Ad

வியாழன், 7 அக்டோபர், 2021

நவராத்திரி நாள் - 2: கொலு வைப்பதன் காரணம் என்ன? அதன் பின்னிருக்கும் தாத்பர்யம் என்ன?

நேற்று நவராத்திரி தொடங்கிவிட்டது. கொலு வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் வீட்டில் இந்நேரம் சகல பொம்மைகளும் கொலு வீற்றிருக்கும். கொலு வைத்துள்ள வீடே லட்சுமி கடாட்சமாக விளங்கி விருந்தினர்கள் வருகையால் களைகட்டி இருக்கும். அது சரி இந்தப் புரட்டாசி மாதத்தில் அம்பிகை அசுரனை வதம் செய்த காலத்தில் ஏன் கொலு வைக்கிறோம் தெரியுமா?
காந்திமதி அம்மை

சுரதா என்ற அரசன் தனது அண்டை நாட்டு அரசனால் பெரிதும் அவதிப்பட்டு வந்தான். அடிக்கடி எல்லையை மீறி பொதுமக்களுக்குத் தொல்லைகள் தந்து வரும் அண்டை நாட்டு அரசனை ஒடுக்க தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டான். அவர் ஆலோசனைப் படி, நவராத்திரி நாள்களில் அம்பிகையை வழிபட சித்தமானான். அப்போது குரு சுமதா கூறியபடி ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, அம்பிகை ரூபத்தைச் செய்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து கடுமையான விரதம் இருந்து வேண்டினான்.

இதனால் அம்பிகை மனம் மகிழ்ந்து அவனது படை பலம் பெருக ஆலோசனை கூறினாள். அதன்படி யானைகள், குதிரைகள், தேர்கள், வீரர்கள், போர்க் கருவிகள் யாவும் களிமண்ணால் செய்து அம்பிகை கூறிய மந்திரத்தைச் சொல்லி பூஜித்ததும் அவை எல்லாம் நிஜமாகின. இந்தப் பெரும்படையைக் கொண்டு எதிரிகளை வென்று சுரதா நிம்மதி கொண்டான் என்கிறது புராணம்.

இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டே பின்னாளில் அனைவரும் தமக்கு விருப்பமான பொருள்களை, செல்வங்களை களிமண்ணால் உருவாக்கி அம்பிகையை வேண்டி வழிபட ஆரம்பித்தனர் என்கின்றன ஆன்மிக நூல்கள். அதுவே தற்போது கொலு வைக்கும் பழக்கமாக மாறியிருக்கிறது.
அம்பிகை
அம்பிகையைக் கொண்டாடும் நவராத்திரிகள் பல உண்டு. சாரதா நவராத்திரி, பிரம்ம நவராத்திரி, ஷ்யாமளா நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, வசந்த நவராத்திரி, தேவ நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என அநேகம் உண்டு.

இதில் புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி விசேஷமானது. இது அம்பிகை அசுரர் சக்திகளைக் கொன்றழித்த புனித காலம் எனப்படும். மேலும் புரட்டாசி மாதம் 'யமனின் கோரை பல்' என்று அக்னி புராணம் கூறுகிறது. எனவே இந்த மாதத்தில் யமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரிக் கொண்டாடப்படுகிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

நவராத்திரி கொலு

நவராத்திரியின் ஒன்பது நாள்களும் முப்பெரும் தேவியருக்கும் உரித்தானது. இந்த நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாள்கள் வீரத்தையும் தைரியத்தையும் வேண்டி, அன்னை துர்கையை வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாள்கள் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் வேண்ட, மகாலட்சுமியை வழிபட வேண்டும். கடைசி 3 நாள்கள் கல்வி, ஞானம், கலைகள் வேண்டி கலைமகளை வணங்க வேண்டும். பத்தாம் நாளான விஜயதசமியில் மூவரும் இணைந்த கோலமான ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ஸ்ரீமூகாம்பிகை, ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீகமலாம்பிகை போன்ற மகாசக்திகளை வழிபாடு செய்யலாம்.

Also Read: நவராத்திரி நாள் - 1: கொலுப் படிகள் வைப்பது ஏன்? கொலு பொம்மைகள் சொல்லும் தத்துவங்கள் என்னென்ன?!

தேவி பாகவதத்தில் வேத வியாசர், ஸ்ரீராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் பற்றி குறிப்பிட்டு உள்ளார். அன்னை ஜானகியை அசுரன் ராவணன் கடத்திச் சென்ற பிறகு, துயரமே உருவாக அண்ணல் வீற்றிருக்க அங்கு வந்த நாரதர் அவரை தேற்றினார். பிறகு ஜகத் ஜனனியான அன்னை சக்தியை வேண்டி நவராத்திரி விரதம் இருக்கும்படி கூறினார்.

அன்னை மீனாட்சி

அதன்படி ஸ்ரீராமரும் மால்யவான் மலையில், புரட்டாசி மாத பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி பூஜைகளை நடத்தினார். நவராத்திரி எட்டாம் நாள் அஷ்டமி தினத்தில் நள்ளிரவில் அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ஸ்ரீராமருக்கு தரிசனம் தந்தாள். அத்தோடு ராவணனை வெற்றிபெற ஆசிர்வதித்து அருள் புரிந்து மறைந்தாள்.

Also Read: இழந்த சொத்து, சொந்தங்களை மீட்டுத் தரும் ஸ்ரீமகா வாராஹி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

வால்மீகி ராமாயணத்தில் புரட்டாசி தசமி நாளில் (விஜய தசமி) ராவணனுடன் போர்புரிய ராமன் புறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு விஜயதசமி அன்றுதான் பாண்டவர்களின் அஞ்சாத வாசம் முடிவுற்றது என்றும் பாண்டவர்கள் ஒளித்து வைத்திருந்த காண்டீபம் முதலான ஆயுதங்களை மீண்டும் எடுத்து உயிர்பித்துக் கொண்ட நாள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

நவராத்திரி கொலு

இந்த நவராத்திரி காலங்களில் ஒவ்வொரு மாலைப் பொழுதிலும் முப்பெரும் தேவியரும் ஒவ்வொரு சூட்சும வடிவம் கொண்டு வந்திருந்து தனது பக்தர்களை ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். அதன்படி வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜூவாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, ஆகரி துர்கை, லவண துர்கை என அம்பிகை ஒன்பதும் நாளும் முறையே எழுந்தருளுவாள்.

அதேபோல் திருமகள் ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, தைர்ய லட்சுமி என எழுந்தருளுவாள். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, காயத்ரி, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி என்ற உருவில் கலைமகளும் உங்கள் வீட்டில் எழுந்தருளுவாள் என்பது நம்பிக்கை.

முப்பெரும் தேவியரும் மனமுவந்து நம் இல்லங்களில் எழுந்தருளும் இந்த இனிய விழாவில் அம்பிகையரின் ஆசிர்வாதம் சகலருக்கும் கிடைக்கட்டும் என்று பிரார்த்திப்போம்.



source https://www.vikatan.com/spiritual/gods/navratri-2021-day-2-the-devotional-reason-behind-keeping-golu-dolls-for-worship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக