Ad

வெள்ளி, 21 மே, 2021

பாபநாசம்: அகத்தியர் சிலை உடைப்பா... கல்யாண தீர்த்தத்தில் நடந்தது என்ன?

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடிவரும் அகஸ்தியர் அருவி நெல்லை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும் என்பதால் எல்லா நேரத்திலும் சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிக்கும் வருவதுண்டு. அத்துடன் முக்கிய ஆன்மிக கேந்திரமாகவும் இந்தப் பகுதி திகழ்கிறது.

உலோபாமுத்திரையுடன் அகத்தியர் சிலை

அகஸ்தியர் அருவிக்கு மேலே கல்யாண தீர்த்தம் அருவி உள்ளது. இந்த இடத்தின் அருகில் அகத்திய முனிவர் அமர்ந்து தவம் செய்துள்ளார். அதனால் அவருக்கு சிவபெருமானும் பார்வதியும் மணக்கோலத்தில் காட்சியளித்ததாக ஐதிகம். இந்த இடத்துக்கு வந்து சென்றாலே திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் சித்ரா பௌர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.

கல்யாண தீர்த்தம் அருகே அகத்தியர் சிலை, உலோபாமுத்திரை சிலைகள் அமைந்திருந்தன. அகத்தியரின் பாதம் பதிந்த சுவடும் அங்கிருக்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்தர்களும் முனிவர்களும் தியானம் மேற்கொள்வதால் சந்தன மழை பொழியுமாம். அதை இங்கு வந்து தியானம் மேற்கொள்ளும் பக்தர்களும் அனுபவித்து உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

உடைக்கப்பட்ட சிலையின் அடிப்பகுதி

இத்தனை சிறப்புக்குரிய கல்யாண தீர்த்தம் பகுதியில் அமைந்திருந்த அகத்தியர் மற்றும் உலோபாமுத்திரை சிலைகள் சமீபத்தில் உடைக்கப்பட்டு விட்டதாகவும் வனத்துறையினரின் அலட்சியமே இதற்குக் காரணம் எனவும் சமூக வலைத் தளங்களில் தகவல் பரவியது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. அதனால் அதிருப்தியடைந்த ஆன்மிக அமைப்பினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, “அகத்தியர் தமிழ் இலக்கணம் நூல் தந்தவர். உலகிலேயே முதலில் தோன்றிய மலை எனக் கருதப்படும் பொதிகை மலையில்தான் தமிழும் பிறந்திருக்கிறது. அகத்தியர் உறைவிடமும் இந்த மலையே. எனவேதான் தாமிரபரணி தோன்றும் பொதிகை மலைக்கு மேலே சென்று அங்குள்ள அகத்திய முனிவரின் சிலையை மக்கள் தரிசித்து வந்தார்கள்.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு

தற்போது வனத்துறையினரின் கெடுபிடி காரணமாக கடந்த 15 வருடங்களாக அகத்தியர் சிலையைத் தரிசிக்கச் செல்ல அனுமதியில்லை. அதனால் பக்தர்கள் பலரும் அகஸ்தியர் அருவியில் குளித்துவிட்டு அதன் மேலிருக்கும் கல்யாண தீர்த்தம் சென்று அங்குள்ள அகத்தியர், உலோபாமுத்திரை சிலைகளைத் தரிசித்து வந்தார்கள். ஆனால் கொரானா ஊரடங்கைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு முதல் வனத்துறையினர் அதற்கும் தடை போட்டுவிட்டார்கள்.

இந்த நிலையில், அங்கிருந்த அகத்தியர் சிலை உடைபட்டுக் கிடப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அந்த இடத்தில் மீண்டும் சிலைகளை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகத்தியர் சிலை இருந்த இடம்

அத்துடன், ஆண்டு முழுவதும் வற்றாமல் விழக்கூடிய அகஸ்தியர் அருவிக்குச் செல்வதற்கு தடை விதித்த வனத்துறையினர், அந்த அருவியை மணல் மூட்டைகளால் அடைத்து மடை மாற்றம் செய்திருப்பது போன்ற படமும் வெளியாகி பக்தர்களையும் இயற்கை ஆர்வலர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஏழை மக்களின் ஊட்டியாகத் திகழ்ந்த அகஸ்தியர் அருவியை மடைமாற்றம் செய்ததால் பக்தர்கள் கொந்தளித்தனர். அகத்திய மாமுனிவரின் பாதம் தாமிரபரணி பாய்ந்தோடி வரும் பாறை இடுக்கில் இப்போதும் காணப்படுகிறது. இங்கு வந்த யாத்ரீகர்கள் வடிவமைத்த பாறைச் சிற்பங்களின் அழகு இப்போதும் வியக்க வைக்கிறது.

நீர் வரத்து தடைப்பட்டு வறண்டு கிடக்கும் அகஸ்தியர் அருவி

கோயிலின் பின்புறம் உள்ள பள்ளத்தாக்கில் தியானம் செய்வதற்காகவே உலகமெங்கும் இருந்து துறவிகளும் சாதுக்களும் வருகிறார்கள். அமைதியான அருவிச் சத்தமும், சில்லென்ற தூறலும், இனிமையான இயற்கையும் மனதுக்கு ஆறுதலைத் தரும் இடமாக உள்ளது. இந்த இடத்தை யாரும் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றியமைக்க அனுமதிக்க முடியாது” என்று படபடத்தார்.

அகத்தியர் சிலை உடைப்பு விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் வனத்துறையினரிடம் இது பற்றிக் கேட்டோம். ”கடந்த 60 வருடங்கள் இல்லாத வகையில் ஜனவரி 7 முதல் 18-ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. சில இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு அளவுக்கு அதிகமான மழை பொழிந்தது.

அதனால் ஜனவரி 17 மற்றும் 18-ம் தேதிகளில் கல்யாண தீர்த்தம் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து வந்தது. அப்போது அகத்தியர், சிலையை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. அது குறித்து அப்போதே செய்திகள் வெளியாகின. உலோபாமுத்திரை சிலையை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். மீண்டும் அந்தச் சிலைகளை அதே இடத்தில் நிறுவ ஏற்பாடு செய்துவருகிறோம்.

வெள்ளச் சேதத்தின்போது வெளியான புகைப்படங்களை இப்போது யாரோ திட்டமிட்டு வெளியிட்டு, விஷமிகளால் சிலைகள் உடைக்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பியதால் பக்தர்கள் வருத்தம் அடைந்ததோடு எங்களிடமும் பலரும் கேட்கத் தொடங்கினார்கள். நாங்கள் அவர்களுக்கு விளக்கமாகத் தெரிவித்ததால் உள்ளூர் பக்தர்கள் எல்லோரும் புரிந்துகொண்டார்கள்.

சேதமடைந்து கிடக்கும் அருவிக்குச் செல்லும் வழி

வெள்ளத்தின்போது அகத்தியர் அருவிக்குச் செல்லும் பாதை முழுமையாகச் சேதமடைந்து விட்டது. அதைச் சீரமைக்கும் பணிகள் நடந்தபோது தண்ணீர் வராமல் இருப்பதற்காக அருவியில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரைத் திருப்பி விட்டிருந்தோம். அந்தப் புகைப்படத்தையும் சிலர் தவறாகப் பரப்பி விட்டார்கள். அருவியின் போக்கை யாரால் திசை திருப்ப முடியும்?” என்று தெரிவித்தார்கள்.

”வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் கோயிலும் அருவியும் இருந்தபோதிலும் அதன் முக்கியத்துவம் கருதி பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்வதற்கு வழக்கம்போல வனத்துறை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் இத்தகைய சர்ச்சைகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்” என்கிறார்கள் உள்ளூர் மக்கள்,.

வெள்ளப் பெருக்கின்போது அகஸ்தியர் அருவி

அகத்தியர் அருவி விரைவில் சீரமைக்கப்பட வேண்டியது அவசியம். பாணதீர்த்தம் அருவியின் அருகில் அகத்தியர் மற்றும் உலோபாமுத்திரை சிலைகள் மீண்டும் நிறுவப்பட வேண்டும். இது தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரைவில் நமது தளத்தில் அப்டேட் செய்கிறோம்.



source https://www.vikatan.com/spiritual/news/is-agasthiyar-statue-vandalized-in-papanasam-of-the-western-ghats

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக