கொரோனா நிவாரணமாக 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பை தமிழக அரசு வரும் ஜூன் 3-ம் தேதி முதல் வழங்கவிருக்கிறது. இந்த மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை எடுப்பதற்கு, சென்னையைச் சேர்ந்த அருணாச்சலா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனமும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிறுவனத்திற்கே டெண்டரை அளிப்பதற்கு அரசுத் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நமக்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. இதுதான் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூத்த அதிகாரிகள்.
பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய சில அதிகாரிகள், "ஓணம் பண்டிகையை ஒட்டி, உடைத்த கோதுமை, சர்க்கரை, வெல்லம், அப்பளம், சேமியா, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட 11 பொருட்கள் அடங்கிய ஓணம் பரிசு தொகுப்பை கேரள அரசு கடந்தாண்டு வழஙகியது. இப்படி வழஙகப்பட்ட தொகுப்பில் தரக்குறைவான வெல்லத்தை வழஙகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், தரமற்ற பொருள்களை சப்ளை செய்ததாக கோழிக்கோட்டைச் சேர்ந்த வடக்கு மலபார் கூட்டுறவு சொசைட்டி மற்றும் பால்சன் எண்டர்பிரைசஸ், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.வி.என் டிரேட் வென்சர்ஸ், சென்னையைச் சேர்ந்த அருணாச்சலா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட், திருச்சூரைச் சேர்ந்த கொண்ணுபரம்பன் டிரேடர்ஸ் ஆகிய நிறுவனஙகள் மீது தடை விதிக்கப்பட்டன.
அந்த நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஓராண்டுக்கு எந்த பொருள்களும் வாங்கக் கூடாது என்று கேரள சிவில் சப்ளைய்ஸ் கார்ப்பரேஷன் கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் NCDEX அமைப்புக்கு முறைப்படி கடிதம் வாயிலாக கேரள அரசு தெரியப்படுத்தியிருக்கிறது. NCDEX அமைப்பில் பதிவு செய்திருந்தால் மட்டுமே நாடு முழுவதும் ஆன்லைன் டெண்டர்களில் பங்கேற்க முடியும். ஒரு மாநில அரசாங்கம் கருப்பு பட்டியலில் வைத்ததாக ஒரு நிறுவனத்தை குறிப்பிடும் பட்சத்தில், அந்த நிறுவனத்திடமிருந்து மற்ற மாநிலங்கள் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டியது NCDEX கடமை. இதனால்தான் கேரள அரசு தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.
இந்தச் சூழலில், கேரள அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனமான அருணாச்சலா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழக அரசு வழங்கவிருக்கும் கொரோனா நிவாரணப் பொருள்கள் டெண்டரை எடுக்க விண்ணப்பித்திருக்கிறது. டெண்டர் விதிகளின்படி, பொருட்களை சப்ளை செய்ய விண்ணப்பிக்கும் எந்த நிறுவனமும் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கக் கூடாது [tender conditions page 5, clause2(10)]. இப்படி இருக்கும்போது, சம்பந்தப்பட்ட அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க அரசுத் தரப்பில் முடிவெடுத்திருக்கிறார்கள். இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகலாம். ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கு நெருக்கமான நிறுவனம் என்பதால், டெண்டர் விதிகளை மீறி இந்த அணுகூலம் செய்யப்படுகிறது" என்றனர்.
சம்பந்தப்பட்ட அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டோம். "கொரோனா காரணமாக ஊழியர்கள் யாரும் வரவில்லை. எங்களுக்கு எந்த விவரமும் தெரியாது. உயரதிகாரிகள் வந்தவுடன் தகவல் சொல்கிறோம்" என்றனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்-ன் கவனத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு போனோம். உடனடியாக சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகளுக்கு அனுப்பி விசாரிப்பதாக உறுதியளித்தார். சமூக நலத்துறை டெண்டர்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் போய்விட்ட நிலையில், அடுத்த சர்ச்சையாக இந்த கொரோனா நிவாரண பொருள்கள் சப்ளை டெண்டர் கிளம்பியிருப்பது, தலைமைச் செயலகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியிருப்பது நிஜம்.
அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tender-controversy-in-tn-corona-relief-products-distribution
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக