சச்சினின் ஸ்ட்ரெய்ட் டிரைவ், அசாருதினின் ஃப்ளிக், கங்குலியின் கவர் டிரைவ், டிராவிட்டின் பேக் ஃபுட் பன்ச், ஷேவாக்கின் ஸ்கொயர் கட் என ஒவ்வொரு இந்தியக் கிரிக்கெட் ரசிகனின் வீட்டுத் தொலைக்காட்சியின் வாயிலாக நுழைந்தது, அவர்கள் ஆடிய ஷாட்கள் மட்டுமல்ல... அவர்கள் பயன்படுத்திய பேட்களின் ஸ்டிக்கர்களும்தான்!
எம்ஆர்எஃப், பிரிட்டானியா, கிங் ஃபிஷர், வில்ஸ், ஹீரோ ஹோண்டா - 90களில் இவையெல்லாம், இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் பேட்களின் ஸ்டிக்கர்களாக மட்டும் அலங்கரிக்கவில்லை, ஒவ்வொரு இந்திய ரசிகனின் நினைவுச் சின்னமாகவே இருந்தன.
எம்ஆர்எஃப், பிரிட்டானியா ஆகியவை எல்லாம் ஸ்பான்சர் ஸ்டிக்கர்கள் என்று அறியாமல், உண்மையிலேயே, அவர்கள்தான் கிரிக்கெட் பேட்டையே தயாரிக்கிறார்கள் என்று நம்பிய பல சிறுவர்கள் இங்கே உண்டு. அவர்கள் அந்த நம்பிக்கையில், கடையில் அதே ஸ்டிக்கர் ஒட்டிய பேட்களை வாங்கிய கதைகளும் பல உண்டு.
இந்தியாவில் ஆரம்பித்த இந்த பேட் ஸ்பான்சர் ஸ்டிக்கர் கலாசாரம், நாளடைவில், மெல்ல மெல்ல விரிவடைந்து, மற்ற நாடுகளையும் ஆக்கிரமித்து, இன்று பெரிய வியாபார யுக்தியாக நிறுவனங்களிடையே போட்டா போட்டியையும் உண்டாக்கிவிட்டது. சரி, எங்கே ஆரம்பித்தது இந்த பேட் ஸ்பான்சர் ஸ்டிக்கர் கலாசாரம், அது எப்படி ஒவ்வொரு ரசிகனின் வீட்டுக்குள் நுழைந்து, பெரிய மார்க்கெட்டிங் வியூகம் ஆனது?
1980-களின் முற்பாதி வரை, ரஞ்சி தொடர்களில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களை, பேட்களை உருவாக்கும் எஸ்ஜி, பிடிஎம் முதலிய கம்பெனிகள் அணுகி, அவர்களுக்குத் தேவையான பேட்களை, தேவையான வகையில் வடிவமைத்துக் கொடுக்கும். அதற்கு பலனாக அவ்வீரர்கள், அந்த பேட் நிறுவனத்துடைய ஸ்டிக்கர் ஒட்டிய பேட்களை வைத்து ஆட வேண்டும். இதுதான் தொன்றுதொட்டு மரபாக இருந்துவந்தது. எல்லாம் இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் வரைதான்.
1983-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள், பெரும் புகழடைய, அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதிய வணிக நிறுவனங்கள், வீரர்களை, தங்கள் நிறுவன விளம்பரத்துக்கு நடித்துத்தருமாறு அணுகின. அதில் அடுத்தக்கட்ட முன்னேற்றம்தான், பேட்டில், வீரர்களை, தங்கள் நிறுவனத்தின் பெயர் பொருந்திய லோகோவை ஒட்டி விளையாட வைப்பது. அதை உலகக் கோப்பையை வென்ற கேப்டன் கபில்தேவை வைத்து, பவர் நிறுவனம் தொடங்கியது. கபில்தேவ் தன்னுடைய பேட்டில் 'Power' லோகோவை ஒட்டி, விளையாடத் தொடங்கினார்.
கபில்தேவை வைத்து ஆரம்பித்த இந்த சிறு வியாபார யுக்திதான், பின்னாளில் சச்சின் டெண்டுல்கர் எனும் கிரிக்கெட் கடவுளால் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து, இந்தியர்கள் அனைவருக்கும், எம்ஆர்எஃப் ஸ்டிக்கர் மீது தீராக் காதலைப் பிறக்கச் செய்தது. எம்ஆர்எஃப் பேட்டை சதமடித்த பின் சச்சின் தூக்கிக்காட்டுவதைப் பார்ப்பதற்காக, ஒருநாள் போட்டிகளில் 100 ஓவர்களையும் நாம் பொறுமையாகப் பார்த்த காலகட்டங்களும் உண்டு.
சச்சின் பேட் அனைவரின் தனி கவனத்தையும் பெற, பிற நிறுவனங்கள், மற்ற வீரர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதில், போட்டி போட்டு இறங்கின. அசாருதீனை ரீபோக்கும், டிராவிட்டை வில்ஸும் , நயன் மோங்கியாவை ஃபோர் ஸ்கொயரும், கங்குலி மற்றும் அஜய் ஜடேஜாவை கிங் ஃபிஷர் நிறுவனங்களும், தங்கள் பக்கம் இழுத்தன. தொடர்ந்து, பெரிய நிறுவனங்கள், பெரிய கிரிக்கெட் வீரர்களை தங்கள் பக்கம் சாய்க்கத் தொடங்கின. அதில் முக்கியப் பங்காற்றியது, பிரிட்டானியா மற்றும் ஹீரோ ஹோண்டா. டிராவிட் மற்றும் கங்குலியை பிரிட்டானியா நிறுவனம், தங்களின் ஸ்டிக்கரை ஒட்டி ஆட வைக்க, அவை மிகவும் பிரபலமாயின. கங்குலியை, அதைத் தொடர்ந்து, ஹீரோ ஹோண்டா ஒப்பந்தம் செய்ய, அது அவரின் ஃபேவரிட் ஸ்டிக்கர் ஆனது.
சச்சினுக்கு எப்படி எம்ஆர்எஃப் அமைந்ததோ, அதே அளவுக்கு, டிராவிட்டின் 'பிரிட்டானியா' ஸ்டிக்கர் ஒட்டிய பேட், மிகவும் பிரபலம். அதை அவர், பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தினார், கங்குலியும் 'ஹீரோ ஹோண்டா' ஸ்டிக்கர் ஒட்டி விளையாடிய காலத்தில், பல சதங்களை வாரிக் குவித்தார். இந்தியாவின் மூன்று தூண்களுக்கும் ஆஸ்தான முகமாகவே மாறிப்போயின, இந்த பேட்களின் ஸ்டிக்கர்கள்.
இவர்களைத் தொடர்ந்து, அடுத்து இந்திய அணிக்குள் வந்த ஷேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப் என பல வீரர்களை, ஹீரோ ஹோண்டா, ரீபோக் போன்ற நிறுவனங்கள், தங்களின் லோகோவைப் பயன்படுத்தி ஆட வைத்தன.
எஸ்எஃப், பிஏஎஸ், எஸ்ஜி, எஸ்எஸ் - இவையெல்லாம் இந்தியாவின் தலைசிறந்த பேட் வடிவமைக்கும் நிறுவனங்கள், ஆனால் ஒரு காலகட்டத்தில், இவற்றையெல்லாம் மறந்துபோய், வீரர்களின் பேட்டிலுள்ள, நிறுவனங்களின் விளம்பரப் பெயர்கள் மட்டுமே மக்கள் மனதில் தேங்கிநிற்க ஆரம்பித்துவிட்டன.வீரர்களுக்கு எது தேவையோ, அதற்கேற்றாற் போன்ற கஸ்டமைஸ்டு பேட்களை வடிவமைத்துத் தரும் வடிவமைப்பாளர்களுக்கான அங்கீகாரம் நாளடைவில் காணாமலே போய்விட்டது.
ஒருபக்கம் மேலும் மேலும் லாபம் கொழிக்கும் வணிகமாக இதுமாற, தங்களது அடையாளத்துக்காக பேட் வடிவமைப்பாளர்கள் ஏங்கித் தவிக்கும் நிலைதான் நீடித்தது. சச்சின், டிராவிட் , கங்குலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு, கோடிகளில் கொட்டி ஸ்பான்சர் செய்ய, இந்த பேட் தயாரிப்பாளர்களால் முடியவில்லை.
"இந்த ஸ்பான்சர்கள் மூலமாக வீரர்களும் லாபமடைகிறார்கள், ஒப்பந்த விளம்பர நிறுவனங்களும் பயன்பெறுகிறார்கள், ஆனால், எங்களுக்கு எந்த பயனும் இல்லை, சிறிய விளம்பரம் கூட இல்லை!'’ என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில், பேட்களை எம்ஆர்எஃப் போன்ற நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி, அதில் வடிவமைப்பாளர்களின் ஸ்டிக்கர்களுக்கு பதில், தங்களது ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டனர். பணம் கொடுத்து வாங்கியதால், அது எங்களுடையதாகி விடுகிறது. எனவே அதில் எங்களது ஸ்டிக்கர்களையும் லோகோக்களையும் போட்டு விளம்பரப்படுத்திக் கொள்ள, எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்பதுதான் இந்தப் பெரிய நிறுவனங்களின் நிலைப்பாடு.
இந்திய வீரர்களை மட்டுமே குறிவைத்து நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த வியாபாரம், நாளடைவில் வெளிநாட்டு வீரர்களை நோக்கியும் திரும்பியது. எம்ஆர்எஃப் நிறுவனம், தங்கள் லோகோவை ஒட்டி விளையாட, ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் வாக்கையும், சச்சினின் சமகால போட்டியாளரான வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாராவையும் ஒப்பந்தம் செய்தது.
இப்போது அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் பேட் ஸ்டிக்கர் வணிகம், இன்று வியாபாரத்தின் உச்சத்தைத் தொட்டுள்ளது. உலக கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் விராட் கோலிக்கு, வருடத்திற்கு 12.5 கோடி என 8 வருடங்களுக்கு, 100 கோடிக்கு மொத்தமாக ஒப்பந்தம் செய்துள்ளது எம்ஆர்எஃப். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ஸ்பார்டன், 6 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ரோஹித் ஷர்மாவை, CEAT நிறுவனம் 3 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இன்று விளம்பர லோகோ, இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கான அடையாளமாகவே மாறிவிட்டது. 2018-ல் ஆஸ்திரேலியத் தொடரில், மாயங்க் அகர்வாலும், இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற போட்டியின்போது ஷுப்மான் கில்லும், பேட்டில் ஸ்பான்சர்ஷிப் ஸ்டிக்கர்கள் இல்லாமல் ஆட, வர்ணனையாளர்களிடத்தில் அது, பெரும் பேசு பொருளானது. அந்தளவு, முக்கியத்துவம் மிகுந்ததாக மாறி விட்டன, ஸ்டிக்கர்களும் லோகோக்களும்.
ஹிப்போகேம்பஸ்... இதுதான் நமது நீண்டகால நினைவுகள் மூளையில் சேகரிக்கப்படும் பகுதி. 'லாக் அண்ட் கீ' வெப் சீரிஸில் வருவதைப் போல், இதனுள்ளே போய் ஆராய முடியுமானால், ஒவ்வொரு இந்தியக் கிரிக்கெட் ரசிகனின் நினைவு அடுக்குகளிலும், இந்த ஸ்டிக்கர்கள், வண்ணமயமாகக் காட்சியளிக்கும் என்பதே உண்மை! ஒவ்வொரு ஸ்டிக்கரும், ஒவ்வொரு ஞாபகங்கள், நமது கிரிக்கெட் ஆட்டோகிராஃபின் பக்கங்கள்.
source https://sports.vikatan.com/cricket/sachin-bat-to-kohli-bat-how-sticker-trend-started
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக