Ad

சனி, 1 மே, 2021

MI v CSK: 2 பாயிண்டுக்கு மட்டுமல்ல இந்த மேட்ச்... `விக்ரம் vs வேதா' போட்டியில் வெற்றி யாருக்கு?!

செம பார்ம்மில் இருக்கும் சிஎஸ்கேவும், போன சீசனில் கடப்பாறை பேட்டிங் லைன் அப் என்று புகழப்பட்டு தற்போது அதே லைன் அப் மிடில் ஆர்டரில் பார்ம் இழந்து தத்தளித்து கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸும் மற்றுமொரு El Classico மோதலுக்கு இன்று தயாராகிறது.

"எல்லாப் போட்டியும் போட்டியல்ல, ஐபிஎல் ரசிகர்களுக்கு, சிஎஸ்கே - மும்பையின் போட்டா போட்டியே போட்டி" எனப் புதுக்குறள் கூற வைக்கும் ஐபிஎல்லின் மாபெரும் மோதல் இன்று நடக்கிறது. தேர்தல் முடிவுகளின் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் அனலுக்கு இணையான கனலை களத்தில் மூட்டிக் கொண்டுள்ளன, இவ்விரு அணி ரசிகர்களின் ட்விட்டர் வார்களும், சமூக ஊடகப் போர்களும். ஆண்டாண்டு காலமாய்த் தொடரும் இந்த மகாயுத்தத்தின், இன்னொரு சுற்றில், இம்முறை வெல்லப்போவது யார், வீழப்போவது யார்?!

மும்பை முன்னிலை:

இதுவரை ஐபிஎல் வரலாற்றில், ஆதிக்கம் மிக்க இந்த இரு அணிகளும், 30 முறை சந்தித்துக் கொண்டுள்ளன. அதில், 18 முறை மும்பையே வென்றிருக்க, மீதமுள்ள 12 முறைதான், சிஎஸ்கே வென்றிருக்கிறது. அதிலும், இறுதிப்போட்டியில் மட்டும், இதுவரை, இந்த இருஅணிகளும் நான்குமுறை மோதிக் கொண்டதில், மூன்றுமுறை, மும்பையே மகுடம் சூட்டிக் கொண்டுள்ளது. போன சீசனிலும், விக்ரம் வேதாவாக, ஆளுக்கொரு போட்டியை வென்றிருந்தனர்.

அதே கிரவுண்ட்... அதே ரிசல்ட்! அடுத்த போட்டியில் மோதப்போகும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர்கிங்ஸ்! #MIvCSK | #IPL2021

Posted by SportsVikatan on Thursday, April 29, 2021

சமபலங்களின் சங்கமம்:

டெல்லி மைதானத்தில் இந்த இரு அணிகளுமே, இந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலுமே, இவர்களுக்கு, 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஒன்பது பந்துகள் மீதமிருக்க இருவருமே இலக்கை எட்டினர். இரண்டு போட்டியுமே, வின்னிங் ஷாட்டாக, பவுண்டரியோடு முடிவுக்கு வந்தன. சமபலத்தோடு இருஅணிகளும் விளங்குவதற்கு, இது இன்னமும் ஓர் உதாரணம். அதே நேரத்தில், 170 ரன்கள், சுலபமாக சேஸ் செய்யக் கூடியதாக இருப்பதால், முதலில் ஆடும் அணி, 200-க்கும் அதிகமான ரன்களைக் குவிப்பதே அவர்களை டேன்ஜர் ஜோனிலிருந்து எதிர்முனைக்கு உந்தித் தள்ளும்.

பவர்பிளே பவர் ரேஞ்சர்கள் யார்?!

கடந்த சீசனில் கண்ட சிஎஸ்கேயின் பிரதிபலிப்பாகவே, மும்பையின் தொடக்க ஓவர்கள் இருக்கின்றன. மிடில்ஆர்டர் உதைபடுவதால், துணிந்து ஆடி, விக்கெட் பறிகொடுத்து, சரிந்து வீழ ரோஹித் விரும்பாததால், மந்தமான தொடக்கத்தையே அவர்கள் கொடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். மும்பையின் பவர்பிளே ஓவர்களின் சராசரி, 7.23 ஆகவும், சிஎஸ்கே-வுக்கோ அது, 7.5 ஆக இருக்கிறது. கொஞ்சம்தானே மாறுபடுகிறது எனத் தோன்றலாம். ஆனால், சிஎஸ்கேவுக்கு, முதலிரு போட்டிகளில், 5.5, 5.3 என இருந்த பவர்பிளே ரன்ரேட், தற்போது கடைசி இரு போட்டிகளில், 8.5 மற்றும் 8.3 என அபார முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கெய்க்வாட்டும் ஃபார்முக்குத் திரும்பி, டூ பிளஸ்ஸியுடன் இணைந்து ரன்களைத் தொடக்கத்திலேயே குவிப்பதுதான். அதேநேரத்தில், டீ காக்கும், கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே, இருபக்க ஓப்பனர்களும் பவர்பிளே ஓவர்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதிலேயே போட்டியில் யாருக்கு வெற்றி என்பது 25% தீர்மானிக்கப்பட்டு விடும்‌.

Faf Du Plesis, Raina

பவர்பிளேயில் பௌலர்கள்:

இந்த ஆண்டு, மும்பை பௌலர்கள், புதுப்பந்தில் விக்கெட் எடுக்க மிகவும் திணறுகிறார்கள்‌. இதுவரை மும்பை விளையாடியுள்ள போட்டிகளில், ஆறில் நான்கு போட்டிகளில், எதிரணியின் பேட்டிங் பவர்பிளே ஓவர்களில், ஒரு விக்கெட்கூட விழவில்லை. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும், மொத்தமே மூன்று விக்கெட்டுகளை மட்டுமே மும்பை எடுத்திருந்தது‌. எதிரணியின் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த மும்பை, அதில் மூன்றை மட்டுமே முதல் ஆறு ஓவர்களில் எடுத்திருந்தது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. சிஎஸ்கே பக்கமோ, ஆறு போட்டிகளில், அவர்கள் வீழ்த்திய 42 விக்கெட்டுகளில், 14 விக்கெட்டுகளை, முதல் ஆறு ஓவர்களில் வீழ்த்தி இருந்தனர். மும்பையின் இந்தப் பலவீனத்தை சிஎஸ்கே ஓப்பனர்கள் குறிவைத்தால் தொடக்க ஓவர்களிலேயே, ரன்களைக் குவிக்கலாம்.

டெத் ஓவர்களில் டெத் எண்ட்:

இதுவரை நடந்துள்ள போட்டிகளில், சிஎஸ்கே மொத்தம் 30 விக்கெட்டுகளையும், மும்பை இந்தியன்ஸ், 42 விக்கெட்டுகளையும் இழந்துள்ளன. இதிலும், டெத் ஓவர்களில், சிஎஸ்கே, 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. ஆனால் மும்பையோ, 23 விக்கெட்டுகளை டெத் ஓவர்களில் இழந்திருந்தது, அவர்களுக்கு ரெட் அலெர்ட் கொடுப்பதாக இருந்தது. இம்முறை மும்பையின் சரிவிற்கு இதுவும் ஒரு காரணம்.

மீட்சியுறா மிடில்ஆர்டர்:

MI Middle Order

டெத் ஓவர்களில், மும்பையின் விக்கெட்டுகள் மளமளவென சரிவதற்கு முக்கியக்காரணம், அவர்களது மிடில் ஆர்டர் பலவீனம். முந்தைய சீசன்களில், அவர்களது பலமே, விக்கெட் விழுந்தாலும், அடித்துக் கொண்டே இருப்பார்கள், ஏழாவது வீரர் வரை. ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக ஆனது. எதிரணியிடம் அடிவாங்கி விழுந்து கொண்டே இருந்தார்கள். தொடரின் சரிபாதி போட்டிகளை, மும்பையின் வான்கடேயில் விளையாடி, ரன்களைக் குவிக்கும் பின்ச் ஹிட்டர்களைக் கொண்ட மும்பைக்கு, சென்னை போன்ற ஸ்லோ பிட்சில் ஆடுவது சவால் நிறைந்ததாகவே இருந்தது. இதனை கடந்த போட்டியின் டாஸின் போது, ரோஹித் சென்னையைவிட, டெல்லி மோசமானதாகி விடாதென்றும், தங்களது வீரர்களால் சென்னை பிட்சுக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். சொல்லி வைத்ததைப் போல், டீ காக் மற்றும் க்ருணால் பாண்டியா கடந்த போட்டியில் சிறப்பாக விளையாட, வெற்றிவாயிலைத் தொட்டது மும்பை. உண்மையில் மிடில் ஆர்டர் சொதப்புகிறதா இல்லை மைதானமே முழுக்காரணமா என்பதை இனிவரும் போட்டிகள் தெளிவாக்கும்.

அண்ணனும், தம்பியும் எதிர் திசையில்...

கேகேஆர் மற்றும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டிகளில், மிக அற்புதமான பந்துவீச்சால் தீபக் சாஹரும், கேகேஆர், சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய துல்லிய பந்துவீச்சால், ராகுல் சாஹரும், அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியிருந்தனர். அவரவர்களது அணியின் லீடிங் விக்கெட் டேக்கர்களாக, தற்போது இவர்களே இருக்கிறார்கள். எனினும், ராகுல் சாஹர் 11 விக்கெட்டுகளோடு, 8 விக்கெட்டுகளோடுள்ள தீபக்கைவிட முன்னிலை வகிக்கிறார். இவர்கள் இருவருமே, தத்தம் அணிக்குரிய துருப்புச் சீட்டாக, இன்று கண்டிப்பாக இருப்பார்கள்.

ஆல் ரவுண்டர்கள் என்னும் ஆச்சரியக்குறிகள்:

Jadeja

சிஎஸ்கே இம்முறை, ஜடேஜா, மொயின் அலி மற்றும் சாம் கரணின் ஆகிய ஆல் ரவுண்டர்களால், வெகுவாகவே பயனடைந்ததுள்ளது. 15 விக்கெட்டுகளைக் கூட்டாக இவர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். மேலும், 309 ரன்கள் இவர்களிடம் இருந்து வந்திருந்தது. இது அணி மொத்தமாய் அடிந்திருந்த ரன்களில், 30 சதவிகிதமாகும். மேலும், 11 கேட்சுகளையும் இவர்கள் பிடித்திருந்தனர், இதைத்தவிர மூன்று ரன்அவுட்டிலும் இவர்களது பங்கு இருந்தது. இன்றைய போட்டியிலும், இவர்கள் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில், இரண்டு புள்ளிகள் பெறும் முயற்சியில் பாதிக்கிணறு தாண்டிவிடும் சிஎஸ்கே.

இன்று டாஸ் வெல்லும் அணி எதுவாக இருந்தாலும், பனிப்பொழிவையும் மனதில் நிறுத்தி, சேஸிங்கைத் தேர்ந்தெடுக்கும். பிளேயிங் லெவனில் இருபக்கமும், மாற்றங்கள் இருக்க வாய்ப்புகள் குறைவாகதான் இருக்கும்.

டேபிள் டாப்பர் மற்றும் டிஃபெண்டிக் சாம்பியன்களுக்குமான இந்தப் போட்டி, புள்ளிப் பட்டியலைப் புரட்டிப்போடாவிட்டாலும், இறுதிப் போட்டிக்குரிய பரபரப்போடே அரங்கேறப் போகிறது, ஏனெனில் இரண்டு புள்ளிகளுக்காக மட்டுமே இங்கே சில போட்டிகள் இங்கே ஆடப்படுவதில்லை, உணர்வுப் பூர்வமாகவும் விளையாடப்படுகிறது. ஆறாவது வெற்றியை சிஎஸ்கே சுவைக்குமா, மும்பை அதற்கு முடிவுரை எழுதுமா?! இன்றிரவு தெரிந்துவிடும்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2021-mumbai-indians-vs-chennai-super-kings-match-preview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக