சிருஷ்டிக்கப்பட்ட நாம் எல்லோருமே பொம்மைகள்தான். அகிலாண்ட கோடி பிரமாண்ட லோகங்களைப் படைத்த ஆதிபராசக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரியே இந்தப் பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டு இருக்கிறாள். அவள் படைப்பில் சகலமும் ஒரே மதிப்பானவை என்பதை உணர்த்தவே இந்த புரட்டாசி நவராத்திரியில் கொலு பொம்மைகள் வைத்துக் கொண்டாடும் வழக்கம் வந்தது என்பர் பெரியோர்கள்.
மேலும் ஆதிபராசக்தியான ஸ்ரீலலிதாம்பிகை ஒவ்வொரு நாளும் ஒரு வடிவம் எடுத்து முப்பெரும் தேவியரின் அம்சமாக எழுந்தருளி அசுர சக்திகளை வென்றெடுத்த காலம் இந்த நவராத்திரி வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அன்னைக்கு துணையாக நின்ற அத்தனை தேவ, ரிஷி, மானிட, பூத, மனித சக்திகளையும் பொம்மை வடிவில் ஆண்டுதோறும் வைத்து வழிபடுவது வழக்கமானது. இது பின்னர் மகான்கள், தலைவர்கள் எனப் பலரையும் வைக்கும் நிலைக்கு வந்துவிட்டது எனலாம்.
நவராத்திரியில் குறைந்தது 3 என 11 படிகள் வரை வைக்கும் பழக்கமுண்டு. வீட்டின் அளவைப் பொறுத்து படிகளின் நீளமும் அகலமும் கூடும். கொலு வைத்து நவராத்திரி நாளில் வழிபட்டால் அந்த வீட்டில் சர்வ மங்கலமும் பொங்கும் என்பது ஐதீகம். இதனால் நடுத்தர வகுப்பு மக்கள் கூட தம்மால் இயன்ற அளவுக்கு படிகள் அமைத்து நவராத்திரியைக் கொண்டாடுவார்கள்.
மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிஷாசூரனை வதைத்ததைத்தான் நவராத்திரி விழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்தாண்டு நவராத்திரி திருவிழா இன்று இனிதே தொடங்குகிறது.
ஆதிபராசக்தியின் அருளால் மும்மூர்த்திகள் தொடங்கி ஈ, எறும்பு உள்ளிட்ட சகலமும் படைக்கப்பட்டு அவளால் படி நிலைகளாக வைக்கப்பட்டு காக்கப்படுகிறது என்பதை நினைவுறுத்தவே நவராத்திரி நாளில் கொலு பொம்மைகள் படிப்படியாக வைக்கப்படுகின்றன. சூத்திரதாரி அவள், நாமெல்லாம் பொம்மைகள்தானே என்பதுதான் கொலுவின் அடிப்படை தாத்பர்யம்.
Also Read: நீர் நிலைகளில் பித்ரு காரியங்கள் செய்வது ஏன்? மகாளய அமாவாசை கடைப்பிடிப்பது எப்படி?
3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம். இதன் மூலம் மனிதனின் வாழ்க்கை படிப்படியாக உயர்ந்தது என்றும், உலகில் உயிரினங்கள் படிப்படியாகத் தோன்றியது என்றும் கூறப்படுகிறது. மற்றொரு விளக்கமாக மனிதன் படிப்படியாக தன்னிலையில் கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலுப் படிகள் அமைகின்றன. மனிதன் படிப்படியாக முன்னேறி தேவ நிலையை அடையலாம் என்பதும் படிகளின் தத்துவம் உணர்த்துகின்றன.
ஊர்வன, பறப்பன என்று கீழ்ப்படியில் தொடங்கி, விலங்குகள், மனிதர்கள், முனிவர்கள், மகான்கள், சித்த புருஷர்கள், தேவர்கள், அவதாரங்கள், மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர் என மேல்நோக்கி அமைப்பது கொலுவின் வழக்கம். இது எந்த உயிரும் பிரம்மத்தை படிப்படியாக எட்டலாம் என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு உண்டாக்கப்பட்டன எனலாம்.
முதல் படி:
மரம், செடி, கொடி ஆகிய ஓரறிவு படைப்பை முதல் படியில் வைக்க வேண்டும்.
இரண்டாம் படி:
ஈரறிவு உயிரனங்கள் வைக்கலாம். உதாரணம் நத்தை, சங்கு இவை எல்லாம் ஈரறிவு.
மூன்றாம் படி:
கரையான், எறும்பு இவை எல்லாம் 3 அறிவு உயிரினங்கள்.
நான்காம் படி:
நண்டு, வண்டு, தும்பி உள்ளிட்ட சிறிய வகை பறப்பன, ஊர்வன போன்ற 4 அறிவு உயிரினங்கள்.
ஐந்தாம் படி:
பறவைகள், விலங்கினங்கள் வைக்கலாம்.
Also Read: இழந்த சொத்து, சொந்தங்களை மீட்டுத் தரும் ஸ்ரீமகா வாராஹி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!
ஆறாம் படி:
மனிதர்கள், திருமணங்கள், நடன பொம்மைகள் வைக்கலாம்.
ஏழாம் படி:
உயர்ந்த சித்தர்கள், மகான்களின் பொம்மைகளை வைக்கலாம். சாய்பாபா, விவேகானந்தர், வள்ளலார், மகா பெரியவர் போன்ற உயர்ந்தவர்களை வைக்கலாம்.
எட்டாம் படி:
இறைவனின் அவதாரங்களை வைக்கலாம். தசாவதாரம், அஷ்ட லட்சுமியர், தத்தாத்ரேயர் பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாம் படி:
ஒன்பதாம் படியில் முப்பெரும் தேவியர், மும்மூர்த்திகள், முருகப்பெருமான், பூரண கலசம், பிள்ளையார் பொம்மையும் வைக்கலாம்.
கொலு வைப்பது மட்டுமில்லாமல், தினமும் அந்த கொலுவுக்கு தூப தீப நைவேத்தியமும் செய்ய வேண்டும். விருந்தினர்களை வரவழைத்து ஆரத்தி காட்டி, அவர்களுக்குச் சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் அளித்து, தாம்பூலம், ரவிக்கைத்துணி, வளையல் போன்ற மங்கல பொருள்களும் வழங்க வேண்டும். அம்பிகை சங்கீதப் பிரியை என்பதால் தினமும் ஒரு ஸ்லோகமோ, பாடலோ பாடுவது கூடுதல் பலன்களைத் தரும் எனலாம்.
ஒன்பது நாளும் ஒன்பது மலர்கள், ஒன்பது நைவேத்தியம், அம்பிகையின் சிலைக்கு ஒன்பது அலங்காரம், ஒன்பது வகைக் கோலம், ஒன்பது ராகங்களைக் கொண்ட பாடல்கள், ஒன்பது வகையான தாம்பூலங்கள் எனக் கொண்டாடி 10-ம் நாளான விஜயதசமி நாளில் அம்பிகையை நம் வீட்டுக்குள்ளேயே அழைக்கலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
கொலு வைத்து கொண்டாடும் இல்லம், கோயில் சந்நிதிக்கு நிகரானது என்கின்றன ஞான நூல்கள். வீட்டையே கோயிலாக்கும் இந்த உன்னதமான நவராத்திரி நாளில் அம்பிகையைக் கொண்டாடி அவள் அருளை பூரணமாகப் பெறுவோம்!
source https://www.vikatan.com/spiritual/gods/navratri-2021-day-1-the-specialties-and-arrangement-pattern-of-golu-dolls
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக