மதுரை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு ஒரே நாளில் 11.81 கோடி ரூபாய் கல்விக்கடன் கிடைக்க காரணமாகியுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஏற்பாடு செய்த கல்விக்கடன் சிறப்பு முகாம்!
பல ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவுக்குத் தடங்கலாக இருப்பது பொருளாதாரம். இதைத் தீர்க்கும் வகையில் வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கும் திட்டம் மத்திய அரசால் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டாலும் அதை மாணவர்கள் அனைவரும் பெற முடியாத சூழலே உள்ளது.
அதிலும் குறிப்பாக, நடுத்தரத்துக்குக் கீழே வாழும் நகர, கிராம மக்கள் கல்விக்கடனுக்காக வங்கிகளை அணுக முடியாத நிலை உள்ளது. வங்கி அதிகாரிகளின் அணுகுமுறையால் பல பெற்றோர்கள் மனம் நோகும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதனால் மாணவர்கள் பலரின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளை மாணவர்களும் பெற்றோர்களும் இனி சந்திக்கக் கூடாது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முடிவெடுத்து, கலெக்டர் அனீஷ் சேகருடன் ஆலோசித்து, மாவட்டத்திலுள்ள வங்கிகளுடன் பேசினார்கள். மாவட்ட வங்கி அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள்.
இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் தனிப்பிரிவைத் தொடங்கி பணியாளர்களை நியமித்து கல்விக்கடன் விண்ணப்பங்களை மாணவர்களிடம் பெற்று சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி கல்விக்கடன் பெற உதவி செய்தனர். இதன் காரணமாகக் கடந்த வாரங்களில் 60 கோடி ரூபாய் அளவுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இதை இன்னும் விரிவாக செயல்படுத்தும் வகையில் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்தார்கள். இதற்காக சமூக ஊடகங்கள், உள்ளூர் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று நடந்த சிறப்பு முகாமில் மாவட்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள, பொதுத்துறை, தனியார் துறை வங்கி அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தச் சிறப்பு முகாமில் அனைத்து வங்கிகளும் சேவை மையங்களை அமைத்திருந்தனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்னார்வலர்களுடன் உதவி மையத்தில் அமர்ந்து மாணவர்களுக்கு ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார்.
இந்த முகாமில் 1,355 மாணவர்கள் கல்விக்கடன் வேண்டும் என்று கேட்டு விண்ணப்பம் செய்தனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை அன்று மட்டும் 171 மாணவர்களுக்கு 11.81 கோடி ரூபாய் கல்விக் கடனாக இந்த முகாமிலேயே வழங்கப்பட்டது.
``தகுதியான எந்த மாணவரின் விண்ணப்பமும் நிராகரிக்கப்படாது, இந்த முகாமை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட மதுரை மாவட்ட மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகம், வங்கி அதிகாரிகள், அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம், என்.எஸ்.எஸ் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி" என்று சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்விக்கடன் அளித்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ``1987-ல் பணம் புரட்ட முடியாமல், வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி அமெரிக்காவுக்குப் போனவன் நான். அங்கு பல கோடி ரூபாயை சம்பாதித்து, பல கோடி ரூபாயை வரியாகக் கட்டியிருக்கிறேன். மாணவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு கல்விதான். கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்வது குறித்து முதல்வர் பரிந்துரை பேரில் ஆய்வு நடந்து வருகிறது'' என்று சொன்னார்.
மதுரை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமான நிகழ்வாக இந்த சிறப்பு முகாம் அமைந்தது. இந்தாண்டு 500 கோடி அளவுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் தொகுதிகளில் செய்தால், அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
அதே நேரத்தில், கல்விக்கடனை வாங்கும் அனைத்து மாணவர்களும் அதை உரிய காலத்தில் சரியாகத் திரும்பக் கட்டவேண்டும் என்கிற வேண்டுகோளை வங்கி அதிகாரிகள் வைக்கின்றனர். வங்கி அதிகாரிகளின் இந்த வேண்டுகோளில் இருக்கும் நியாயத்தையும் மறுக்க முடியாது என்பதே உண்மை!
source https://www.vikatan.com/news/education/madurai-mp-su-venkatesan-arranged-a-special-camp-for-students-to-get-education-loan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக