தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோருமே கவிதை எழுதுபவர்களாகவோ, எழுத முற்படுபவர்களாகவோ இருக்கிறார்கள் என்றார் வைரமுத்து. இது கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு. இன்று காட்சி ஊடகங்கள் பெருகிவிட்ட காலம், தமிழரென்றில்லை, அனைவருமே ஒன்று சினிமா எடுக்க வேண்டும் என்றோ, அல்லது, நடித்துவிட வேண்டும் என்றோ ஆசைப்படுபவர்களாக இருக்கிறார்கள். டப்ஸ்மாஷ், டிக் டாக் போன்றவை இதற்குச் சான்று.
அந்த ஆசைக்குத் தூண்டுகோலாக இருப்பது சினிமா என்னும் பெரும் புகழ் பூதம்தான். சில ஆயிரம் பேரிடமாவது தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும், வெளிச்சம் பெற வேண்டும் எனும் வேட்கையே அதற்கு அடிப்படையாக இருக்கிறது. அந்தக் கனவு உலகத்தில் நாமும் ஓர் அங்கமாக வேண்டும் என்ற ஆசை இங்கே ஒவ்வொருவரையும் உந்தித் தள்ளுகிறது. சினிமா பார்க்கவே மறுத்த ஒரு சமூகம் அதன் நூற்றாண்டில் அதன் ஓர் உறுப்பாகத் தன்னைப் பொருத்திக்கொள்ளத் துடிக்கிறது என்பது இன்றைய நிதர்சனம். சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'சினிமா பண்டி (Cinema Bandi)' என்னும் தெலுங்குத் திரைப்படம் இந்நிதர்சனத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத ஒரு கிராமத்தில் பக்கத்து நகரத்துக்கு ஷேர் ஆட்டோ ஓட்டி அதன் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் இளைஞன் வீரபாபுவிற்கு (விகாஸ் வசிஷ்டா - சில கன்னடப்படங்களின் இசையமைப்பாளர்), தன் ஆட்டோவில் எவரோ விட்டுச் சென்ற, உயர்ந்த மாடல் சோனி டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமரா ஒன்று கிடைக்கிறது. அதை உள்ளூர் போட்டோகிராபர் நண்பர் கணபதியிடம் (சந்தீப் வாரணாசி) சென்று காட்டுகிறார். கணபதி, ஊர் மக்களின் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஆல்பம் செய்துகொடுப்பவர். இருவரும் அதைப் பற்றி விவாதிக்க, அதை விற்க இயலாது எனப் புரிந்துகொண்டு, டிவியில் பார்க்கும் ஒரு சினிமா செய்தி கண்டு நாமே இக்கருவியைக் கொண்டு ஒரு திரைப்படம் எடுத்தால் என்ன என்று முடிவெடுக்கிறார்கள். அவர்கள் கையில் இந்தக் கேமரா மட்டும்தான் உள்ளது. அதைத் தவிர வேறு எந்த வசதி வாய்ப்புகளும் இல்லை. அவர்கள் அதை வைத்து எப்படிப் படம் எடுக்கிறார்கள், தயாரிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறது 'சினிமா பண்டி.’
ஒரு ஷேர் ஆட்டோ, சினிமா ஆட்களைச் சுமந்து செல்லும் வாகனமாக, கேமராவுக்கு ட்ராலியாக, நடிகை உடை மாற்றும் ஒரு கேரவனாக மாறிப்போகிறது என்பதுதான் இந்த சினிமா பண்டி. இவர்களின் இந்த முயற்சியை முட்டாள்களின் கோமாளிக் கூத்தாகப் பார்க்கும் ஊர் மக்களும், மெல்ல மெல்ல அதற்கு ஆட்பட்டு அவர்களுக்கு உதவத் தொடங்கி அத்திரைப்படத்திற்கு உழைக்கத் தொடங்குகிறார்கள். 'சினிமா பாரடைஸோ' எடுத்த இயக்குநர் காசிப் டோர்ணடோர், தனது இன்னொரு படமான 'தி ஸ்டார் மேக்க’ரில் மனிதர்கள் எல்லோருக்குமே நடிப்பு ஆர்வம் இருப்பதைச் சொல்லியிருப்பார். தொலைந்த தன் ஒளிப்பதிவுக் கருவியை அந்த உரிமையாளர் சிந்து ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க, கிடைத்த அந்தக் கேமராவைக் காட்டிக்காட்டிதான் தன் படத்துக்கான நாயகன் நாயகி எல்லோரையும் சம்மதிக்க வைத்து நடிக்க வைக்கிறார்கள் இயக்குநரும் (வீரபாபு), ஒளிப்பதிவாளரும் (கணபதி).
கிராமத்தில் திருமண போட்டோகிராபராக இருந்தாலும், வெட்டிங் போட்டோகிராபியில்கூட அவருக்குத் தெரிந்த ஒரே போஸ் டைட்டானிக் ரோஸ், ஜாக் கைவிரித்து கப்பல் முனையில் நிற்கும் அந்த ஒரு போஸ்தான். மணமகள் முதல் சிறுவர் - சிறுமியர் வரை யார் கிடைத்தாலும் அவர் எடுப்பது அந்தக் காட்சி மட்டுமே. அந்த ஒன்றிலிருந்து படம் நகர நகர அடுத்தடுத்த ஷாட்டுகளைக் கற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள். ரவுண்ட் ட்ராலி ஷாட் ('பம்பாய்' படத்தில் 'உயிரே உயிரே' பாடலில் அரவிந்தசாமியையும் மனிஷா கொய்ராலாவையும் காட்டுவார்களே அதேதான்) எடுப்பதற்கு கேமராவைத் தூக்கிக்கொண்டு சுற்றி சுற்றி ஓடுகிறார். அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர் சிறுமிகளும் குறுக்கே புகுந்து சுற்றத் தொடங்கிவிடுகிறார்கள்.
இவ்வளவு கலவரங்களையும் கடந்து பிறகு ஒரு நாள் அதே ரவுண்ட் ட்ராலி ஷாட் எடுக்க அந்த ஆட்டோவையே ட்ராலியாகப் பயன்படுத்துவதுதான் அதன் ஹைலைட். தன் ஒரே படத்தில் ஓஹோ என்று புகழடைந்துவிடுவோம், நிறைய பணம் சம்பாதித்துவிடுவோம் என்று கனவு காண்பதும் எல்லோரிடமும் உள்ள அறியாமைதான். ஆனால், அந்தப் பணத்தில் தன் கிராமத்துக்குத் தங்குதடையற்ற மின் வசதியையும் குடிநீர் வசதியையும் கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணுவதும், படத்தை எடுத்து முடித்ததும் கேமராவின் சொந்தக்காரி சிந்துவைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணுவதும் அவர்களின் ஊரின்மீதுள்ள அக்கறையையும் வெள்ளந்தித்தனத்தையும் காட்டுகிறது. சரி, அவர்கள் ஒரு படம் இயக்க வேண்டும் என்று முடிவு எடுத்ததும் தங்கள் கிராமத்துக் கதையையோ, சமூகப் பிரச்னையையோ எடுப்பதாக அவர்கள் சிந்திப்பதில்லை. நூற்றாண்டுக் காலமாக இந்திய சினிமா தேய்த்துவந்த சராசரி காதல் கதையை எடுக்க நினைக்கிறார்கள், அதுவும் இவர்களுக்குக் கேமரா கிடைத்துள்ளது போல் கதையாசிரியர் என்று சொல்லப்படும் ஒரு கிழவருக்கு எங்கோ கிடைத்த ஒரு கதை நோட்டுப் புத்தகத்தில் உள்ள கதை.
'நூ பேரு ஏமி’ என்று நாயகன் மரிதேஷ் பாபு (ராக் மயூர்) கேட்க 'சுரமஞ்சரி’ என்று நாயகி வெட்கப்பட்டுக்கொண்டே சொல்ல வேண்டும். இதற்கு பல டேக்குகள் வாங்குகிறார் நாயகி திவ்யா (த்ரிஷாரா). யாரும் தேர்ந்த நடிகர்கள் இல்லையே! நாயகனாக நடிக்கக் கிடைத்தவர் சலூன் கடை வைத்திருப்பவர். நாயகி பள்ளி முடிந்து கல்லூரி செல்லும் பெண். கிராமத்து எளிய மனிதர்கள்தான். இந்தக் காட்சிக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த லொக்கேஷனோ கிராமத்து மனிதர்கள் அவசரத்துக்கு ஒதுங்கும் கொல்லைப்புறம். இடையே நாயகி திவ்யா தன் பள்ளிக் காலக் காதலனோடு ஓடிவிட (இவர்கள் எடுக்கும் சினிமாவின் க்ளைமாக்ஸும் அதுதான்), நாயகன் பரிந்துரைக்கும் (அதுதானே ஸ்டார் வேல்யூ) பெண் மங்காவை (உமா ஒய்.ஜி.) நடிக்க வைக்கிறார்கள்.
Also Read: Cinema Bandi : மசாலா மணக்கும் தெலுங்கு தேசத்தில் எளிய மனிதர்களின் சினிமா எப்படி சாத்தியமானது?!
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கும் அடுத்த தலைமுறைச் சிறுவன் ஒருவன் காஸ்ட்யூம் கண்டினியூட்டி தவறுவது எல்லாம் கண்டறிந்து சொல்கிறான். பல ஊடக வெளிகள், சினிமாவை எவ்வளவு தூரம் கொண்டுசென்றுள்ளன என்பதை இது உணர்த்துகிறது. முதலில் எதிர்ப்பு காட்டும் மனிதர்கள்கூட ஓர் இக்கட்டான சூழலில் தான் பணம் கொடுப்பதாக உதவ முன்வருகிறார்கள். படக்குழுவினருக்கு உணவு ஸ்பான்சர் செய்கிறார்கள். தன் கணவர் சிரமப்படுவதை உணர்ந்து மனைவி குடும்பத்தைக் காக்க வயல் வேலைக்குச் செல்கிறார்; படம் பாதியில் இடையூறு ஏற்பட்டு நிற்க, நாயகன் திரும்பவும் சவரத் தொழில் செய்யப் போகிறான்; கேலிக்கு உள்ளாகிறான். ஒரு சினிமா தயாரிக்கும் போதும் அது முடியாமல்போகும் போதும் எத்தனை கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது என்ற வலியை இவை நமக்கு உணர்த்துகின்றன. இறுதியில் அந்தப்படம் என்ன ஆகிறது, எப்படி எடுத்து முடிக்கப்படுகிறது, திரையிடப்படுகிறதா என்பதெல்லாம் இறுதிக்கட்டம்.
'சினிமா பண்டி'யின் இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா. எழுத்து வசந்த் மரிங்கந்தி. ஒளிப்பதிவு அபூர்வா சாலிகிராம் மற்றும் சாகர் ஒய்.வி.வி. இசை சத்யவோலு சிரிஷ் மற்றும் வருண் ரெட்டி. பலர் புதுமுகங்கள். எதார்த்தமான நடிப்பு. சில காட்சிகளில் சலிப்பு தட்டினாலும் படம் முழுக்க தொடரும் நகைச்சுவை உணர்வும் இசையும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்துவிடுகின்றன. பெரும்பாலும் டே லைட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் பெரும் பொருட்செலவை வாங்கிக்கொண்டிருந்த சினிமாவை, இன்று மிகக் குறைந்த செலவிலேயே எடுக்க இயலும் என்பதைத் தொழில்நுட்பங்களும் கற்பனை வளங்களும் நிரூபித்திருக்கின்றன. இன்னொரு புறம், பெரிய படங்கள் வணிகரீதியாகத் தோற்கும் இந்த ஊரடங்கு காலத்தில் சிறிய முதலீட்டுப் படங்கள் வெற்றியையும் வாய்ப்புகளையும் பெற்றுத்தரும் என்பதை இந்த ஓடிடி ரிலீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன.
source https://cinema.vikatan.com/movie-review/netflix-release-cinema-bandi-telugu-movie-analysis
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக