் இடங்களில் மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகள் வீடியோ பதிவும் செய்யப்படுகின்றன. தேர்தல் நடத்தும் அலுவலரைத் தவிர வேறு யாரும் கூட்ட அரங்கிற்குள் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. ஆபத்தை விளைவிக்கும் கொடிய ஆயுதங்கள், பேனா போன்ற உபகரணங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை காவல்துறையினர் உறுதிச் செய்வார்கள். அதன்படி, ஒன்பது மாவட்ட உள்ளாட்சி அலுவலகங்களிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது!
source https://www.vikatan.com/government-and-politics/politics/local-body-chairman-post-indirect-election-procedure-how-to-vote
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக