Ad

புதன், 12 மே, 2021

``எப்போதுமே நம்பர் டூ தானா?” - பன்னீர் கோட்டைவிட்ட தருணங்கள்!

எதிர்கட்சித் தலைவர் பஞ்சாயத்திற்கு ஒருவழியாக முடிவுரை எழுதப்பட்டு, அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் ஏகமனதாக எடப்பாடி பழனிசாமியை அப்பொறுப்பிற்கு தேர்ந்தெடுத்துள்ளனர். பழனிசாமியை தேர்ந்தெடுத்ததற்கான அறிக்கையில் கையெழுத்திட்ட கையோடு, கோபமாக தலைமைக் கழகத்திலிருந்து வெளியேறிய பன்னீர்செல்வம், தடாலடியாக ஏதாவது செய்வார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மே 12-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் பூங்கொத்துடன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் பன்னீர். இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத பன்னீரின் ஆதரவாளர்கள், “கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் கோட்டைவிட்டு, கடைசிவரை நம்பர் 2-வாக மட்டுமே இருக்கும் முடிவுக்கு பன்னீர் வந்துவிட்டாரா?” என்கிற கேள்வியை கேட்கிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியிருந்தும், ‘கட்சிக்குள் ஏன் சறுக்கினார் பன்னீர்?’ என்பது அ.தி.மு.க-வில் அனலைக் கிளப்பும் கேள்வியாக மாறியிருக்கிறது.

பன்னீர் செல்வம்

பன்னீருக்கு நெருக்கமான அ.தி.மு.க-வின் மிக மூத்த வடமாவட்ட நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “முதல் கோணல் முற்றும் கோணல் என்றொரு பழமொழி உண்டு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பன்னீர் எடுத்த முடிவுகள் ஆரம்பத்திலேயே கோணலாகிவிட்டதால், பிற்காலத்தில் அவர் எடுத்த முடிவுகளும் அவ்வாறே அமைந்துவிட்டன. ஜெ. மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்ற பன்னீர், வர்தா புயல் பாதிப்புகளைத் திறம்படக் கையாண்டார். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பாக, அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பயனாக, சென்னைக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் கிடைத்தது. எல்லாம் சுமூகமாக சென்றுகொண்டிருந்த வேளையில்தான், சசிகலா தரப்பிலிருந்து பன்னீருக்கு நெருக்கடிகள் அதிகமாகின. போயஸ் தோட்டத்திற்கு அழைக்கப்பட்ட முதல்வர் பன்னீரை, சசியின் உறவுகள் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினர். என்னதான் மிரட்டல், அழுத்தம் இருந்தாலும் தன் பதவியை பன்னீர் ராஜினாமா செய்திருக்கக் கூடாது. நேராக அம்மா சமாதியில் வந்தமர்ந்து, முதல்வராக தர்மயுத்தத்தைப் பன்னீர் தொடங்கியிருந்தால், காட்சிகள் மாறியிருக்கும். அன்று மத்திய அரசு அவருக்குச் சாதகமாகத்தான் இருந்தது. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், அதையெல்லாம் பன்னீர் கோட்டைவிட்டதுதான் அவருக்கு முதல் கோணலாகிவிட்டது.

Also Read: ``மனுசங்க எப்படி இருக்காங்க பாருங்க” - புலம்பிய எடப்பாடி... தேற்றிய பன்னீர்!

ஆகஸ்ட் 2017-ல் அ.தி.மு.க-வின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தபோது, துணை முதல்வர் பதவியை பன்னீர் ஏற்றது பெரிய தவறு. அன்று, அவர்மீது தொண்டர்களிடமும் மக்களிடமும் பெரிய அனுதாபம் இருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருந்து கட்சியைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அவர் வாரிசுகள் கொடுத்த அழுத்தத்தால், இரண்டாவது கோணலை இங்குப் போட்டுவிட்டார் பன்னீர். கட்சிக்குத் தலைவராக இருந்தாலும், ஆட்சியில் எடப்பாடிக்கு கீழ்நிலையில் இருப்பவர்தான் என்பதால், அதே மனநிலை கட்சிக்குள்ளும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. இதை பன்னீர் உணரவேயில்லை. தனக்கு விசுவாசமாக இருந்த நிர்வாகிகளையெல்லாம், எடப்பாடி பழனிசாமி தன் கைக்குள் எடுத்ததை பன்னீரால் தடுக்கவும் முடியவில்லை. அவரை நம்பியிருந்தவர்கள் பெரும்பாலும் தனிமரமானதுதான் மிச்சம். விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்துடன் போட்டிபோட்டு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்காததால், தி.மு.க-வுக்குச் சென்ற பன்னீரின் ஆதரவாளர் லட்சுமணன் இதற்கு ஒரு உதாரணம்” என்றார்.

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

கழகத்தின் மூத்த தலைவரும், தென்மாவட்ட தொகுதி ஒன்றின் எம்.எல்.ஏ-வுமான ஒருவர் நம்மிடம் பேசுகையில், “முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து உச்சத்திலிருந்தபோது, எடப்பாடி பழனிசாமிக்கு அந்த அந்தஸ்த்தை பன்னீர் விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அப்போதே, எதிர்காலத்தில் கழகம் தோல்வியுற நேர்ந்தால் எதிர்கட்சித் தலைவர் பொறுப்பைத் தனக்குத் தரவேண்டும், அல்லது கட்சியின் ஒற்றைத் தலைமையாக தன்னை அறிவிக்க வேண்டுமென பன்னீர் உறுதியைப் பெற்றிருக்க வேண்டும். அந்த டீலுக்கு பழனிசாமியை பன்னீர் ஒத்துக் கொள்ள வைத்திருந்தால், இன்று அவர் நிற்கதியாகியிருக்க மாட்டார். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தை அவர் முன்னெடுத்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், கட்சித் தொண்டர்களிடமும் வாக்காளர்களிடமும் பன்னீர் மீதான ‘சாப்ட் கார்னர்’ அதிகரித்திருக்கும். ஆனால், பிரசாரத்தை தாமதமாகத் தொடங்கி, தன் தொகுதிக்குள்ளேயே தன்னை முடக்கிக் கொண்டதால், ‘நான் தானே 20,000 கி.மீ சுற்றுப் பயணம் செய்து கட்சியை ஜெயிக்க வைத்தேன்’ என்று எடப்பாடி பழனிசாமி எழுப்பும் கேள்விக்கு பன்னீரால் பதில் சொல்ல முடியவில்லை.

Also Read: ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக டபுள் கேம் ஆடிய இனிஷியல் பிரமுகர் - எதிர்க்கட்சித் தலைவர் விவகார உள்குத்து!

கட்சிக்குள் பஞ்சாயத்து நிகழும் பொழுதெல்லாம் தனக்கு ஆதரவாக ஏதாவது ஒரு காரியத்தை முடித்துக் கொள்வது பன்னீரின் வழக்கம். ஆனால், இம்முறை பன்னீரால் எதையும் சாதித்துக் கொள்ள முடியவில்லை. அவரை யாரும் சட்டை செய்யவில்லை என்பதே நிதர்சனம். ‘எடப்பாடிக்கு 61 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது, கையெழுத்துப் போடுங்கள்’ என்று அழுத்தம் கொடுத்துத்தானே பன்னீரிடம் கையெழுத்துப் பெற்றிருக்கிறார்கள். ‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுத்தனர்’ என்று அழுத்தத்தைக் காரணம் காட்டித்தான் சசிக்கு எதிராக தர்மயுத்தத்தில் பன்னீர் இறங்கினார். ஆனால், இப்போது அவரால் எந்த யுத்தத்தையும் ஆரம்பிக்க முடியவில்லை.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபமாக கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். இன்றுவரையில் அதை யாரும் சீரியஸாக அணுகக்கூட இல்லை. இவ்வளவுதான் பன்னீருக்கு கட்சிக்குள் மரியாதை என்பது வேதனையைத் தருகிறது. பன்னீரின் இந்த சறுக்கல் அவராகவே தேடிக் கொண்டதுதான். தன்னுடைய சுயலாபத்துக்காக தனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்ட பன்னீர், மீண்டும் தனக்கான அங்கீகாரத்தை தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் பெறமுடியுமா என்பது சந்தேகம்தான்” என்றார்.

பழனிசாமிக்கு வாழ்த்து கூறிய பன்னீர்செல்வம்

Also Read: ”அவர் சொந்தக் காசையா தந்தாரு?” - ஆத்திரப்பட்ட பன்னீர்; கட்டுப்படாத எடப்பாடி!

தனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டதால், சறுக்கி விழுந்திருக்கிறார் பன்னீர். அவர் கோபத்தைக் கூட காதுகொடுத்து கேட்பாரில்லை. வேறுவழியில்லாமல், மே 12-ம் தேதி பிறந்தநாள் வாழ்த்து கூற பூங்கொத்துடன் பழனிசாமியின் வீட்டிற்குச் செல்லும் அளவுக்கு பன்னீரின் நிலைமை மாறியிருக்கிறது. “சசிகலாவுக்கு எதிராக உடனடியாக ஒன்றும் பன்னீர் வெடித்துவிடவில்லையே. தனக்கான நேரம் வந்தபிறகுதான் தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். அதுபோல, தனக்கான நேரம் வந்தப்பிறகு எடப்பாடிக்கு எதிராக பன்னீர் காய் நகர்த்துவார்” என்று நம்மிடம் நம்பிக்கையைப் பகிர்கிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள். சறுக்கி விழுந்தவர் எழுவாரா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.



source https://www.vikatan.com/news/politics/why-o-panneerselvam-growth-fall-in-aiadmk-party

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக