இரண்டாவது சுற்று போட்டிகளுக்காக கொல்கத்தா அணியுடன் அஹமதாபாத்தில் தங்கியிருந்து விளையாடி வந்த வருண் சக்ரவர்த்தி கையில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக பயோபபுளைவிட்டு வெளியே போக கொரோனா தொற்றுக்கு ஆளானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் வருண் சக்ரவர்த்தி.
‘’மே 1-ம் தேதி எனக்கு உடல் சோர்வும், லேசான காய்ச்சலும் வந்தது. இதனால் அன்றைய தினம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை. அணி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னைத் தனிமைப்படுத்தி RT-PCR சோதனைக்கு ஏற்பாடு செய்தார்கள். டெஸ்ட் கோவிட் பாசிட்டிவ் என வந்தது. நாட்டின் சூழல் மட்டுமல்லாமல் சென்னையில் என் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் கவலை என்னை சூழ்ந்தது.
12 நாட்கள் ஹோட்டல் அறையில் தனிமையில் இருந்தேன். தினமும் காலை கொஞ்சம் லேட்டாக 9 மணிக்குத்தான் எழும்புவேன். காலை உணவை முடித்துவிட்டு ஓடிடியில் படங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். மதியம் மருந்துகளை உட்கொண்டுவிட்டு வீட்டுக்கு வீடியோ காலில் பேசுவேன். என் வீட்டில் பதற்றப்படாமல் அமைதியாக இந்த சூழலை கையாண்டார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் எனக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்தது. ஐபிஎல் நிறுத்தப்பட்டு எல்லா வீரர்களும் தங்கள் ஊர்களுக்குப்போன பின்னரும், என்னை கவனிப்பதற்காக ஒருவரை நியமித்திருந்தார்கள். இரண்டு முறை சோதனை செய்து கொரோனா நெகட்டிவ் என வந்த பிறகுதான் என்னை பத்திரமாக சென்னைக்கு அனுப்பினார்கள். ஷாருக்கான் எனக்கு மட்டுமல்ல அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து நம்பிக்கை அளித்தார்.
கொரோனா தொற்றுக்கு ஆளானதும் நடக்கும் முதல் விஷயம் தனிமைப்படுத்துதல். வீட்டை விட்டு, வீரர்களை விட்டு தனியாக இருப்பது மனதளவில் மிகப்பெரிய போராட்டம். நான் மன அமைதிக்காக ஓஷோவின் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன்.
இப்போது நான் சென்னைக்கு என் வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனால், என்னால் இன்னமும் பயிற்சிகளை முழுமையாகத் தொடங்க முடியவில்லை. இன்னமும் எனக்கு உடல் சோர்வு இருக்கிறது. அடிக்கடி வாசனை, ருசி இழப்பு ஏற்படுகிறது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நெகட்டிவ் வந்தப்பிறகு இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுங்கள். மாஸ்க் அணிந்தே எங்கேயும் சொல்லுங்கள்.உயர்தர சிகிச்சை மூலம் நான் நல்லபடியாக மீண்டு வெளியே வந்துவிட்டேன். ஆனால், நம் நாட்டில் பலரும் கஷ்டப்படுவதை பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. விரைவில் எல்லோரும் நலம் பெற வேண்டும்'’ என்று சொல்லியிருக்கிறார் வருண் சக்ரவர்த்தி.
source https://sports.vikatan.com/ipl/kkr-bowler-varun-chakravarthy-shares-his-experience-on-covid-19-during-ipl-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக