Ad

புதன், 12 மே, 2021

கொரோனா நிதியாக ரூ.33,000 வழங்கிய மாணவர் : ''முதல் சைக்கிள், லேப்டாப் கொடுத்தது இந்த சமூகம்தான்!''

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டிருக்கிறது; மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனாவின் கோரத் தாண்டவம் பற்றிய செய்திகள் ஒவ்வொரு நாளும் நம்மை நிலைகுலையச் செய்தாலும், இந்தக் கொடிய நெருக்கடியிலிருந்து விரைவில் மீண்டுவிடுவோம் என்று உணர்த்தும் விதமான செயல்பாடுகள் எளிய மனிதர்களிடமிருந்து அன்றாடம் வெளிப்படுகின்றன.

Also Read: 'வட சென்னையில் ஆக்ஸிஜன் ஆட்டோ' - மக்களின் உயிர்காக்கும் தன்னார்வலர்!

தன்னார்வ அமைப்புகள் தொடங்கி, தனிநபர்கள் வரை தங்களால் இயன்றதைப் பணமாகவும், பொருளாகவும் அளித்து நம் மனதில் நம்பிக்கையை விதைக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான் கவிஞரும், ஆய்வாளருமான றாம் சந்தோஷின் அத்தகைய ஒரு செயல்பாடு மக்களின் அந்த நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

றாம் சந்தோஷ்

ஆந்திரப் பிரதேசத்தின் குப்பம் நகரில் அமைந்திருக்கும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவரான றாம் சந்தோஷ் ஒரு கவிஞரும்கூட; தற்போது ஆராய்ச்சிப் படிப்பின் ஐந்தாம் ஆண்டில் இருக்கும் றாம் சந்தோஷுக்கு, நிலுவையிலிருந்த ஆராய்ச்சி உதவித் தொகையின் ஒரு பகுதியான ரூபாய் 33,480 நேற்று அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது.

உதவித் தொகை வந்திருப்பதை இரவு வெகுநேரம் கழித்தே பார்த்த றாம், உடனடியாக அத்தொகை முழுவதையும் முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு அனுப்பிவிட்டார். இந்தத் தகவலைத் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்த றாம் சந்தோஷுக்குப் பாராட்டுகளும், நன்றிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.

தன்னுடைய உதவித் தொகை முழுவதையும் நிவாரணத்துக்கு வழங்க அவரை உந்தியது எது? றாம் சந்தோஷிடம் பேசினேன்.

“என்னுடைய இயற்பெயர் சண்முக விமல் குமார். வாணியம்பாடி அருகேயுள்ள உதயேந்திரம் கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். கழிப்பறை இல்லாத, இப்போது அரசுப் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஒரு வீட்டில் தான் நான் வளர்ந்தேன்” என்று இயல்பாகப் பேசத் தொடங்கும் றாம் சந்தோஷுக்கு தன்னுடைய வாழ்க்கைச்சூழல் குறித்த எந்தப் புகாரும் கிடையாது. அடிப்படையில் தச்சரான இவரது தந்தை சர்க்கரை நோய்ப் பாதிப்பினால் தச்சுத் தொழிலைத் தொடர முடியாமல், வீட்டுக்கு அருகே பெட்டிக் கடை ஒன்றை இப்போது நடத்திவருகிறார்.

பள்ளிக் கல்வி முடித்த றாம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இளநிலை வேதியியல் சேர்ந்திருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு கட்டத்தில் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படவே, பேராசிரியர்களின் உதவியோடு கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்.

“இளநிலை இறுதியாண்டு தொடங்கி இன்றுவரை உதவித் தொகை மூலமாகவும், பேராசிரியர்கள் உதவியுடன் தான் கல்வியைத் தொடர்ந்துவருகிறேன். அந்த உதவிகள் இல்லாமல், நான் ஒரு முதல் தலைமுறை பட்டதாரி ஆகியிருக்க முடியாது; இப்போது முதல் தலைமுறை முனைவராகவும் பரிணமித்திருக்க முடியாது” எனும் றாம் வார்த்தைகளில் நன்றியும் நம்பிக்கையும் மிளிர்கின்றன.
தன்னுடைய அறையில் றாம் சந்தோஷ்

''இளநிலை வேதியியல் படித்துவிட்டு, முதுகலையில் தமிழ்ப் படிக்க நேர்ந்தது எப்படி?'' என்று கேட்டேன்.

“பேராசிரியர்களின் உதவியோடு இளநிலை வேதியியல் முடித்துவிட்டேன். மேற்கொண்டு படிக்க பொருளாதார நிலை இடங்கொடுக்கவில்லை. அப்போதுதான் ஆந்திராவில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவித் தொகையோடு தமிழ் முதுகலைப் படிப்பு இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை அறிந்தேன். இயல்பிலேயே தமிழ் மீது ஆர்வம் இருந்ததாலும், அப்போது கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்ததாலும் யோசிக்காமல் இதில் சேர்ந்துவிட்டேன்.”

முதுகலைப் படிப்பின் இறுதியாண்டில் உதவித் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், சான்றிதழ்களைப் பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவர் மத்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்படிப்பு சேரும் வாய்ப்பு நழுவிப் போனது. அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் மொழியியல் ஆய்வுத் திட்டம் ஒன்றில் உதவியாளராகத் தற்காலிகமாகப் பணியாற்றியிருக்கிறார்.

திராவிடப் பல்கலைக்கழகம்

இலக்கியம் சார்ந்து கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என றாம் சந்தோஷ் இயங்கிக் கொண்டிருக்கிறார்; ‘சொல்வெளித் தவளைகள்’ என்கிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ஆத்மாநாம் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இரண்டாவது கவிதைத் தொகுப்பு உள்ளிட்ட ஆறு நூல்களுக்கான பணியில் றாம் ஈடுபட்டுள்ளார்.

சொல்வெளித் தவளைகள்

“என்னுடைய முதல் சைக்கிள், முதல் லேப்டாப் எல்லாம் இந்தச் சமூகம் வழங்கியதுதான். சமூகம் எனக்குச் செய்ததில் ஒரு சிறு பங்கினை இப்போது நான் திருப்பிச் செய்கிறேன். அவ்வளவுதான்! நம்மைப் பார்த்து வளரும் அடுத்த தலைமுறையினர் இதைத் தொடர்வார்கள்” என்கிறார் நன்றியும் நம்பிக்கையும் மேலிட!

“இலவசங்கள் தவறானவை என்ற பார்வை இப்போது பரவலாக இருக்கிறது. ஆனால், இலவசங்கள் இல்லையென்றால் எங்களைப் போன்றவர்கள் படித்திருக்க முடியாது. முதல் தலைமுறை பட்டதாரியாக நான் உருவாகியிருக்கிறேன், முதல் தலைவர் முனைவராக நான் பரிணமித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அரசுதான். பொருளாதார அடிப்படையில் நான் இந்தச் சமூகத்தால் வளர்க்கப்பட்டேன், என்னுடைய குடும்பத்தால் அல்ல. ஒரு தலைமுறை கல்வி கற்று மேலே வருவதைவிட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை!”

இறுதியாக, “இலவசம், உதவித் தொகை போன்றவை சின்ன விஷயம் என்று எந்தக் காலத்திலும் புறக்கணித்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய கோரிக்கை” என்று பேச்சை நிறைவு செய்தார் றாம் சந்தோஷ்!



source https://www.vikatan.com/news/general-news/tamil-poet-and-phd-student-donates-33-thousand-for-corona-relief-fund

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக