ஒவ்வொரு பேரிடர் ஏற்படும்போம் அதை உடனே அணுகவும், சரிசெய்யவும் முதலில் செயல்படுவது அந்த சமூகம் மட்டுமே.
இந்தக் கொரோனா பேரிடரில் மக்கள் அனைவருக்கும் ஒன்றிய அரசாங்கம் என்ன செய்தது, மாநில அரசாங்கம் என்ன செய்தது என்பதுதான் தெரியும். அதேபோல உள்ளாட்சி அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் என்ன செய்தார்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத ஊராட்சிகள் என்ன செய்தன என்பது அறியப்படாத ஒன்று.
நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்!
அதிகாரப் பரவலின் முக்கியத்துவத்தை அறிந்து நம் நாட்டில் 1993-ல் 73வது மற்றும் 74வது சட்ட திருத்தங்கள் இயற்றப்பட்டு, உள்ளாட்சி அரசாங்கம் செயல்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அரசாங்கத்தைப் பார்த்தோமானால், 9 மாவட்டங்களில் கிராமப்புறத்தில் மற்றும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளில் இதுவரை தேர்தல் நடத்தாமலுள்ள சூழ்நிலை ஒரு வலுவற்ற உள்ளாட்சியாக இயங்குவது நிதர்சனமான உண்மையாகும்.
ஒரு பேரிடர் காலத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கத்தைவிட உள்ளாட்சி அரசுகளே மக்களை எளிதில் அணுகவும், அவர்களின் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காணவும் முடியும். இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு இன்றியமையாதது.
நடத்தப்பட்ட கள ஆய்வு
இந்தத் தருவாயில் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் க்ராஸ்ரூட்ஸ் கவர்னன்ஸ் அமைப்பு தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் - கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள ஊராட்சிகள் கொரோனாவை எவ்வாறு கையாண்டன என்பதைக் கண்டறிய ஓர் ஒப்பீட்டுக் கள ஆய்வை மேற்கொண்டது. இதில், விழுப்புரத்திலும் திருநெல்வேலியிலும் உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.
இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் உள்ள ஊராட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் இல்லா ஊராட்சிகள் எவ்வாறு கொரோனாவைக் கையாண்டன என்பதை அறிய முடியும். இந்த ஆய்வுக்கு, கோவிட் ஆராய்ச்சி நிதி 2020 திட்டத்தின் ஒரு பகுதியாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தால் நிதியளிக்கப்பட்டது.
இந்த ஆய்வானது நான்கு மாவட்டங்களிலுள்ள 100-க்கும் மேற்பட் ஊராட்சிகளில் கீழ்க்காணும் முக்கிய ஆராய்ச்சிக் கேள்விகளை முன்வைத்து 01.10.2020 முதல் 31.12.2020 வரை மூன்று மாதங்கள் நடைபெற்றது.
ஆய்வுக்கான கேள்விகள்...
1. கொரோனா பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன?
2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகள் எவ்வாறு செயல்பட்டன?
3. ஊராட்சிகளில் அன்றாட அலுவல் பணிகள் எவ்வாறு செயல்பட்டன?
4. ஊராட்சிகளில் நிதி ஆதாரங்கள் எவ்வாறு இருந்தன?
5. மக்கள் குறை தீர்க்கும் பணி எவ்வாறு செயல்பட்டன?
இந்த ஆய்வில் ஊராட்சிகளில் பின்வரும் முக்கியப் பொறுப்பாற்றி வருபவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் , ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளர்கள்.
மக்கள் பிரநிதிகள் உள்ள ஊராட்சிகள்... சிறப்பு!
இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்பாக உள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ள ஊராட்சிகளையும் (கடலூர், தூத்துக்குடி), ஊராட்சி மன்றத் தலைவர்கள் இல்லா ஊராட்சிகளையும் (விழுப்புரம், திருநெல்வேலி) ஒப்பிடும்போது, கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வந்துள்வை மக்கள் பிரதிநிதிகளுள்ள ஊராட்சிகளாகும். இது மட்டுமல்லாது மக்களின் அன்றாடப் பிரச்னைகளையும் உடனே சரிசெய்வதும் ஊராட்சி மன்றத் தலைவர்களே ஆவர்.
மேலும் கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள ஊராட்சிகளில் பேரிடர் மேலாண்மைக் குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஈடுபட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊராட்சிமன்றத் தலைவர்கள் இன்மை... பணிகளில் சுணக்கம்!
விழுப்புரம், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிகளை பொறுத்தமட்டில் ஒரு சிறப்பு அதிகாரி (ஊராட்சிகள்) மட்டும் பல்வேறு ஊராட்சிகளுக்குப் பொறுப்பு என்று நியமிக்கப்பட்டு இருப்பதால், மக்களின் அன்றாடப் பிரச்னைகளை சரிசெய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த மாவட்டங்களில் ஊராட்சிமன்றத் தலைவர்கள் இல்லாததால் பேரிடர் மேலாண்மைக் குழுவும் இல்லை; போதுமான அளவு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மக்களிடம் சென்றடையவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் ஊராட்சியில் ஒரு மக்கள் பிரதிநிதியின் அவசியத் தேவையையும், குறிப்பாகப் பேரிடர் காலத்தில் அவர்களின் முக்கியப் பங்கையும் உணர முடிகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர்களுள்ள மாவட்டங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் புதிய பயனாளிகளின் வேலை அட்டைகள் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டு, கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி வேலைகள் சரியாக நடந்துகொண்டு இருந்தது. ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர்கள் இல்லாத ஊராட்சிகளில் சிறப்பு அலுவலர் (ஊராட்சிகள்) எல்லாவற்றையும் கண்காணித்து வருவதால் சரியான நேரத்துக்கு புதிய வேலை அட்டைகள் தயாரித்து ஒவ்வோர் ஊராட்சிக்கும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
இதில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த முறை ஊராட்சி மன்றத் தலைவர்களாகப் பொறுப்பேற்றவர்கள் பல பேர் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாள்களிலே ஒரு பேரிடரை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. போதுமான அனுபவங்கள் இல்லாமலும், மத்திய, மாநில நிதியும் சரிவர இல்லாமலும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆற்றிய பணிகள் இன்றியமையாதவை.
அதிகாரப் பரவல்... மிக அவசியம்!
இந்த ஆய்வின் மூலம் ஊராட்சிகளுக்கு அதிகாரப் பரவல் மிக அவசியம் என்பது நிரூபணமாகிறது. ஒன்றிய அரசாங்கத் திடமிருந்து மாநில அரசாங்கத்துக்கும், மாநில அரசாங்கத் திலிருந்து உள்ளாட்சிகளுக்கும் அதிகாரப் பரவலே பங்கேற்பு ஜனநாயகம். முந்தைய ஆட்சியில் மாநில அரசாங்கம் சரியான முறையில் அதிகாரப் பரவல் செய்திருந்தால் ஊராட்சிகள் இந்தக் கொரோனா பேரிடரை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கும்.
இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஒரு பேரிடர் காலத்தில் ஊராட்சிகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொரோனா இரண்டாவது அலை முடிந்தவுடன் உடனடியாக மீதமுள்ள மாவட்டங்களுக்கு இந்தப் புதிய மாநில அரசாங்கம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த வேண்டிய கடமையுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உரிய அதிகாரமும், நிதிப் பற்றாக்குறை இல்லாமல் வலுவான நிதி கட்டமைப்பும் ஒவ்வோர் ஊராட்சிக்கும் கிடைக்குமானால் வளமான உள்ளாட்சி அரசாங்கம் தமிழ்நாட்டில் உருவாகும். அந்த அரசாங்கதுக்கு எந்த ஒரு பேரிடர் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் திறன் இருக்கும்.
- குருசரவணன்
source https://www.vikatan.com/news/tamilnadu/why-strong-local-bodies-needed-to-tackle-pandemic-a-research-tells-the-answer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக