சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் சிவராமன் (65). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி குடும்பத்தினரோடு உறவினர் ஒருவரின் வீட்டின் சுபநிகழ்ச்சிக்கு காரில் புழுதிவாக்கம் எம்ஆர்டிஎஸ் ரோடு, மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது இன்னொரு காரில் வந்தவர்கள் சிவராமனை கடத்தினர். இதுகுறித்து சிவராமனின் மகன் கார்த்திக் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதில், ``நான் கோவளத்தில் ஜூஸ் கடை நடத்தி வருகிறேன். எனது தந்தை சிவராமனும் எனது சித்தப்பாவும் வேலை வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் வாங்கியிருந்தனர். எனது சித்தப்பா கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அதனால் பணம் வாங்கியவர்களிடம் எனது அப்பா சிவராமன் பணத்துக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்தச் சமயத்தில் 16-ம் தேதி மாலை 5 மணியளவில் நாங்கள் சென்ற காரை வழிமறித்து இன்னொரு கார் நிறுத்தப்பட்டது. காரில் ஒரு பெண் உள்பட சிலர் இருந்தனர். அவர்கள், காரிலிருந்த என்னுடைய அப்பா சிவராமனை பிடித்து வெளியில் இழுத்தனர். அதை நான் தடுத்தேன். அப்போது அவர்கள் என்னை தள்ளி விட்டுவிட்டு சிவராமனை அவர்கள் வந்த காரில் கடத்திச் சென்றுவிட்டனர்.
Also Read: பணத்துடன் தப்பிய கடத்தல் கும்பல்; ஜேம்ஸ்பாண்டாக மாறிய தலைமைக் காவலர் - சென்னையில் பரபர ஆக்ஷன்!
பணம் பிரசனை தொடர்பாக மதுரை காவல் நிலையத்திலும் தூத்துக்குடி டிசிபியிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் என்னுடைய அப்பா கடத்தப்பட்டதும் பணம் கொடுத்தவர்களிடம் விசாரித்தேன். ஆனால் தகவல் கிடைக்கவில்லை. என்னுடைய அப்பாவுக்கு 65 வயதாகுகிறது. அதனால் அவருக்கு என்ன ஆகுமோ என பயமாக இருக்கிறது. எனவே என்னுடைய அப்பாவை மீட்டு கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
Also Read: பணத்துடன் தப்பிய கடத்தல் கும்பல்; ஜேம்ஸ்பாண்டாக மாறிய தலைமைக் காவலர் - சென்னையில் பரபர ஆக்ஷன்!
அதன்பேரில் ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். காரின் பதிவு நம்பர், சிவராமனின் செல்போன் சிக்னல் ஆகியவற்றை போலீஸார் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது கடத்தல் கும்பல் இருக்கும் இடம் தெரிந்ததும் போலீஸார் அங்குச் சென்று சிவராமனை மீட்டனர். மேலும் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50), அவரின் மனைவி பாக்யலட்சுமி (38), திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த கிருஷ்ணன் (38) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடத்தப்பட்ட சிவராமன், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராதாகிருஷ்ணனிடம் 12 லட்சமும் கிருஷ்ணனிடம் 9 லட்சமும் வாங்கியிருக்கிறார். ராதாகிருஷ்ணனின் மனைவி பாக்யலட்சுமிக்கு ரயில்வேயில் வேலை வாங்கிக் கொடுப்பதாக சிவராமன் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் பாக்யலட்சுமிக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதைப் போல கிருஷ்ணனும் சிவராமனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்திருக்கிறார். அதனால் ராதாகிருஷ்ணனும் கிருஷ்ணனும் சேர்ந்து, சிவராமனைக் கடத்தி பணத்தை வாங்க திட்டமிட்டிருக்கின்றனர். சிவராமனைக் கடத்திய குற்றத்துக்காக ராதாகிருஷ்ணன், அவரின் மனைவி பாக்யலட்சுமி, கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்திருக்கிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/couple-arrested-in-kidnapped-case-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக